Tamilnadu
“தவறு செய்தவர்கள் எந்த அமைப்பினர் என்றாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” : அதிரடி காட்டிய அன்பில் மகேஸ்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அந்த பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியதோடு, அங்கிருந்த பென்ச், சேர் உள்ளிட்ட பொருட்களையும் சூறையாடினர். இதனால் அந்த போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும் பள்ளி வாகனத்திற்கு தீ வைத்ததோடு காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சித்தனர்.
இதையடுத்து இந்த வன்முறையை கட்டுப்படுத்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து டி.ஜி.பி சைலேந்திர பாபு, உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டி ஆகியோர் வன்முறை நடந்த இடங்களை பார்வையிட்டனர். பின்னர், தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளரும் கைது செய்யப்பட்டதோடு, இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் டி.ஜி.பி தெரிவித்திருந்தார். அதோடு இந்த வன்முறையில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல், தனியார் பள்ளிகள் விடுமுறை அளிக்க முடியாது.
கள்ளக்குறிச்சி சம்பவத்தை பொறுத்தவரையில், தவறு யார் செய்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஏற்கனவே கூறியுள்ளார். மாணவர்கள் தற்கொலை தொடர்பாக அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.
பள்ளியை சீரமைக்க குறைந்தது 2 மாதங்கள் ஆகும் என்பதால், மாணவர்களின் படிப்பு கெடாமல் இருக்க அவர்களை அருகில் இருக்கும் அரசுப்பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோர்களுக்கு நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம்.
மாணவியின் தற்கொலை விவகாரத்தில் தயவு செய்து அரசியல் வேண்டாம். இந்த பள்ளியின் முதல்வர் எந்த அமைப்பினரை சேர்ந்தவர் ஆனாலும் சரி, நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தவறு யார் செய்திருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை இந்த அரசு மேற்கொள்ளும்" என்று தெரிவித்தார்.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!