Tamilnadu
‘தமிழ்நாடு வாழ்க’ முழங்கிய அவை.. பேரறிஞர் அண்ணா சம்பவத்தை நினைவூட்டிய முதலமைச்சர் செயல் !
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (18.7.2022) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு திருநாள் விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை பின்வருமாறு :- “ஜூலை 18 என்ற மதிப்புமிக்க நாளில் இத்தகைய சிறப்பான விழாவை ஏற்பாடு செய்திருக்கக்கூடிய அரசுத் துறைகளை நான் மனதாரப் பாராட்டுகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையிலும் எனது தனிப்பட்ட முறையிலும், பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எத்தனையோ விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்தாலும், தமிழ்நாடு திருநாள் என்ற நிகழ்ச்சிக்கு இணையானது எதுவுமில்லை. ஏனென்றால், ‘தமிழ்நாடு நாள்’, ‘தமிழ்நாடு திருநாள்’ என்று சொல்லும்போதே நமது உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதனைச் சொல்லும்போதே ஒரு ஆற்றல் பிறக்கிறது.
என்னுடைய ஒரே வருத்தம் என்பது, கலைவாணர் அரங்கிற்கே நேரடியாக வந்து கலந்துகொள்ள இயலவில்லையே என்பதுதான்! கொரோனா என்ற தொற்றால் பாதிக்கப்பட்டு, இரண்டு மூன்று நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான், இன்று காலையில்தான் இல்லம் திரும்பினேன்.
தொற்று என்பது முழுமையாக நீங்கிவிட்டது என்றாலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்து வருகிறேன். சாதாரணமான காய்ச்சலாக இருக்குமானால், அது குணமடைந்ததும் நம்முடைய பணிகளைத் தொடங்கி விடலாம். கொரோனா தொற்று என்பதால், அது மற்றவர்களுக்கும் பரவாமல் இருப்பதற்காக, நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தொற்று நீங்கிவிட்டாலும், சில நாட்களாவது ஓய்வெடுக்க வேண்டும். அந்த அடிப்படையில், நேரடியாக வந்து விழாவில் பங்கேற்பது இயலாத ஒன்று ஆகிவிட்டது.
மற்ற நிகழ்ச்சிகளை ஒத்தி வைப்பது, தள்ளி வைப்பது போல, தமிழ்நாடு திருநாளை தள்ளி வைக்க இயலாது என்பதால், காணொலி மூலமாகவாவது பேசி விடுவது என்று நான் முடிவெடுத்தேன்.
தமிழ்நாடு நாளில் பேசுவது என்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை!
காணொலி மூலமாகப் பேசுவதன் மூலமாக, உடல்சோர்வு நீங்கிவிட்டதாகவே நான் உணர்கிறேன்.
“தமிழ்நாடு வாழ்க!
தமிழ்நாடு வாழ்க!
தமிழ்நாடு வாழ்க!"
என்று பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள், 1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் நாள், தமிழ்நாடு சட்டமன்றத்தில் முழங்கிய முழக்கத்தை, மீண்டும் ஒரு முறை முழங்குவதன் மூலமாக, என் உள்ளத்தில் மலர்ச்சி ஏற்படுகிறது.
செந்தமிழ் நாடென்னும் போதினிலே -
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே -
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே -
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே -
என்று பாடினார் மகாகவி பாரதியார். அத்தகைய உணர்ச்சியை நாம் இன்று பெறுகிறோம். இத்தகைய உணர்ச்சியை ஊட்டும் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டிய சாதனையானது, சாதாரணமாக நடந்து விடவில்லை.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலத்துக்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கே நாம் பல பத்தாண்டுகளாகப் போராட வேண்டி வந்தது, வாதாட வேண்டி இருந்தது, பேச வேண்டி இருந்தது, எழுத வேண்டி இருந்தது, உயிரைத் தர வேண்டி இருந்தது, ரத்தம் சிந்த வேண்டி வந்தது, மாநிலங்களவையில் குரல் எழுப்ப வேண்டி வந்தது, சட்டமன்றத்தில் தொடர்ந்து கேட்க வேண்டி வந்தது, தீர்மானங்களைக் கொண்டு வர வேண்டி வந்தது. அத்தனைக்குப் பிறகும் 'தமிழ்நாடு' என்று சொல்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை.
இறுதியாக, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்த காரணத்தால்தான், தாய்த் தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.
காஞ்சி தந்த வள்ளுவன் பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்ததால்தான் தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.
"தமிழாய்ந்த தமிழ்மகன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆதல் வேண்டும்" என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் குறிப்பிட்டாரே…!
அத்தகைய தலைமகனான பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில், நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் போன்றவர்கள் அமைச்சர்களாக வந்ததால்தான், இந்தத் தாய்த் தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கம் உருவாகாமல் போயிருந்தால், தமிழ்நாட்டில் இந்த இயக்கம் ஆட்சிக்கு வராமால் போயிருந்தால், இந்த மாநிலத்திற்கு இன்று வரையில் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்படாமலே இருந்திருக்கும் என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம்.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் போல இதுவும், ‘சென்னைப் பிரதேசம்’ என்று அடையாளமற்ற மாநிலமாகத்தான், இன்று வரை இருந்திருக்கும் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.
திராவிடம் என்ன கிழித்தது என்று வாய்கிழியப் பேசுபவர்கள் இதனை அறிய வேண்டும்.
தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதைவிட, வேறு சாதனை ஏதாவது தேவையா?
மூவாயிரம் ஆண்டு பழமை கொண்ட தமிழ்மொழிக்குச் செம்மொழி என்ற தகுதியைப் பெற்றுத் தந்தது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனை அல்லவா?
இதனைவிட வேறு சாதனை தேவையா? இத்தகைய சாதனைச் சரித்திரத்துக்குச் சொந்தக்காரர்கள் நாம்.
அதனால்தான், தமிழ்நாடு நாளைத் தமிழ்நாடு திருநாளாக நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் ஓர் இனம் உண்டென்றால் அது தமிழினம்தான்.
நம்முடைய இனம், ஒரு நிலத்தில் ஒரு நாட்டில் மட்டுமே வாழும் இனம் அல்ல, உலகளாவிய இனம். முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடுதான் தாய்வீடு!
இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடுதான் தாய்நாடு!
“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன் தோன்றிய மூத்த குடி - நம்முடைய தமிழ்க்குடி!"
அத்தகைய தமிழ்க்குடியின் தாய்மடி இந்தத் தமிழ்நாடுதான்!
தமிழ்நாட்டில், கி.மு.ஆறாம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பதை, கீழடி நமக்கு நிரூபித்துக் கொண்டு இருக்கிறது.
அதேபோல், சிவகளை முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகளின் காலம் கி.மு.1155 எனக் கண்டறியப்பட்டுள்ளது.
‘தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது.
இவை அனைத்தும் உலகப்புகழ்பெற்ற மானுடவியல் ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மைகள்.
“உலகில் முதலில் பிறந்த குரங்கு - தமிழ்க்குரங்குதான்" என்று
நம்மைச் சிலர் அந்தக் காலத்தில் கிண்டல் செய்வார்கள்.
அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை.
நாம் எதைச் சொன்னாலும் ஆய்வுப்பூர்வமாகத்தான் சொல்கிறோம். சிலர் போலக் கற்பனையாகச் சொல்லவில்லை. அத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட நமது தமிழினம் வாழ்ந்த நிலப்பரப்புக்கு, தமிழ்நாடு என்ற பெயர் இல்லை. அதற்காகவும் போராட வேண்டி இருந்தது என்பது அவமானம் அல்லவா? அந்த அவமானம் துடைக்கப்பட்ட நாள்தான், இந்த ஜூலை 18-ஆம் நாள்!
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (18.7.2022) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு திருநாள் விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை.
தமிழ்நாடு திருநாள் விழாவில் பங்கேற்று விருதுகளை வழங்கி சிறப்பிக்க இருக்கக்கூடிய நம்முடைய மூத்த அமைச்சர் மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் என்னுடைய ஆருயிர் அண்ணன் திரு. துரைமுருகன் அவர்களே!
மற்றும் தமிழகத்தின் அமைச்சர் பெருமக்களே!
இந்த விழாவிற்கு தலைமையேற்றுள்ள மாண்புமிகு தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாடு தொல்லியல் துறை அமைச்சர்
திரு. தங்கம் தென்னரசு அவர்களே!
முன்னிலை வகித்துக் கொண்டிருக்கக்கூடிய மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களே!
துவக்கத்தில் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்திருக்கக்கூடிய தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்களே!
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டு அளித்து விட்டு, இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களே!
கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்திருக்கக்கூடிய மாநிலத் திட்டக் குழுத் துணைத்தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்களே!
பல்வேறு தலைப்புகளில் உரையாற்றியுள்ள என்னுடைய மதிப்பிற்குரியவர்கள்-
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே!
ஆழி செந்தில்நாதன் அவர்களே!
வாலாசா வல்லவன் அவர்களே!
முனைவர் ம.ராசேந்திரன் அவர்களே!
சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் அவர்களே!
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் திரு. மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., அவர்களே!
செய்தித்துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்களே!
மேயர், துணை மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே!
ஊடகத் துறை, பத்திரிகையாளர் நண்பர்களே!
தமிழ் ஆர்வலர்களே!
உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்!
ஜூலை 18 என்ற மதிப்புமிக்க நாளில் இத்தகைய சிறப்பான விழாவை ஏற்பாடு செய்திருக்கக்கூடிய அரசுத் துறைகளை நான் மனதாரப் பாராட்டுகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையிலும் எனது தனிப்பட்ட முறையிலும், பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எத்தனையோ விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்தாலும், தமிழ்நாடு திருநாள் என்ற நிகழ்ச்சிக்கு இணையானது எதுவுமில்லை. ஏனென்றால், ‘தமிழ்நாடு நாள்’, ‘தமிழ்நாடு திருநாள்’ என்று சொல்லும்போதே நமது உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதனைச் சொல்லும்போதே ஒரு ஆற்றல் பிறக்கிறது.
என்னுடைய ஒரே வருத்தம் என்பது, கலைவாணர் அரங்கிற்கே நேரடியாக வந்து கலந்துகொள்ள இயலவில்லையே என்பதுதான்!
கொரோனா என்ற தொற்றால் பாதிக்கப்பட்டு, இரண்டு மூன்று நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான், இன்று காலையில்தான் இல்லம் திரும்பினேன்.
தொற்று என்பது முழுமையாக நீங்கிவிட்டது என்றாலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்து வருகிறேன். சாதாரணமான காய்ச்சலாக இருக்குமானால், அது குணமடைந்ததும் நம்முடைய பணிகளைத் தொடங்கி விடலாம். கொரோனா தொற்று என்பதால், அது மற்றவர்களுக்கும் பரவாமல் இருப்பதற்காக, நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தொற்று நீங்கிவிட்டாலும், சில நாட்களாவது ஓய்வெடுக்க வேண்டும். அந்த அடிப்படையில், நேரடியாக வந்து விழாவில் பங்கேற்பது இயலாத ஒன்று ஆகிவிட்டது.
மற்ற நிகழ்ச்சிகளை ஒத்தி வைப்பது, தள்ளி வைப்பது போல, தமிழ்நாடு திருநாளை தள்ளி வைக்க இயலாது என்பதால், காணொலி மூலமாகவாவது பேசி விடுவது என்று நான் முடிவெடுத்தேன்.
தமிழ்நாடு நாளில் பேசுவது என்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை!
காணொலி மூலமாகப் பேசுவதன் மூலமாக, உடல்சோர்வு நீங்கிவிட்டதாகவே நான் உணர்கிறேன்.
“தமிழ்நாடு வாழ்க!
தமிழ்நாடு வாழ்க!
தமிழ்நாடு வாழ்க!"
என்று பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள், 1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் நாள், தமிழ்நாடு சட்டமன்றத்தில் முழங்கிய முழக்கத்தை, மீண்டும் ஒரு முறை முழங்குவதன் மூலமாக, என் உள்ளத்தில் மலர்ச்சி ஏற்படுகிறது.
செந்தமிழ் நாடென்னும் போதினிலே -
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே -
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே -
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே -
என்று பாடினார் மகாகவி பாரதியார். அத்தகைய உணர்ச்சியை நாம் இன்று பெறுகிறோம். இத்தகைய உணர்ச்சியை ஊட்டும் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டிய சாதனையானது, சாதாரணமாக நடந்து விடவில்லை.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலத்துக்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கே நாம் பல பத்தாண்டுகளாகப் போராட வேண்டி வந்தது, வாதாட வேண்டி இருந்தது, பேச வேண்டி இருந்தது, எழுத வேண்டி இருந்தது, உயிரைத் தர வேண்டி இருந்தது, ரத்தம் சிந்த வேண்டி வந்தது, மாநிலங்களவையில் குரல் எழுப்ப வேண்டி வந்தது, சட்டமன்றத்தில் தொடர்ந்து கேட்க வேண்டி வந்தது, தீர்மானங்களைக் கொண்டு வர வேண்டி வந்தது. அத்தனைக்குப் பிறகும் 'தமிழ்நாடு' என்று சொல்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை.
இறுதியாக, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்த காரணத்தால்தான், தாய்த் தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.
காஞ்சி தந்த வள்ளுவன் பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்ததால்தான் தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.
"தமிழாய்ந்த தமிழ்மகன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆதல் வேண்டும்" என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் குறிப்பிட்டாரே…!
அத்தகைய தலைமகனான பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில், நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் போன்றவர்கள் அமைச்சர்களாக வந்ததால்தான், இந்தத் தாய்த் தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கம் உருவாகாமல் போயிருந்தால், தமிழ்நாட்டில் இந்த இயக்கம் ஆட்சிக்கு வராமால் போயிருந்தால், இந்த மாநிலத்திற்கு இன்று வரையில் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்படாமலே இருந்திருக்கும் என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம்.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் போல இதுவும், ‘சென்னைப் பிரதேசம்’ என்று அடையாளமற்ற மாநிலமாகத்தான், இன்று வரை இருந்திருக்கும் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.
திராவிடம் என்ன கிழித்தது என்று வாய்கிழியப் பேசுபவர்கள் இதனை அறிய வேண்டும்.
தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதைவிட, வேறு சாதனை ஏதாவது தேவையா?
மூவாயிரம் ஆண்டு பழமை கொண்ட தமிழ்மொழிக்குச் செம்மொழி என்ற தகுதியைப் பெற்றுத் தந்தது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனை அல்லவா?
இதனைவிட வேறு சாதனை தேவையா? இத்தகைய சாதனைச் சரித்திரத்துக்குச் சொந்தக்காரர்கள் நாம்.
அதனால்தான், தமிழ்நாடு நாளைத் தமிழ்நாடு திருநாளாக நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் ஓர் இனம் உண்டென்றால் அது தமிழினம்தான்.
நம்முடைய இனம், ஒரு நிலத்தில் ஒரு நாட்டில் மட்டுமே வாழும் இனம் அல்ல, உலகளாவிய இனம். முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடுதான் தாய்வீடு!
இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடுதான் தாய்நாடு!
“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன் தோன்றிய மூத்த குடி - நம்முடைய தமிழ்க்குடி!"
அத்தகைய தமிழ்க்குடியின் தாய்மடி இந்தத் தமிழ்நாடுதான்!
தமிழ்நாட்டில், கி.மு.ஆறாம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பதை, கீழடி நமக்கு நிரூபித்துக் கொண்டு இருக்கிறது.
அதேபோல், சிவகளை முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகளின் காலம் கி.மு.1155 எனக் கண்டறியப்பட்டுள்ளது.
‘தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது.
இவை அனைத்தும் உலகப்புகழ்பெற்ற மானுடவியல் ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மைகள்.
“உலகில் முதலில் பிறந்த குரங்கு - தமிழ்க்குரங்குதான்" என்று நம்மைச் சிலர் அந்தக் காலத்தில் கிண்டல் செய்வார்கள். அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை.
நாம் எதைச் சொன்னாலும் ஆய்வுப்பூர்வமாகத்தான் சொல்கிறோம். சிலர் போலக் கற்பனையாகச் சொல்லவில்லை. அத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட நமது தமிழினம் வாழ்ந்த நிலப்பரப்புக்கு, தமிழ்நாடு என்ற பெயர் இல்லை. அதற்காகவும் போராட வேண்டி இருந்தது என்பது அவமானம் அல்லவா? அந்த அவமானம் துடைக்கப்பட்ட நாள்தான், இந்த ஜூலை 18-ஆம் நாள்!
அவமானம் துடைக்கப்பட்ட நாள் மட்டுமல்ல, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதன் மூலமாக, தாழ்ந்து கிடந்த தமிழினத்தை, தலைநிமிர வைத்த நாள்தான் இந்த ஜூலை 18-ஆம் நாள்!
“தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதால், என்ன லாபம்?" என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கேட்கப்பட்டபோது, நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள், “இழந்த மானம் திரும்பக் கிடைக்கும்" என்று சொன்னார்கள்.
“எங்களுக்கு உணர்ச்சி பிறக்கும்" என்று நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் சொன்னார்கள்.
“தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்காக சங்கரலிங்கனாரின் பிணம் வீழ்ந்தது. உங்களுக்கு ஒரு எழுத்துக்கு ஒரு பிணம் வீதம் வேண்டுமென்று சொன்னால் தயாராக இருக்கிறோம். ஐந்து பிணங்கள் தருவதற்குத் தயாராக இருக்கிறோம்.
எழுத்துக்கு எத்தனை பிணங்கள் வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறோம்.
தமிழ்நாடு என்று இந்த நாட்டுக்கு பெயரிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்...." என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 10.8.1960 அன்று கனல் கக்க முழங்கினார் நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்.
தமிழர்கள் வாழும் மற்ற பகுதிகளை, முழுமையாக நாம் பெறவில்லை என்பதைச் சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டி 1957ஆம் ஆண்டே கலைஞர் அவர்கள் பேசி இருக்கிறார்கள்.
“…..கவர்னருடைய உரையைப் பற்றி, இங்கு பேசிய பல நண்பர்கள், ‘கன்னியாகுமரியை வரவேற்கிறோம்' என்று கூறியிருக்கிறார்கள். அந்தக் கன்னியாகுமரியை நாம் தேவிகுளக் கரையிலோ அல்லது பீர்மேட்டின் மீதோ நின்றுகொண்டு வரவேற்காமல், சிதைந்து போன செங்கோட்டையின் மேல் நின்று கொண்டு வரவேற்கிறோம் என்று எண்ணும்போது தேவிகுளம், பீர்மேட்டைப் பெறுவதற்கு கவர்னர் உரையில் வழிவகை காணப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்....''-என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 4.5.1957 அன்று நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றி உள்ளார்கள்.
தமிழர்கள் வாழும் நிலப்பகுதிகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்க்கவும் அப்படி ஒன்றாக ஆன நிலப்பரப்புக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டவுமான போராட்டம் என்பது தமிழ்நாட்டில் நடந்த மகத்தான போராட்டம் ஆகும்.
இதற்கு அடித்தளம் அமைத்த இயக்கம் திராவிட இயக்கம்!
தமிழ் - தமிழன் - தமிழ்நாடு என்ற உணர்ச்சியை உருவாக்கிய இயக்கம் திராவிட இயக்கம்!
1938-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கிளம்பிய இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்தான், இந்த உணர்ச்சியை தமிழ்நாட்டில் மீண்டும் உருவாக்கிய போராட்டம்.
தந்தை பெரியார் போன்ற தமிழர் தலைவர்களும், மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழறிஞர்களும் ஒன்று சேர்ந்து நடத்திய போராட்டம் ஆகும்.
தந்தை பெரியார் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.
பேரறிஞர் அண்ணா சிறை வைக்கப்பட்டார்.
திருவாரூர் வீதிகளில் 14 வயது சிறுவனாகத் தமிழ்க்கொடி ஏந்தினார் தலைவர் கலைஞர். ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் போராடிச் சிறை சென்றார்கள்.
பெண்கள் மட்டுமல்ல, குழந்தைகளும் சிறைக்குப் போனார்கள்.
நடராசனையும், தாளமுத்துவையும் நாம் இழந்தோம்.
தமிழுக்காக - தமிழினத்துக்காக - தமிழ்நாட்டுக்காக - போராடவும் - வாதாடவும் - சிறை செல்லவும் - சித்திரவதைகள் அனுபவிக்கவும் - உயிர்த்தியாகம் செய்யவும் தமிழ்நாட்டுக்குப் பயிற்றுவித்த போராட்டம்தான் 1938 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்!
தமிழ்நாடு என்பது வெறும் வார்த்தை அல்ல, ரத்தமும் சதையும் கொண்ட நமது உரிமைச் சொல் என்பதைத் தமிழ்நாட்டுக்கு உணர்த்திய போராட்டம் தான் 1938 போராட்டம்!
1938 முதல் தொடங்கிய அந்தப் போராட்ட உணர்ச்சியின் அடிப்படையாகத்தான்
இந்தி எதிர்ப்புப் போராட்டமாக இருந்தாலும் -
தமிழ்க்காப்புப் போராட்டமாக இருந்தாலும் -
மொழிவாரி மாகாண உருவாக்கமாக இருந்தாலும் -
தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கான முயற்சிகளாக இருந்தாலும் - இந்த நாட்டில் தொடங்கியது.
அந்த விதையில் முளைத்தவை இந்தப் போராட்டங்கள்.
தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டுங்கள் என்று சொல்லி 72 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மறைந்தார் விருதுநகர் தியாகி சங்கரலிங்கனார் அவர்கள்!
தலைகொடுத்தாவது தலைநகரைக் காப்பேன் என்று முழங்கியவர் தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி.அவர்கள். தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை மொழிவாரி மாகாணம் உருவாக்க ஒப்படைத்துக் கொண்டவர் சிலம்புச் செல்வர் அவர்கள்.
திருத்தணியில் நடந்த தடியடியில் இரண்டு தியாகிகள் இறந்து போனார்கள்.
தென் எல்லைப் போராட்டத்தில் 11 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போனார்கள்.
தமிழ்நாடு கேட்டு போராடுபவர்களை ‘நான்சென்ஸ்’ என்று சொன்னதை எதிர்த்து மும்முனைப் போராட்டம் நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம்.
நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்கள், பல மாதங்கள் சிறை வைக்கப்பட்டார்கள். தூத்துக்குடியில் நான்கு பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி எத்தனையோ தியாகிகள் தங்களது தேகங்களைத் தந்திருக்கிறார்கள்.
எத்தனையோ தலைவர்கள் தங்களது உழைப்பை வழங்கி இருக்கிறார்கள். எத்தனையோ இயக்கங்கள் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருக்கின்றன. அத்தனை தியாகிகளையும் இந்தத் தருணத்தில், நான் வணங்குகிறேன். அத்தனை தலைவர்களுக்கும் தலைதாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்தனை இயக்கங்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் உருவாக்கித் தந்த தமிழ்நாட்டில்தான் நாங்கள் வாழ்கிறோம். நீங்கள் உருவாக்கித் தந்த தமிழ்நாட்டைத்தான் நாங்கள் ஆள்கிறோம்.
உங்களது தியாகத்தை எந்நாளும் காப்போம் என்று நான் உறுதி அளிக்கிறேன். அத்தகைய உறுதிகொண்ட திராவிட மாடல் ஆட்சியைத் தான் நாங்கள் நடத்தி வருகிறோம்.
சமூகநீதி - சமத்துவம் - சகோதரத்துவம் - சமதர்மம் - மொழிப் பற்று - இன உரிமைகள் - மாநில உரிமைகள் - கூட்டாட்சித் தத்துவம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம்.
‘வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது’ என்று ஒரு காலத்தில் முழங்கினோம். அன்று அத்தகைய நிலைமை இருந்தது.
1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி மலர்ந்ததற்குப் பின்னால், தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதற்குப் பின்னால், கடந்த ஐம்பது ஆண்டு காலத்தில் ‘தெற்கு சிறக்கிறது’ என்று அனைவரும் வியந்து பார்க்கும் பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறோம்.
பல தடைகளையும், பாரபட்சங்களையும் மீறி, நம்முடைய சீரிய திட்டமிடுதலாலும் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் நோக்கத்தாலும் இந்தப் பெருமையை நாம் அடைந்திருக்கிறோம்!
இந்தியாவினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பில், பார்த்தீர்கள் என்றால், தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு!
ஒன்றிய அரசினுடைய மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு!
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டினுடைய பங்களிப்பு 8.4 விழுக்காடு!
இந்தியாவின் ஜவுளித் துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு!
கார்கள் ஏற்றுமதியில் 32.5 விழுக்காடு!
தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு!
இரண்டு நாட்களுக்கு முன்னால் வந்த ஒன்றிய அரசின் அறிவிப்பின்படி இந்தியாவின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 100 சிறந்த கல்லூரிகளில், 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள். இந்தியாவின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில், 21 தமிழ்நாட்டில் உள்ளது.50 சிறந்த மருந்தியல் கல்லூரிகளில், 11 தமிழ்நாட்டில் உள்ளன. இந்தியாவில் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில், 18 தமிழ்நாட்டில் உள்ளன. இந்தியாவில் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில், 16 கல்லூரிகள் தமிழ்நாட்டைச் சார்ந்தவை என்று புள்ளிவிவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மூன்றாவது சிறந்த கலைக்கல்லூரி நம்முடைய சென்னை மாநிலக் கல்லூரிதான்.
சென்னை மாநிலமாக இருந்து தமிழ்நாடாக மாறியதால் தமிழ்நாடாக மாற்றப்பட்டதால் விளைந்த பயன்கள் இவை.
திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்ததால் ஏற்பட்ட பயன்கள் இவை. இதுதான் சிலருக்குப் பொறாமையாகவும், வயிற்றெறிச்சலாகவும் இருக்கிறது.
எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கிய ஆட்சியாக உருவாக்க நாம் அனைத்து வகையிலும் முயற்சித்து வரும் இந்த நேரத்தில், அனைவருக்கும் மன வருத்தம் ஏற்படுத்தும் வகையில் கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவங்கள் அமைந்துள்ளன.
கல்வி நிலையங்கள் ஒவ்வொரு பிள்ளைகளையும் தங்களது சொந்தப் பிள்ளைகளாக நினைத்து அவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும்.
மாறாக, நடக்கும் எந்தச் செயல்களாக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கிறேன். இந்தச் சோகமான சூழலைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் சேர்ந்து சட்டவிரோதமாக நடந்து கொண்டுள்ளார்கள்.
வன்முறைகள் என்பது வளர்ச்சிக்கு எதிரானவை என்பதை அவர்கள் உணர வேண்டும். அமைதியான தமிழகம்தான் அனைவருக்குமான தமிழகமாக அமையும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
நம்முடைய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் நமக்கு இருக்கும் மொழிப்பற்றும் - இன உணர்வும் - மாநில சுயாட்சிக் கொள்கையும்தான்.
இன்றைக்கு தமிழ்நாட்டையும் தாண்டி வாழும் பல அறிஞர்களும், இதனை நிரூபிக்கும் வகையில் புத்தகங்களை எழுதி வருகிறார்கள்!
நம்முடைய கல்வி வளர்ச்சியாக இருந்தாலும், தொழில் வளர்ச்சியாக இருந்தாலும், மக்கள் வளர்ச்சியாக இருந்தாலும், சமூக வளர்ச்சியாக இருந்தாலும் இதனை அடிப்படையாகக் கொண்டது.
தமிழ் மொழிப்பற்றையும், தமிழின உரிமை வேட்கையையும், மாநில சுயாட்சித் தத்துவத்தையும் எந்தச் சூழலிலும் யாருக்காகவும் விட்டுத் தந்துவிடக் கூடாது.
தமிழ் என்று சொல்வதால் மற்ற மொழிக்காரர்களுக்கு, நாம் எதிரிகள் அல்ல. தமிழன் என்று சொல்வதால் மற்ற தேசிய இனத்தவர்க்கு, நாம் எதிரிகள் அல்ல.
மாநில சுயாட்சி பேசுவதால் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்துவது அல்ல. இன்னும் சொன்னால், மாநிலத்தில் சுயாட்சி அமைவதுதான், இந்தியாவின் ஒருமைப்பாட்டையே காப்பாற்றும்.
இந்தியா ஒற்றுமையாக விளங்க வேண்டும்.
இந்த ஒற்றுமையை எப்படி உருவாக்க முடியும்?
இங்கு வாழும் பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், பண்பாடுகள் கொண்ட மக்களை, சமமாக மதிப்பதன் மூலமாகத்தான் இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும்.
செந்தமிழ்நாடு என்று பாடிய பாரதியாரைவிட தேசியக் கவி வேறு யாராவது உண்டா?
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் என்று பாடிய பாரதி
குறுகிய எண்ணம் படைத்தவரா?
மாநில சுயாட்சிக்காக, மொழிவாரி மாகாணங்களை உருவாக்குவதற்காகப் போராடிய கவிமணி, மார்ஷல் நேசமணி, ம.பொ.சி. போன்றவர்கள் இந்திய தேசியத்தின் அசைக்கமுடியாத தலைவர்கள் அல்லவா.
எனவே, தமிழ், தமிழன், தமிழ்நாடு என்று பேசுவது குறுகிய எண்ணம் கிடையாது.
பரந்து விரிந்த இந்த நாட்டில் எனது மொழியும், எனது இனமும், எனது மாநிலமும் மேன்மை அடையவேண்டும்!
இதேபோன்ற மேன்மையை அனைத்து மொழிகளும், அனைத்து இனங்களும், அனைத்து மாநிலங்களும் அடைய வேண்டும்!
இத்தகைய பரந்த பெருந்தன்மையுடன்தான், மொழி, இனம், மாநில சுயாட்சி ஆகிய அனைத்தையும் பேசுகிறோம்.
இந்த மூன்று தத்துவம்தான் நம்மை உயர்த்தும்.
நம்மை வாழ வைக்கும்.
நம்மை மேம்படுத்தும்.
மொழிவாழ, இனம் வாழ, மாநில சுயாட்சி வெல்ல, இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சி உருவாக எந்நாளும் உழைப்போம் என்பதை தமிழர் திருநாளாம் இந்தத் தமிழ்நாடு திருநாளில் உறுதியேற்போம்.
தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தை முன்மொழிந்தபோது, பேரறிஞர் அண்ணா அவர்கள் முழங்கியதைப் போல், என்னுடைய முழக்கத்தையும் அனைவரும் எழுந்து நின்று, மீண்டும் முழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
“தமிழ்நாடு வாழ்க!
தமிழ்நாடு வாழ்க!
தமிழ்நாடு வாழ்க!"
“வாழ்க தமிழ்! வெல்க தமிழ்நாடு!"” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!