Tamilnadu

ஆன்லைன் செயலிமூலம் ரூ.96,700 மோசடி..விவசாயியை ஏமாற்றிய கும்பல்..விரைந்து செயல்பட்டு கைது செய்த போலிஸார்!

தேனி மாவட்டம் கோட்டூர் அருகேயுள்ள தர்மாபுரியை சேர்ந்த தங்கவேல் என்ற விவசாயி "நித்ரா விவசாயம்" என்ற ஆன்லைன் செயலிமூலம் விளை பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் இவரை கடந்த ஏப்ரல் மாதம் சிலர் தொடர்புகொண்டு வியாபாரம் தொடர்பாக பேசியுள்ளனர்.

அதில், உங்களின் விவசாய பொருளை ஆன்லைன் செயலிமூலம் பார்த்ததாகவும், எங்கள் நிறுவனத்துக்கு உங்கள் விளைபொருள் வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும், விளைபொருளை எங்கள் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறும், பொருள் வந்தபின்னர் பணம் அனுப்பி வைக்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.

அவர்கள் கூறியதை நம்பிய விவசாயி தங்கவேலும் அவர்கள் கொடுத்த முகவரிக்கு சுமார் 96,700 ரூபாய் மதிப்புள்ள நிலக்கடலை, எள், உளுந்து ஆகியவற்றை அனுப்பியுள்ளார். அதைத் தொடர்ந்து சொன்னது போலவே அதற்கான காசோலையையும் எதிர்தரப்பினர் அனுப்பியுள்ளனர்.

அந்த காசோலையை வங்கிக்கு கொண்டு சென்று கொடுத்தபோதுதான் விவசாயி தங்கவேலுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அந்த காசோலை உள்ள கணக்கில் எந்த தொகையும் இல்லை என வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உடனே தான் பொருள் அனுப்பிய நபரை தொடர்பு கொண்டபோது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்துள்ளது. உடனே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தங்கவேல் தேனி சைபர் க்ரைம் போலிஸில் புகாரளித்துள்ளார்.

உடனே இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் தங்கவேல் கொடுத்த எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த முகமது மாலிக் (54) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த காஜா மைதீன் (44) என்பது தெரியவந்தது.

பின்னர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்த போலிஸார், அவர்களிடம் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள், ஆறு செல்போன்கள் மற்றும் பத்திற்கு மேற்பட்ட சிம்கார்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “அங்கு வைத்தா விளையாடுவார்கள் ?” : ‘ஏர் கம்பரஷர்’ வைத்து விளையாடி சிறுவன் சுருண்டு விழுந்து பரிதாப பலி !