EPS & OPS
Tamilnadu

‘நானும் EPSஐ கட்சியில இருந்து நீக்கிட்டேன்’ - OPS தகவல்.. மாத்தி மாத்தி காமெடி பண்ணிட்டிருக்கீங்களே !

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை பதவி உருவாக்கப்பட்டது.‌ தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைப்பாளராக, சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீரீசெல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் பதவி வகித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமையின் கீழ் அ.தி.மு.க செயல்பட வேண்டும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை உச்சத்தை எட்டியது.

இதனால் இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் மூத்த கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.மேலும் இதனிடையே ஒ.பி.எஸ்-க்கு ஆதரவளித்த முக்கிய நிர்வாகிகள் இ.பி.எஸ்-ஐ சந்தித்து அவருக்கு ஆதரவளித்தனர்.

இந்த நிலையில் கடந்த ஜூன் 24ம் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது, ஒ.பி.எஸ் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜெ.சி.பி. பிரபாகரன் ஆகியோருக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் பின்னரே எந்த கட்சியிலும் நடக்காத உச்சபட்ச காட்சிகள் அங்கு நடந்தேறியது.

இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் என இரண்டு தரப்பு ஆதரவாளர்களாலும் முன்வைக்கப்பட்ட 23 தீர்மானங்கள் அங்கு நிறைவேற்றுவதற்காக முன்வைக்கப்பட்டன. இதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ் முன்வைத்து நிறைவேற்றி தரவேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் 23 தீர்மானங்களும் பொதுக்குழுவால் நிராகரிக்கப்பட்டதாக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.

மேலும் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டுவரப்பட்ட பின்னர் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனவும் அறிவித்தார். இதனிடையே ஒ.பி.எஸ் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழு என முழக்கமிட்டு பொதுக்குழுவில் இருந்து வெளியேறினர். மேலும் ஜூலை 11-தேதி அறிவிக்கப்பட்ட பொதுக்குழு அறிவிப்பு செல்லாது எனவும், அ.தி.மு.கவை அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறார்கள் எனவும் கூறினார். இதன் காரணமாக அ.தி.மு.க பொதுகுழுவில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

பின்னர் தனது கடைசி முயற்சியாக, அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றால் கலவரம் வரலாம் என்பதால் அதற்கு அனுமதி வழங்கக் கூடாது என ஒ.பி.எஸ் ஆதரவாளர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், பொதுக்குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை வானகரம் அருகே அ.தி.மு.க பொதுக்குழு நடைபெற்று வருகிறது.

அதேவேளையில், அதிமுக தலைமை அலுவலகத்தை பழனிசாமி தரப்பினர் பூட்டியதால், ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் தரப்பினர் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், ஒருவரை ஒருவர் கற்களை வீசித் தாக்குதல் நடத்திக்கொண்டனர்.

இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டதால் அந்த இடமே கலவரமாக மாறியது. அதேவேளையில் இந்த கைகலப்பில் பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் தடிதடி நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஒருபுறம் அலுவலகத்திற்கு வெளியே தொண்டர்கள் ரகளையில் ஈடுட்ட நேரத்தில், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அ.தி.மு.க தலைமை அலுவகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பன்னீர்செல்வம் அலுவகத்திற்குள் சென்று ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எடப்பாடி படம் இடம்பெற்ற பதாகையை கிழித்து, தீ வைத்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எரித்தனர்.

இன்னொரு புறம் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் தலைவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது பொதுக் குழு உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்த நீக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் நந்தம் விஸ்வநாதன் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை பொள்ளாச்சி ஜெயராமன் முன்மொழிந்தார்.

மேலும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம்,ஜெ.சி.டி பிராபகர், பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆகிய 3 பேரையும் நீக்கக் கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்த சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து இது தொடர்பாக அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “அ.தி.மு.க சட்ட விதிகளின்படி தொண்டர்கள் என்னை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்தனர். என்னை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கும், கே.பி.முனுசாமிக்கும் அதிகாரம் இல்லை.

அ.தி.மு.க விதிகளுக்கு புறம்பாக தன்னிச்சையாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமிக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குவதாக அறிவிக்கிறேன். அ.தி.மு.க விதிகளின்படி தொண்டர்களுடன் இணைந்து நீதிமன்றத்திற்கு சென்று நீதியை பெறுவோம்” என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

Also Read: EPS - OPS ஆதரவாளர்கள் இடையே அடிதடி.. ஒருவருக்கு கத்திக்குத்து : கலவர பூமியானது அ.தி.மு.க தலைமை அலுவலகம் !