Tamilnadu

திருமண வரன்களை தடுத்து நிறுத்தும் உறவினர்கள்..? போஸ்டர் அடித்து பகிரங்க மிரட்டல் விடுத்த இளைஞர்..

கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் பகுதிக்கு அருகே பாலவிளை என்ற இடம் உள்ளது. இங்குள்ள திருமணம் ஆகாத இளைஞர்கள் சிலர் ஆங்காங்கே சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதாவது, திருமணத்தை தடுத்து நிறுத்துபவர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுப்பதாக அந்த போஸ்டரில் உள்ளது.

அதில், "பாலவிளையில் ஓர் சந்திப்பு.. குறிப்பாக 4, 5 நபர்களுக்கு மட்டும்.. ஊரில் வரும் திருமண வரன்களை தடை செய்பவர்கள் கவனத்திற்கு.. தடை செய்பவர்கள் அவர்களின் மகள் அல்லது மருமகளை திருமணம் செய்து கொடுப்பதாக இருந்தால் மட்டும் தடை செய்யட்டும். குறிப்பு- சில நபர்களின் அடையாளம் தெரியும் அடுத்த போஸ்டரில் அவர்களின் புகைப்படம் வைக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த போஸ்டர் அந்த பகுதியில் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இதை ஒட்டியது யார் என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 2021-ம் ஆண்டு இதே கருங்கல் அருகே உள்ள ஆயினிவிளை பகுதியில் உள்ள சில இளைஞர்கள், பலசரக்கு கடை நடத்தும் நபர் ஒருவரின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டரை தெருவுக்கு தெரு ஒட்டி சர்ச்சையை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "எங்க வீட்ல இப்படி.! உங்க வீட்ல ?.." 'குப்பை பிரித்தல் Challenge' விடுத்த சென்னை மேயர் பிரியா!