Tamilnadu

"எங்க வீட்ல இப்படி.! உங்க வீட்ல ?.." 'குப்பை பிரித்தல் Challenge' விடுத்த சென்னை மேயர் பிரியா!

திமுக அரசு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே, தமிழ்நாட்டிற்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றன. மேலும் சுற்றுசூழல் மீதும் கவனம் செலுத்தி வருகின்றது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குப்பைகளை தரம் பிரித்து, (அதாவது மக்கும் குப்பை, மக்காத குப்பை) என பிரித்து கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியது.

மேலும் ஒவ்வொரு மாநகராட்சியிலும் இந்த முறை நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.இப்படி செய்வதால் குப்பை அள்ளும் தூய்மை பணியாளர்களுக்கு உதவும் வகையில் இருக்கும்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் மட்டுமே நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. ஒரு சில வீடுகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் என முறையாக தரம் பிரித்து வழங்கப்படுகின்றன. சில வீடுகளில் அவ்வாறு குப்பைகள் தரம் பிரித்து வழங்கப்படுவது இல்லை.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெறப்படும் தரம் பிரிக்கப்படாத குப்பைகள் மாநகராட்சியின் வள மீட்பு மையங்களில் (RRC) பிரித்தெடுக்கப்பட்டு மக்காத உலர்க்கழிவுகள் மறுசுழற்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. பெறப்படும் குப்பைகளில் மக்கும் ஈரக்கழிவுகள் உரம் தயாரிக்கும் மையங்களில் உரமாகவும், எரிவாயு மையங்களில் உயிரி எரிவாயுவாகவும் (Bio CNG) மறுசுழற்சி செய்யப்படுகிறது.

எனவே சென்னையில் உள்ள மக்கள், குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால், தனி நபர் இல்லங்களுக்கு ரூ.100, மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. இது குறித்து விழிப்புணர்வும் நடத்தப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் பலரும் இதனை சரிவர பின்பற்றாமல் இருக்கின்றனர்.

இந்த நிலையில் சென்னை மேயரான பிரியா ராஜன், தன் வீட்டில் மக்கும் குப்பை - மக்காத குப்பை என்று குப்பையை தரம் பிரித்து வழங்கியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே வெளியிட்டு, பதிவு ஒன்றையும் போட்டுள்ளார். அதில், "எங்கள் வீட்டு குப்பையை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குகிறேன். என் குப்பை, எனது பொறுப்பு என்ற உணர்வோடு நமது சென்னை மக்கள் அனைவரும் தங்களது வீட்டு குப்பையை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து கொடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 'என் குப்பை, எனது பொறுப்பு' என்ற தலைப்பில் Chennai Enviro Solution இணைந்து 'Chennai Enviro's Source segregation Challenge 2022' போட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்க '8925800864' என்ற எண்ணிற்கு missed call கொடுக்க வேண்டும். மேலும் இன்று (ஜூலை 9) முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு அதிரடி பரிசும் காத்துக்கொண்டிருக்கிறது.

Also Read: அமர்நாத் யாத்திரையில் பக்தர்கள் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு.. 40 பேர் மாயம்..