Tamilnadu

கோவையில் திருடி.. விமானம் மூலம் சொந்த ஊர் சென்று உல்லாச வாழ்க்கை: வடமாநில கும்பலை கைது செய்த போலிஸ்!

கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு, செல்போன் பறிப்பு, வழிபறி நடப்பதாக போலிஸாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது பூமார்க்கெட் பேருந்து நிறுத்தம் அருகே 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் ஒரு முதியவரைச் சூழ்ந்து கொண்டு அவருக்குத் தெரியாமல் பணம் மற்றும் செல்போனை திருடினர்.

இதனை பார்த்த போலிஸார் உடனே அந்த கும்பலையும் சுற்றி வலைத்து மடக்கிப் பிடித்தனர். பின்னர் போலிஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. போலிஸார் நடத்திய விசாரணையில், ஜார்கண்ட்டை சேர்ந்த பகதூர் மகடோ (36), சந்தோஷ் (33), பப்லு மகடோ (23) பீகாரை சேர்ந்த மனிஷ்மகோலி (22), பீகாரை சேர்ந்த 15 சிறுவன், ஜார்கண்ட்டை சேர்ந்த 14 மற்றும் 10 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

இந்த கும்பல், பொருட்கள் வாங்குவது போல் கடைகளுக்குச் சென்று பொருட்களைத் திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தேர்வு செய்தி தங்களின் கைவரிசை காட்டி வந்துள்ளனர்.

கோவையில் ஒருவாரம் அறை எடுத்துத் தங்கி திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்படப் பகுதிகளுக்கும் சென்று திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளனர். இந்த திருட்டு சம்பவத்திற்கு அவர்கள் கும்பலில் உள்ள3 சிறுவர்களை அதிகமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இவர்கள் மாட்டிக் கொண்டால் சிறுவர்கள்தானே என அவர்களை அடித்து விட்டு விட்டுவிடுவார்கள் என்பதால் அவர்களைத் திருட்டு சம்பத்திற்குப் பயன்படுத்தியுள்ளனர். இந்த கும்பல் கொள்ளையடித்து விட்டு கோவையிலிருந்து ஒருவர் விமானம் மூலம் மற்றவர்கள் ரயில் மூலமும் தங்கள் ஊருக்குச் சென்று விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இப்படி அடிக்கடி கோவை, திருப்பூர் பகுதிக்கு வந்து தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் திருட்டு பொருட்களை விற்பனை செய்த பணத்தைக் கொண்டு தங்களது ஊரில் உல்லாசமாக இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து 3 சிறுவர்கள் உட்பட 7 பேரையும் கைது செய்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு வேறு யாருடனாவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.