Tamilnadu
“OTP சொல்லாததால் விபரீதம்.. குழந்தைகள் கண்முன்னே தந்தையை கொலை செய்த OLA ஓட்டுநர்” : பின்னணி என்ன ?
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் உமேந்தர். கோயம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர், வாரந்தோறும், சனி, ஞாயிறு என்ற இரண்டு நாட்களும் தனது குடும்பத்துடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று கோயம்பத்தூரில் இருந்து சென்னை வருவது வழக்கம்.
அவ்வாறு இந்த வாரமும் வெள்ளிக்கிழமை இரவு கிளம்பி, சனிக்கிழமை காலை தனது வீட்டிற்கு வந்துள்ளார். சனிக்கிழமை வீட்டில் நேரம் செலவழித்த இவர், ஞாயிற்றுகிழமை என்பதால் குடும்பத்துடன் சினிமா, மால் என்று சுற்றிப்பார்க்க செல்வதற்கு திட்டமிட்டுள்ளார். அதன்படி, அவரது மனைவி, சகோதரி என குழந்தைகள் உட்பட மொத்தம் 7 பேர் OLA கார் மூலம் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்றுள்ளனர்.
பின்னர் இரவு வீடு திரும்புவதற்காக மீண்டும் அதே போல், சகோதரி மொபைல் போனில் இருந்து OLA கார் புக்கிங் செய்துள்ளனர். சிறிது நேரத்தில் ஒரு இன்னோவா கார் வந்ததும் அனைவரும் காரில் ஏறியுள்ளனர். அப்போது அந்த கார் ஓட்டுநரான ரவி என்பவர், அவர்களிடம் OTP-யை சொல்லும்படி கேட்டுள்ளார். அப்போது OTP-யை தனது inbox மெசேஜ்-ல் தேடியுள்ளார் உமேந்தரின் சகோதரி.
நேரமாகியும் அவர்கள் OTP சொல்லாத காரணத்தினால் கோபமடைந்த OLA ஓட்டுநர், காரை விட்டு இறங்குமாறு கூறியுள்ளார். ஆனால் உமேந்தரிடம் குடும்பம் காரை விட்டு இறங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காரை விட்டு இறங்கிய உமேந்தர், எரிச்சலில் காரின் கதவை வேகமாக அடைந்துள்ளார். இதனை கண்ட ஓட்டுநர், மீண்டும் அவரிடம் சண்டையிட்டுள்ளார்.
இவர்களது வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டுள்ளனர். அப்போது ஓட்டுநர் ரவியை, உமேந்தர், கூல்ட்ரிங்ஸ் பாட்டிலால் அடித்ததால், ஆத்திரமடைந்த ஓட்டுநர், உமேந்திரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் கீழே விழுந்த உமேந்தர் மயக்கமடைந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் உமேந்தரை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு உமேந்திரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். மேலும் தப்பியோட முயன்ற ஓட்டுநரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த OLA ஓட்டுநரான ரவியை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி, குழந்தைகள் கண் முன்னே ஐடி ஊழியர் ஒருவர் OLA ஓட்டுநரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், குடும்பத்தினரிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !