Tamilnadu
வீட்டிலிருந்த 43 பவுன் நகைகளை குப்பை தொட்டியில் போட்டு சென்ற இளம் பெண்: போலிஸ் விசாரணையில் ‘பகீர்’ தகவல்!
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான வங்கி மற்றும் ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்த வங்கியில் காவலாளியாக வேலை செய்து வருபவர் கோதண்டம் என்பவர் நேற்று காலை ஏ.டி.எம் மையத்திற்குள் சென்று பார்த்த போது அதில் இருந்த குப்பை தொட்டியில் கைபை ஒன்று இருந்தது.
அதனை பிரித்து பார்த்தபோது அதில் நகைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குன்றத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் காவல் துறையினர் நகைபையை மீட்டு விசாரணை நடத்தி ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில் 30 வயதுடைய பெண் ஒருவர் ஏ.டி.எம் மையத்திற்குள் சென்று கதவை திறந்து குப்பை தொட்டியில் நகைபையை போட்டு விட்டு செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த பெண் யார் என காவல் துறையினர் விசாரித்து வந்த நிலையில், குன்றத்தூரில் 30 வயதுடைய தனது மகளை காணவில்லை என அவரது பெற்றோர் வாய்மொழியாக காவல் துறையினருக்கு தெரிவித்த நிலையில், பின்னர் அவர் வீட்டிற்க்கு வந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அந்த பெண்ணின் பெற்றோரிடம் காண்பித்தபோது அந்த காட்சியில் இருப்பது தனது மகள் என தெரிவித்தனர். அப்போதுதான் அவர் 43 பவுன் நகைகளை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றது அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் குன்றத்தூர் காவல்துறையினர் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் வங்கி ஊழியர்களை அழைத்து நகைகளை அவர்களிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் விசாரணையில் அந்த பெண் சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், தூக்கத்தில் எழுந்து நடந்து வரும்போது வீட்டில் இருந்த நகையை பையில் போட்டு எடுத்து வந்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. உரிய நேரத்தில் நகை பையை கண்டெடுத்து கொடுத்த வங்கி காவலாளி கோதண்டத்தை போலிஸார் வெகுவாக பாராட்டினார்கள்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!