Tamilnadu

தங்க நகைகளை வைத்து பரிகாரம் : பெண்களிடம் நகை மோசடி செய்த போலி சாமியார்.. போலிஸில் சிக்கியது எப்படி?

சென்னை சேர்ந்தவர்கள் சரஸ்வதி, சரிதா, கோகிலா, ரதி. நெருங்கிய நண்பர்களான இவர்கள், கடவுள் பக்தியில் நாட்டம் கொண்டவர்கள். கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வட பழனியைச் சேர்ந்த கோயில் பூசாரி பூரண பிரகாஷ் என்பவர், இவர்கள் வீட்டிற்கு சென்று, பூஜை செய்துள்ளார்.

அப்போது தங்கள் நகைகளுக்கு சொர்ண அபிஷேகம் செய்து தருகிறேன் என கூறியுள்ளார். 48 நாட்கள் நடைபெறும் இந்த பூஜையில் இடையில் நகையை கேட்க கூடாது என்றும் அழுத்தமாக கூறியுள்ளார்.

சொர்ணாபிஷேகம் என்பது, கடவுள் முன் நமது தங்கம் சம்மந்தப்பட்ட பொருட்கள், நாணயங்கள், நகைகளை உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்யப்படும். அப்படி பூஜை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதால் செல்வச்செழிப்பு உண்டாகும் என்பது ஐதீகம். இதனால், தங்களது நகைகளை கொடுக்க 4 பெரும் சம்மதித்துள்ளனர்.

அதன்படி, சரிதா 1/2 சவரன் தங்கமும், சரஸ்வதி 2 சவரன் தங்கமும், கோகிலா 3.5 சவரன் தங்கமும், ரதி 1 சவரன் தங்கமும் மொத்தம் 7 சவரன் தங்க நகைகளை போலி சாமியார் பிரகாஷிடம் கொடுத்துள்ளனர்.

ஆனால் 48 நாட்கள் கழித்து தாங்கள் கொடுத்த நகையை, பூசாரியிடம் கேட்டபோது அவர் மீண்டும் ஒரு பூஜை உள்ளது என்று கூறியுள்ளார். இப்படி அடிக்கடி அவர்கள் கேட்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி காலத்தை கடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், அந்த நகைகளை கொடுத்து 1 வருடம் ஆக போகும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள், இது தொடர்பாக ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கத்தை அபிஷேகம் செய்தால் செல்வம் கூடும் என்று போலி சாமியார் மீது வைத்த நம்பிக்கையால், அந்த பெண்களின் நகை பறிபோனது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “தன்னை தானே திருமணம் செய்துக் கொண்டு ஹனிமூன் செல்ல திட்டம்” : இளம் பெண்ணின் முடிவுக்குக் காரணம் என்ன ?