Tamilnadu
திருமண மோசடியில் ஈடுபட்ட பியூட்டி வேஷம்போட்ட ஆந்திர ‘பாட்டி’.. சென்னையில் பிடிபட்டது எப்படி ?
சென்னை ஆவடி அருகிலுள்ள முத்தாபுதுப்பேட்டையை சேர்ந்தவர் இந்திராணி. இவரது மகன் கணேஷ் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது. தனியார் நிறுவன மேலாளராக பணிபுரிந்து வரும் இவருக்கு, 6 ஆண்டுகளாக இரண்டாம் திருமணத்திற்கு திருமண தரகர் மூலம் பெண் தேடிக்கொண்டிருந்தனர்.
அப்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சரண்யா என்பவர், தான் வசதியற்றவர் என்று கூறி திருமண தரகர் ஒருவர் மூலம் அறிமுகமாயுள்ளார். இதையடுத்து கணேஷ் குடும்பத்தினர், சரண்யாவை ஆந்திர மாநிலத்திற்கு பெண் பார்க்க சென்றுள்ளனர்.
அப்போது அவர்களுக்கு சரண்யாவை பிடித்து போக, வரதட்சணை எதுவும் வேண்டாம், நாங்களே திருமண செலவையும் ஏற்றுக்கொளவதாக கூறி, சரண்யாவுக்கு 25 சவரன் தங்கநகையை கொடுத்து திருமணமும் செய்து கொண்டார்.
தொடர்ந்து திருமண வாழ்க்கை போய்க்கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று ஒரு நாள், சம்பள பணத்தை இனி தன்னிடம் தான் கொடுக்க வேண்டுமென்றும், வீட்டின் பீரோ சாவியும் தன்னிடம் தான் இருக்க வேண்டுமென்றும் கணேஷின் சண்டையிட்டுள்ளார் சரண்யா.
இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில், கணவரிடம் அவரது பெயரில் உள்ள சொத்துக்களை தனது பெயரில் எழுதி தர வேண்டுமென்றும் சரண்யா அடம்பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாமியார் இந்திராணி, ஒரு கட்டத்தில் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார்.
இதனால் மனமுடைந்த கணவர் கணேஷ், தனது பெயரில் உள்ள சொத்துகளை எழுதி வைக்க சம்மதித்து சரண்யாவிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளார். ஆரம்பத்தில் இது தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் இப்போது இல்லை எனக்கூறி இழுத்தடித்து வந்த சரண்யா, சொத்து வேண்டும் என்பதால் தனது ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கணேஷிடம் அளித்துள்ளார்.
அப்போது சரணையாவின் ஆதாரில், C/O என்ற இடத்தில் ரவி என்ற பெயர் இடப்பெற்றிருந்தது. ஆந்திர மாநிலத்தில் கணவர் பெயரை Care/Of (C/O) என்பதை குறிப்பிடுவது வழக்கம். இதனால் சந்தேகமடைந்த கணேஷ் மற்றும் அவரது தாய் இந்திராணி, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பல திடுக்கிடும் தகவல்களை சேகரித்தனர். அதன்படி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சரண்யாவின் உண்மையான பெயர் சுகுணா என்றும், இவர் ரவி என்பவரை முறைப்படி திருமணம் செய்து, 2 பெண் பிள்ளைகள் உள்ளதாகவும், மகள்களுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகளும் உள்ளதாகவும் தெரிய வந்தது.
54 வயதாகும் இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு, தனது கணவர் ரவியுடன் ஏற்பட்ட கருத்து மோதலால், தனது தாயுடன் திருநின்றவூரில் வசித்து வந்துள்ளதும், தொடர்ந்து வருமானம் ஏதும் இல்லாத காரணத்தினால் சுகுணா, அவரது தாயுடன் சேர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சில திருமண புரோக்கர்கள் உதவியுடன் திருமண ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது.
இப்படி ஏமாற்று வேலையில் ஈடுபட்டிருக்கும் சமயத்தில் தான், கணேஷின் குடும்பம் அறிமுகமாகியுள்ளது. அவர்கள் பெண் பார்க்க வரும்போது 54 வயதுடைய அந்த பெண், தன்னை இளமையாக காட்ட வேண்டும் என்று, அலங்காரம் செய்து 35 வயதுடைய பெண்ணாக அவர்கள் முன் தோன்றியுள்ளார். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து, திருமணமும் நடைபெற்றது.
இதையடுத்து மாமியார் இந்திராணி அளித்த புகாரின் அடிப்படையில் ஜோலார்பேட்டை யில் பதுங்கியிருந்த சுகுணாவை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் லதா மற்றும் காவலர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முன்னதாக ஜோலார்பேட்டையை சேர்ந்த இரயில்வே உணவு சப்ளை காண்டராக்டர் சுப்ரமணியன் என்பவரை திருமணம் செய்து 11 ஆண்டுகள் வாழ்ந்து வந்ததும், பின்னர் அவரை ஏமாற்றிவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இரண்டாம் திருமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களை மட்டுமே குறி வைத்து சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட சுகுணாவை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!