Tamilnadu
“என் சக்தியை மீறியும் உங்களுக்காக உழைப்பேன்” : அரசு விழா மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30.06.2022) இராணிப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- “இராணிப்பேட்டை என்பது புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம். ஒரு காலத்தில் ராணுவப் பேட்டையாக இருந்ததுதான் இந்தப் பகுதி. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், குதிரைப்படைகள் நிலைகொண்ட பகுதியாக, வரலாற்றில் இது பதிவாகி இருக்கிறது. இங்கு இருக்கும் பழைய கட்டடங்களில், ராணுவ அதிகாரிகள் தங்கியிருந்தார்கள். முதல், இரண்டாம் உலகப் போர்கள் நடந்த காலத்திலும், இது முக்கிய தளமாக இருந்திருக்கிறது.
எனவே, புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமாக இருந்தாலும், இராணிப்பேட்டை பழமையானதுதான்! வரலாற்றுச் சிறப்புக்குரிய மாவட்டமாக இது விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய இரண்டு அண்டை மாநிலங்களையும் இணைக்கும் இடத்தில், இந்த மாவட்டம் அமைந்திருப்பது, இன்னொரு சிறப்பாக நாம் பார்க்கிறோம். கனிம வளங்கள் நிறைந்த மாவட்டமாகவும் இருக்கிறது. ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர்கள் குறிப்பிடும், 108 திவ்ய தேசங்களில் 65-ஆவது திவ்ய தேசமாகச் சொல்லப்படும் சோளிங்கர் அமைந்துள்ள மாவட்டம் இது. இந்த மேடையில் இருக்கும் தலைவர் கலைஞர் அவர்களால் அடிக்கடி புகழப்படக்கூடிய திராவிட ஆழ்வார் ஜெகத்ரட்சகனிடம் கேட்டால், இதைப்பற்றி மட்டுமே ஒரு மணி நேரம் பேசுவார்!
தென்னிந்தியாவில் இருக்கும் தொழில் மையங்களில் ஒன்றாகவும் இராணிப்பேட்டை இருக்கிறது. தோல் பொருள் ஏற்றுமதியில், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் மாவட்டமாகவும் இது இருக்கிறது. அனைத்து சமூக மக்களும் அமைதியாக வாழும் சமரசம் உலவும் மாவட்டமாகவும் இந்த மாவட்டம் இருக்கிறது.
புதிதாக உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய மாவட்டமாக இருந்தாலும், பல்வேறு பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றி வரும் மாவட்டங்களில் இந்த இராணிப்பேட்டை முன்னணியில் இருப்பதை நான் தெளிவாக உணர்ந்திருக்கிறேன்.
‘மீண்டும் மஞ்சள் பை’ திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய மாவட்டமாக இராணிப்பேட்டை மாவட்டம் இருப்பதை அறிந்து, இந்த மாவட்ட நிர்வாகத்தை நான் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
36,000 பங்களிப்பாளர்களின் பங்களிப்புடன், 3 மணி நேரத்தில் 187 டன் நெகிழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு இருக்கிறது. இது மிகப்பெரிய சாதனை! ஏற்கனவே 128 டன் சேகரித்து, ஸ்விட்சர்லாந்து நாட்டில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனையை முறியடித்திருக்கிறது. இதனால், பல்வேறு சாதனைப் புத்தகங்களில் இராணிப்பேட்டை மாவட்டம் இடம்பெற்றிருக்கிறது. இத்தகைய சாதனை தொடர வேண்டும். இதே போன்ற செயல்பாடுகளில் மற்ற மாவட்டங்களும் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் இந்த நிகழ்ச்சியின் மூலமாக கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
இத்தகைய சிறப்புமிகு மாவட்டத்தில், இத்தகைய சிறப்புக்குரிய விழாவை ஏற்பாடு செய்துள்ள என்னுடைய அருமை சகோதரர், சாதனைச் செல்வன் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் அமைச்சர் திரு. காந்தி அவர்களைப் நான் மனதாரப் பாராட்டுகிறேன். மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் அமைச்சராக அவர் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்தத் துறையில் பல்வேறு முன்னெடுப்புகளை, அவர் சீரிய முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறார்.
அவருக்கு இங்கு இருக்கக்கூடிய மக்கள் செல்வாக்கைப் பற்றி, நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை. 1996, 2006, 2016, 2021 என நான்கு முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று, எல்லோருமே அவரை இராணிப்பேட்டை காந்தி என்று அழைப்பதை விட அவர், சாதனைச் செல்வர், சாதனைச் செல்வர் என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொன்னால், இராணிப்பேட்டை என்று சொல்வதைவிட, காந்திப்பேட்டை என்று சொன்னால் கூட அது பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
அண்ணன் திரு. துரைமுருகன் அவர்கள் திரு. காந்தியைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். நான் பலமுறை இந்த மாவட்டத்திற்கு வந்தபோது அவரைப்பற்றி நான் பலமுறை பேசியிருக்கிறேன்.
காந்தி என்றால் கலகலப்பு என்று பொருள். அந்தளவுக்கு, தான் இருக்கும் இடத்தை எப்போது அவர் கலகலப்பாக வைத்திருப்பார். அவர் பேசக்கூடிய தமிழ் இருக்கிறது பாருங்கள், மிகவும் அழகாக இருக்கும். மழலைத் தமிழில், இந்த வட்டார மக்களின் தமிழாகவே அது இருக்கும். அந்த வகையில் மக்களின் அமைச்சராக இருந்து செயல்படும் அவருக்கு மீண்டும், மீண்டும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அவர் ஆற்றக்கூடிய அந்த பணிகளுக்கெல்லாம் துணை புரியும் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெகத்ரட்சகன் அவர்களையும், அதேபோல இந்த மாவட்டத்திற்கு உட்பட்டிருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் தம்பி ஆற்காடு ஈஸ்வரப்பன் அவர்களையும், காங்கிரஸ் பேரியக்கத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் நம்முடைய இயக்கத்தோடு எந்த அளவுக்கு நெருக்கமாக, உறவாக பழகிக் கொண்டிருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட சோளிங்கர் முனிரத்தினம் அவர்களையும், இந்த மாவட்டத்தின் ஆட்சிரையும், பல்வேறு அதிகாரிகளையும், அலுவலர்களையும், இந்த நிகழ்ச்சி சிறப்போடு அமைவதற்காக பாடுபட்டிருக்கக்கூடிய அனைவரையும் நான் இந்த நேரத்தில் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
71 ஆயிரத்து 103 பயனாளிகளுக்கு, 267 கோடியே 10 இலட்சத்து 9 ஆயிரத்து 302 ரூபாய் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் இன்றைக்கு வழங்கப்பட இருக்கிறது.
வீட்டுமனைப் பட்டா
உதவித்தொகைகள்
நிவாரண நிதிகள்
மகளிர் நலன்சார் திட்டங்கள்
தனிநபர் இல்லக் கழிவறை அமைத்தல்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் அட்டைகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர், செயற்கைக் கால் மற்றும் கை
வீடுகட்டும் திட்டம்
மருத்துவக் காப்பீடுகள்
இலவசத் தையல் இயந்திரங்கள்
மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அட்டைகள்
வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்குதல்
உழவர் கடன்கள்
ஆதிதிராவிடர் நலத்திட்ட உதவிகள்
சூரிய ஒளி பம்பு செட்டுகள் அமைத்தல்
நரிக்குறவர் அடையாள அட்டை
பால்கறவை இயந்திரம்
- இப்படி பல்வேறு திட்ட உதவிகளை, இன்று 71 ஆயிரத்து 103 பயனாளிகள் பெற இருக்கிறார்கள்.
“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்றார் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள்.
அவரது பொன்மொழிக்கு இலக்கணமான பொற்காலமாக அமைந்திருக்கக்கூடிய கழக ஆட்சி இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது.
அதனுடைய அடையாளமாகத்தான் இன்றைய தினம் ஒரே நாளில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் 71 ஆயிரம் பேரின் கோரிக்கைகள் நிறைவேறுகிறது. இப்படி ஒவ்வொரு தனிமனிதரின் கோரிக்கைகளையும், கேட்டுக் கேட்டு, பார்த்துப் பார்த்து, நிறைவேற்றித் தரும் அரசுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு.
பெற்றவர்கள் தான் தங்களுடைய பிள்ளைகளுக்கு என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் தனித்தனியாக நிறைவேற்றித் தருவார்கள். அதைப்போலத்தான், ஒரு அரசும் செயல்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் ஒவ்வொரு தனிமனிதரின் கோரிக்கையையும் கேட்டுப் பெற வேண்டும் என்று அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியிருக்கிறேன்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் -
முதல்வரின் முகவரி -
மக்கள் குறைதீர்ப்பு நாள் -
இதுபோன்ற அரசு விழாக்களில், அமைச்சர்களே மக்களைச் சந்தித்து மனுக்களை பெறுவது என பல்வேறு வழிமுறைகளின் மூலமாக உங்கள் கோரிக்கைகள், உடனடியாக எங்களை வந்து சேர வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
இன்றைய நாளில் மட்டும், 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கன்னிகாபுரம் - பொன்னமங்கலம் சாலையில், செய்யாற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைக்கும் திட்டப்பணியும் -
7 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில், புதிய பணிமனைக் கட்டடங்கள் (Work Shop) அமைக்கும் திட்டப்பணிகளும் -
இராணிப்பேட்டையில் 10 கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் - புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி மற்றும் ரூ.48 இலட்சம் மதிப்பீட்டில், ஆற்காட்டில் கட்டப்படவுள்ள கால்நடை மருந்தகம் அமைக்கும் திட்டப்பணி என்று –
மொத்தம் 22 கோடியே 19 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நான்கு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.
முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகள், இன்று திறப்பு விழா கண்டிருக்கிறது.
118 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
13 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாலாஜா, சோளிங்கர், ஆற்காடு, கலவை ஆகிய பகுதிகளில், புதிய வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் சோளிங்கர், வாலாஜா மற்றும் கலவை வட்டாட்சியர் குடியிருப்புக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
5 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஆற்காடு மற்றும் அரக்கோணம் பகுதிகளில், ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் -
ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 2 ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள், 4 அங்கன்வாடி மையக் கட்டடங்கள், 2 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 2 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டடங்கள் -
76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், வாலாஜா வட்டாரம் லாலாபேட்டை மற்றும் திமிரி வட்டாரம் கலவை ஆகிய பகுதிகளில் துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடங்கள் -
5 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 30 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடம் -
5 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அரக்கோணம் வட்டம், அரிகில்பாடி கிராமத்தில் கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, தளமட்ட சுவர் (தடுப்பணை)
- ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக சொல்வதாக இருந்தால், 150 கோடியே 58 இலட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 24 முடிவுற்ற திட்டப் பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
அது மட்டுமல்ல, தோல் மற்றும் காலணி உற்பத்தித் தொழிலில், இராணிப்பேட்டை மாவட்டம் சிறந்து விளங்குகிறது. காலணி மற்றும் அது சார்ந்த பொருட்களின் உற்பத்தியை, சர்வதேசத் தரத்திற்கு மேலும் உயர்த்தி, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இப்போது நான் ஒரு புதிய அறிவிப்பை மகிழ்ச்சியோடு வெளியிடப் போகிறேன். திரு. காந்தி, அதேபோல இராணிப்பேட்டை தொகுதியில் இருக்கக்கூடியவர்கள், இந்த மாவட்டத்தில் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் பெருமைப்படக்கூடிய வகையில் ஒரு அறிவிப்பு.
பனப்பாக்கத்தில், 400 கோடி ரூபாய் செலவில் 250 ஏக்கர் பரப்பளவில் மெகா காலணி உற்பத்தி பூங்கா ஒன்று அமைக்கப்படும்.
நேற்று மாலை வேலூரில் நடைபெற்ற அரசு விழாவில், நம்முடைய
திரு. துரைமுருகன் அவர்கள் எடுத்து வைத்த அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, காட்பாடியில் சிப்காட் அறிவித்தேன். இன்று இராணிப்பேட்டையில் இந்தப் பூங்காவை அறிவித்திருக்கிறேன்.
இதனால், சர்வதேச அளவில், தலைசிறந்த காலணி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக இராணிப்பேட்டை மாவட்டம் மேலும் வலுப்பெறும். இந்தப் பூங்கா நிறுவப்படும் காரணத்தால், 20 ஆயிரம் பேருக்கு, குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த ஓராண்டு காலத்தில், கழக அரசின் சார்பாக, இராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்குச் செய்து தரப்பட்டுள்ள நன்மைகளையும், இந்த நேரத்தில் நான் நினைவூட்டுவது என்னுடைய கடமையாக, பொருத்தமாகக் கருதுகிறேன்.
முதல்வரின் முகவரி திட்டத்தின்கீழ் 9,309 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
1,696 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
527 பேருக்கு கல்விக் கடன் தரப்பட்டுள்ளது.
1 கோடியே 69 ஆயிரத்து 510 பேருந்து பயணங்களை கட்டணமில்லாமல் மகளிர் மேற்கொண்டுள்ளார்கள்.
24,031 பேரின் நகைக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன்
5 சதவீதம் தள்ளுபடி செய்யப் போவதாக சொன்னோம். அதையெல்லாம் கூட கிண்டல் செய்தார்கள். கேலி செய்தார்கள். விமர்சனம் எல்லாம் செய்தார்கள். ஆக, அதையெல்லாம் சரியாக இருக்கிறதா? என்று சரிபார்த்து இப்போது படிப்படியாக செய்திருக்கிறோம். அந்த வகையில் இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், 24,031 பேரின் நகைக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆறு லட்சம் பேர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் சிகிச்சை பெற்றுள்ளார்கள்.
346 பேர் இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் பயனடைந்துள்ளார்கள்.
ஆவின் பால் விலையைக் குறைத்ததன் மூலமாக 90 ஆயிரம் நுகர்வோர் பயனடைந்துள்ளார்கள்.
2,082 உழவர்களுக்கு புதிதாக இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
18,377 பேர் வருமுன் காப்போம் திட்டம் மூலம் பயனடைந்துள்ளார்கள்.
3 லட்சத்து 30 ஆயிரத்து 366 பேர் கொரோனா கால நிவாரண நிதி பெற்றுள்ளார்கள்.
3 லட்சத்து 30 ஆயிரத்து 91 பேர் 14 வகையிலான மளிகைப் பொருள்களைப் பெற்றுள்ளார்கள்.
3 லட்சத்து 30 ஆயிரம் பேர் 22 வகையிலான மளிகைப் பொருள்களைப் பெற்றுள்ளார்கள்.
2,437 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த, 34 ஆயிரத்து 987 பேரின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
84 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது.
1 லட்சத்து 82 ஆயிரத்து 950 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.
1,680 குடும்பங்களுக்கு வேளாண் உபகரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
6 திருக்கோயில்கள் 12 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலமாக 4 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளார்கள்.
ஊரக வளர்ச்சித் துறை மூலமாகப் பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
7,289 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 361 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
239 இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி தரப்பட்டுள்ளது.
300 புதிய சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன.
நான்கு நகராட்சிகளில் 2 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் பூங்காக்கள்.
40 சாலைப் பணிகள்
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம், ஆனால், நேரம் கடந்து கொண்டிருக்கிறது.
இவை எல்லாம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அல்ல, செய்து முடிக்கப்பட்ட திட்டங்கள். ‘இவை அனைத்தும் ஓராண்டு காலத்தில், ‘செய்து முடிக்கப்பட்ட’ திட்டங்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதில் ஏறக்குறைய 70 சதவீதம், 80 சதவீதம் நாம் நிறைவேற்றி இருக்கிறோம் என்று சொன்னால், இவை அனைத்தையும், தாண்டிய அளவில் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய திட்டங்கள். அதனால்தான் உங்கள் முன்னால் இன்றைக்கு கம்பீரமாக நான் நின்று கொண்டு இதை தெளிவுப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
நாங்கள் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சியில் இருக்கக்கூடியவர்கள், சில உதிரிக் கட்சியில் இருக்கக்கூடியவர்கள், நாங்கள் தான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்லிக் கொண்டு அனாதைகளாக அழைந்து கொண்டிருக்கக்கூடியவர்கள் இன்றைக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் இதை சட்டமன்றத்திலும் சொல்லியிருக்கிறேன், மக்கள் மன்றத்திலும் சொல்லியிருக்கிறேன், எந்தெந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை நான் பட்டியல் போட்டு, இங்கே கூட பட்டியல் போட்டுத்தான் உங்களிடத்தில் சொல்லியிருக்கிறேன். புள்ளி விபரத்தோடு தான் சொல்லியிருக்கிறேன். ஆக, நீங்கள் பலன்பெற்று வருகிறீர்கள். ஆனால், பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று நினைப்பதைப் போல சிலர் நினைக்கிறார்கள்! பேசுகிறார்கள்!
இன்னொன்றையும் சொல்கிறார்கள், 'ஸ்டாலின் விளம்பரப் பிரியராக இருக்கிறார்' அப்படி என்று சொல்லியிருக்கார். எனக்கு எதற்கு விளம்பரம்? இனிமேலும் எனக்கு விளம்பரம் தேவையா? 55 ஆண்டுகளாக அரசியலில் இருக்கக்கூடியவன் நான். இனிமேல் எனக்கு விளம்பரம் எதற்கு?
நரிக்குறவர் வீட்டுக்குப் போனார் -
இருளர் வீட்டுக்குப் போனார் -
அங்கே போய் அவர்கள் வீட்டில் சாப்பிட்டார் –
என்றெல்லாம் வரும் செய்திகளை வைத்து அப்படி சொல்கிறார்கள், நான் கேட்கிறேன் அவர்களை பார்த்து நான் கேட்க விரும்புகிறேன். அந்த ஒரு சந்திப்புக்குப் பின்னால் எத்தனை நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை அவர்கள் முதலில் அறிந்திருக்கவேண்டும்.
நரிக்குறவர் வீட்டுக்கும், இருளர் வீட்டுக்கும் சென்றதன் மூலமாக, ‘இது நமது அரசு’ என்ற நம்பிக்கையை, அவர்கள் மனதில் ஆழமாக நாம் விதைத்திருக்கிறோம்! அதுதான் முக்கியமானது! ஏதோ ஒரு நாள் அவர்களது வீட்டுக்குச் சென்றதன் மூலமாக எனது கடமை முடிந்துவிட்டதாக நான் நினைத்து, அத்துடன் நான் சும்மா இருந்து விட்டேனா?
இதே ராணிப்பேட்டையில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் உங்களை எல்லாம் வந்து சந்தித்தேன். மனுக்களைப் பெற்றேன். அனைவரது கோரிக்கையையும் கேட்பதற்காக அன்றைக்கு வந்தேன். பலர் எனது கையில் மனுக்களை கொடுத்தீர்கள். அதில் சில பேர்களை நான் பேச வைத்தேன். அப்போது சில நரிக்குறவர்கள் பெண்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் மேடைக்கு பக்கத்தில் வந்து, நாங்களும் பேச வேண்டுமென்று கேட்டார்கள். பேச வைத்தோம். அவர்கள் கோரிக்கையைக் கவனமாகக் கேட்டேன்.
ஆட்சிக்கு வந்ததும் அதையெல்லாம் மறந்து விடவில்லை என்பதன் அடையாளமாகத்தான், தற்போது பல்வேறு திட்டங்களைச் செய்து கொடுத்தும் வருகிறோம்.
இன்றைக்கு 293 நரிக்குறவர் இன மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த ராணிப்பேட்டை விழாவிலேயே இருளர் பழங்குடியினர் மக்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டிருக்கிறது.
குடும்ப அட்டை,
இலவச வீட்டுமனைப் பட்டா,
வீடு ஒதுக்கீடு ஆணை,
முதியோர் உதவித்தொகை,
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை,
வாக்களார் அடையாள அட்டை,
சாதிச் சான்றிதழ்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அட்டை,
சேமிப்பு வங்கிக் கணக்கு
நலவாரிய அட்டைகள் ஆகியவற்றை வழங்கி,
விளிம்புநிலை மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீர்த்திருக்கிறோம்.
இன்று நலத்திட்ட உதவிகள் பெறக்கூடிய நபர்களில், 5,767 பேர் இருளர் இன மக்கள். இந்த மாவட்டத்தில் உள்ள 9 ஆயிரத்து 600 இருளர் பழங்குடியின மக்களில், 5,767 இருளர் பழங்குடியினர் இன மக்களுக்கு இன்றைய தினம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவிருக்கிறது.
அதேபோல் திருநங்கையர் 20 பேருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவிருக்கிறது.
9,522 மாற்றுத் திறனாளிகளுக்கு 15 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் செய்யப்படவிருக்கிறது.
101 மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்புக் குழந்தைகளின் தாய்மார்களுக்கு மின்மோட்டாருடன் கூடிய இலவசத் தையல் இயந்திரங்கள் வழங்கி, அவர்கள் மூலமாக, குறைந்த விலையில் மஞ்சள் பைகள் தயாரித்து விநியோகத்திட, நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.
இந்த அரசாங்கத்தினுடைய இதயம் என்பது இத்தகைய விளிம்புநிலை மக்களின் மகிழ்ச்சியில்தான் இருக்கிறது. பழங்குடியின மக்களுக்கு ஒரு அடையாள அட்டை கொடுப்பதும், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை உருவாக்குவதற்கு இணையானது! இவை விளம்பரத்துக்காகச் செய்யப்படுவது அல்ல.
பிள்ளைகளுக்குக் கொடுக்கும் புத்தகப் பைகளில், கடந்த ஆட்சியைப் போல, முதலமைச்சரான நான் எனது படத்தை போட்டுக் கொண்டு இருந்தால், அதை விளம்பரம் என்று சொல்லலாம். கழக ஆட்சி கடந்த ஆண்டு பொறுப்புக்கு வந்தபோது, நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். பள்ளிக்கல்வித் துறை சார்பில், கடந்த ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதலமைச்சர்களின் படத்தை அச்சிட்டுத் தயாரிக்கப்பட்ட பைகள் இன்னமும் மீதம் இருக்கிறது. அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று அமைச்சர், அதிகாரிகள் என்னிடத்தில் வந்து சொன்னார்கள். நான் உடனே சொன்னேன். அதைப் பயன்படுத்தாமல் போனால், 17 கோடி ரூபாய் அரசுக்கு வீண் இழப்பீடு ஏற்படும், செலவு ஏற்படும், பணம் வீணாகும், “பரவாயில்லை, முன்னாள் முதலமைச்சர்கள் படமே இருக்கட்டும்” என்று சொல்லி. அந்தப் பைகளைக் கொடுக்கச் சொன்னவன்தான் இந்த ஸ்டாலின் என்பதை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள்.
விளம்பரங்கள் எனக்குத் தேவையில்லை. ஏற்கனவே கிடைத்த புகழையும் பெருமையையும் காலமெல்லாம் கரையாமல் காப்பாற்றினால் போதும் என்று நினைப்பவன் நான்.
‘திராவிட மாடல்’ என்று சொன்னால், காலமெல்லாம் இந்த ஸ்டாலின் முகம்தான் நினைவுக்கு வரும்!
இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று சொன்னால் போதும்! என் குரல் நினைவுக்கு வரும் உங்களுக்கு!
27 விழுக்காடு இடஒதுக்கீட்டை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்த்தது யார்? என்றால், என் முகம்தான் நினைவுக்கு வரும்!
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் என்பது, யார் ஆட்சிக் காலத்தில் அமலானது? என்று கேட்டால், என் முகம் தான் நினைவுக்கு வரும்.
தமிழ்நாட்டின் அம்பேத்கரான பெரியாருக்கும், இந்தியாவின் பெரியாரான அம்பேத்கருக்கும், அவர்களது பிறந்தநாளை சமூகநீதி நாளாகவும், சமத்துவ நாளாகவும் அறிவித்தது யார்? என்றால், என் பெயர் தான் நினைவுக்கு வரும்.
கையில் காசு இல்லை என்றாலும் போகவேண்டிய இடத்திற்கு போய்ச் சேரலாம் என்ற நம்பிக்கையுடன், பேருந்துகளில் ஏறும் பெண்களுக்கு எந்நாளும் என் முகம்தான் நினைவுக்கு வரும். நான் என்று சொல்வது தனிப்பட்ட இந்த ஸ்டாலின் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நாம் அனைவரும் சேர்ந்த கூட்டுக்கலவைதான் நான்.
என்றும் உங்களில் ஒருவன் தான் நான்! முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பதால் மட்டும் நான் அல்ல! உங்கள் அனைவரது சேர்க்கையாக நான் அமர்ந்திருக்கிறேன். நாம் அனைவரும் சேர்ந்து நடத்தும் ஆட்சி தான் இது! நமக்கான ஆட்சி தான் இது!
இந்த ஆட்சியானது கடந்த பத்தாண்டு காலமாக, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சரிவைச் சீர் செய்து கொண்டிருக்கிறது.
பள்ளத்தை நிரப்பிவருகிறது!
துன்பங்களை போக்கி வருகிறது!
தொய்வைத் துடைத்து வருகிறது!
அதே சமயத்தில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க எந்நாளும் உழைத்து வருகிறது. மீண்டும் சொல்கிறேன், நேற்றைக்கும் சொன்னேன், என் சக்தியை மீறியும் உங்களுக்காக உழைப்பேன், உழைப்பேன்!
இந்த உதயசூரிய அரசு உழைக்கும் உழைக்கும்! என்று உறுதியளித்து விடைபெறுகிறேன்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!