Tamilnadu
ஒன்றிய அரசின் காலம் தாழ்த்தும் போக்கால் மீண்டும் பலியான ஒரு மாணவர் உயிர் : NEET கொடூரம் !
தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்துவரும் நீட் தேர்விலிருந்து மாணவர்களுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதற்காக தி.மு.க அரசு பல்வேறு நடவடிக்கையை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தது.
குறிப்பாக, தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடங்கப்பட்டது. ஒன்றிய அரசால் நடத்தப்படும் ‘நீட்’ தேர்வால் மாணவர்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதா என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் டாக்டர் ஏ.கே.இராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
பின்னர் ‘நீட்’ தேர்வினால், சமுதாயத்தில் பின்தங்கியோர் மருத்துவக் கல்வியைப் பெற முடியவில்லை என்பதைப் புள்ளி விபரங்களோடு இந்தக் குழு சொன்னது. அதன்பிறகு தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவை ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
ஆனாலும் இதுவரை ஒன்றிய பா.ஜ.க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாக இன்று மேலும் ஒரு மாணவன் நீட் தேர்வால் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப் - ஜெயந்தி தம்பதி. இதில் பிரதாப் ஆட்டோ ஓட்டுநராகவும், மனைவி ஜெயந்தி இட்லி வியாபாரம் பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகனான தனுஷ் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அரசு பள்ளியில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றுள்ளார்.
கடந்த கல்வியாண்டில் நீட் தேர்வில் எழுதி தேர்ச்சியும் பெற்றுள்ளார். பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த தனுஷ் 159 மதிப்பெண்கள் பெற்று மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றுள்ளார். அவர் எடுத்த மதிப்பெண்ணிற்கு அரசு மருத்துவக் கல்லூரி கிடைக்காமல் போயுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க போதிய பணம் இல்லாத காரணத்தினால் மீண்டும் நீட் தேர்விற்காக பயிற்சி பெற ஆரம்பித்துள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் மூலம் அரசு மருத்துவக் கல்லூரியில் பயில வேண்டும் என்ற கனவோடு இரவு பகல் பாராமல் தனுஷ் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
மேலும் வீட்டின் ஏழ்மை காரணமாக தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற முடியாத சூழ்நிலையில், தனது சொந்த முயற்சியில் வீட்டில் இருந்தே படித்து வந்துள்ளார். இந்நிலையில், வரும் ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து, தனுஷ் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனது சகோதரரிடம் ஆங்கிலத்தில் அனைத்தும் இருப்பதால் படிப்பதற்கு மிகவும் கடினமாக இருப்பதாக கூறி வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெல்ட்டால் தூக்கிட்டு திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னால் படிக்க முடியாத காரணத்தினாலும், தன்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என தெரிவித்து வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சூளைமேடு போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனுஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.
இதுகுறித்து தனுஷின் சகோதரர் கரண் தெரிவிக்கும் போது, தனது சகோதரர் தனுஷ் முதல் முறை நீட் தேர்வு எழுதி அரசு மருத்துவக் கல்லூரி சேர்வதற்கான மதிப்பெண் எடுக்காததால், மீண்டும் நீட் தேர்வு எழுத பயிற்சி மேற்கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் இருப்பதால் அரசுப்பள்ளியில் படித்த தனக்கு படிப்பது மிகவும் கடினமாக இருப்பதாகவும்,, மருத்துவ சீட் கிடைக்குமா என்று பயத்தை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். படிப்பில் சரியான பாதை தேர்ந்தெடுத்து செல்கிறேனா என்ற மனக்குழப்பத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் போல் பல உடல் சம்பந்தப்பட்ட விஷயங்களை தன்னுடன் சகோதரர் தனுஷ் பகிர்ந்து கொண்டு வந்துள்ளதாகவும், தான் மருத்துவர் ஆனவுடன் அனைத்து ஊடகங்களும் நம் வீட்டின் வாசலில் வந்து தன்னை பேட்டி எடுப்பார்கள் என்று ஆசை ஆசையாக கூறிய தன் சகோதரன் இறப்பிற்கு அனைத்து ஊடகங்களும் வந்துள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு தீவிரப் பயிற்சி மேற்கொண்ட அரசுப் பள்ளியில் படித்த பழங்குடியின மாணவன், நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!