Tamilnadu

”ரூ.400 கோடி செலவில் காலணி உற்பத்தி பூங்கா” : ராணிப்பேட்டை மக்களை மகிழ்வித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.32.18 கோடி செலவிலான 23 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.22.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, "ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ. 400 கோடி செலவில் 250 ஏக்கர் பரப்பளவில் மெகா காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இன்றைய நாளில் மட்டும், 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், "கன்னிகாபுரம் - பொன்னமங்கலம் சாலையில், செய்யாற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைக்கும் திட்டப்பணியும் - 7 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில், புதிய பணிமனைக் கட்டடங்கள் (Work Shop) அமைக்கும் திட்டப்பணிகளும் -

இராணிப்பேட்டையில் 10 கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் - புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி மற்றும் ரூ.48 இலட்சம் மதிப்பீட்டில், ஆற்காட்டில் கட்டப்படவுள்ள கால்நடை மருந்தகம் அமைக்கும் திட்டப்பணி என்று மொத்தம் 22 கோடியே 19 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நான்கு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகள், இன்று திறப்பு விழா கண்டிருக்கிறது.

118 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. 13 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாலாஜா, சோளிங்கர், ஆற்காடு, கலவை ஆகிய பகுதிகளில், புதிய வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் சோளிங்கர், வாலாஜா மற்றும் கலவை வட்டாட்சியர் குடியிருப்புக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

5 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஆற்காடு மற்றும் அரக்கோணம் பகுதிகளில், ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் - ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 2 ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள், 4 அங்கன்வாடி மையக் கட்டடங்கள், 2 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 2 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டடங்கள் -

76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், வாலாஜா வட்டாரம் லாலாபேட்டை மற்றும் திமிரி வட்டாரம் கலவை ஆகிய பகுதிகளில் துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடங்கள் - 5 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 30 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடம் -

5 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அரக்கோணம் வட்டம், அரிகில்பாடி கிராமத்தில் கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, தளமட்ட சுவர் (தடுப்பணை) - ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக சொல்வதாக இருந்தால், 150 கோடியே 58 இலட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 24 முடிவுற்ற திட்டப் பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்ல, தோல் மற்றும் காலணி உற்பத்தித் தொழிலில், இராணிப்பேட்டை மாவட்டம் சிறந்து விளங்குகிறது. காலணி மற்றும் அது சார்ந்த பொருட்களின் உற்பத்தியை, சர்வதேசத் தரத்திற்கு மேலும் உயர்த்தி, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இப்போது நான் ஒரு புதிய அறிவிப்பை மகிழ்ச்சியோடு வெளியிடப் போகிறேன். காந்தி, அதேபோல இராணிப்பேட்டை தொகுதியில் இருக்கக்கூடியவர்கள், இந்த மாவட்டத்தில் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் பெருமைப்படக்கூடிய வகையில் ஒரு அறிவிப்பு.

பனப்பாக்கத்தில், 400 கோடி ரூபாய் செலவில் 250 ஏக்கர் பரப்பளவில் மெகா காலணி உற்பத்தி பூங்கா ஒன்று அமைக்கப்படும். நேற்று மாலை வேலூரில் நடைபெற்ற அரசு விழாவில், நம்முடைய அமைச்சர் துரைமுருகன் அவர்கள் எடுத்து வைத்த அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, காட்பாடியில் சிப்காட் அறிவித்தேன். இன்று இராணிப்பேட்டையில் இந்தப் பூங்காவை அறிவித்திருக்கிறேன்.

இதனால், சர்வதேச அளவில், தலைசிறந்த காலணி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக இராணிப்பேட்டை மாவட்டம் மேலும் வலுப்பெறும். இந்தப் பூங்கா நிறுவப்படும் காரணத்தால், 20 ஆயிரம் பேருக்கு, குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்த ஓராண்டு காலத்தில், கழக அரசின் சார்பாக, இராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்குச் செய்து தரப்பட்டுள்ள நன்மைகளையும், இந்த நேரத்தில் நான் நினைவூட்டுவது என்னுடைய கடமையாக, பொருத்தமாகக் கருதுகிறேன். முதல்வரின் முகவரி திட்டத்தின்கீழ் 9,309 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

1,696 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. 527 பேருக்கு கல்விக் கடன் தரப்பட்டுள்ளது. 1 கோடியே 69 ஆயிரத்து 510 பேருந்து பயணங்களை கட்டணமில்லாமல் மகளிர் மேற்கொண்டுள்ளார்கள். 24,031 பேரின் நகைக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப் போவதாக சொன்னோம். அதையெல்லாம் கூட கிண்டல் செய்தார்கள். கேலி செய்தார்கள். விமர்சனம் எல்லாம் செய்தார்கள். ஆக, அதையெல்லாம் சரியாக இருக்கிறதா? என்று சரிபார்த்து இப்போது படிப்படியாக செய்திருக்கிறோம். அந்த வகையில் இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், 24,031 பேரின் நகைக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆறு லட்சம் பேர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் சிகிச்சை பெற்றுள்ளார்கள். 346 பேர் இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் பயனடைந்துள்ளார்கள். ஆவின் பால் விலையைக் குறைத்ததன் மூலமாக 90 ஆயிரம் நுகர்வோர் பயனடைந்துள்ளார்கள்.

2,082 உழவர்களுக்கு புதிதாக இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 18,377 பேர் வருமுன் காப்போம் திட்டம் மூலம் பயனடைந்துள்ளார்கள். 3 லட்சத்து 30 ஆயிரத்து 366 பேர் கொரோனா கால நிவாரண நிதி பெற்றுள்ளார்கள்.

3 லட்சத்து 30 ஆயிரத்து 91 பேர் 14 வகையிலான மளிகைப் பொருள்களைப் பெற்றுள்ளார்கள். 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் 22 வகையிலான மளிகைப் பொருள்களைப் பெற்றுள்ளார்கள். 2,437 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த, 34 ஆயிரத்து 987 பேரின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 84 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது.

1 லட்சத்து 82 ஆயிரத்து 950 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. 1,680 குடும்பங்களுக்கு வேளாண் உபகரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 6 திருக்கோயில்கள் 12 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலமாக 4 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளார்கள்.

ஊரக வளர்ச்சித் துறை மூலமாகப் பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 7,289 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 361 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. 239 இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி தரப்பட்டுள்ளது. 300 புதிய சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன.

நான்கு நகராட்சிகளில் 2 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் பூங்காக்கள். 40 சாலைப் பணிகள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம், ஆனால், நேரம் கடந்து கொண்டிருக்கிறது. இவை எல்லாம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அல்ல, செய்து முடிக்கப்பட்ட திட்டங்கள். ‘இவை அனைத்தும் ஓராண்டு காலத்தில், ‘செய்து முடிக்கப்பட்ட’ திட்டங்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதில் ஏறக்குறைய 70 சதவீதம், 80 சதவீதம் நாம் நிறைவேற்றி இருக்கிறோம் என்று சொன்னால், இவை அனைத்தையும், தாண்டிய அளவில் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய திட்டங்கள். அதனால்தான் உங்கள் முன்னால் இன்றைக்கு கம்பீரமாக நான் நின்று கொண்டு இதை தெளிவுப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Also Read: அரசினர் சிறுவர் இல்லத்தில் ‘திடீர்’ விசிட்.. நெகிழ்ந்து போன மாணவர்கள் - கலந்துரையாடிய முதலமைச்சர் !