Tamilnadu

“நடிகை மீனாவின் கணவர் கொரோனா தொற்று பாதித்து உயிரிழக்கவில்லை” : புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் !

குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை மீனா. பல முன்னணி நடிகர்களுடம் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்தவர். இன்று தமிழ் சினிமாவில் பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.

இவர் 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பெங்களூருவை பூர்வீகமாக கொண்டவர் வித்யாசாகர். நடிகை மீனா - வித்யா சாகர் தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். அவரிம் ஒருசில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கடந்த சில மாதங்களாகவே நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பெற்றுவந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நுரையீரல் செயலழிந்துள்ளது.

இதனால், உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். ஆனால், தானமாக உறுப்புகள் கிடைக்காத நிலையில், அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வந்ததாக மருத்துவர்கள் தரப்பில் கூறிவந்துள்ளனர்.

மாற்று உறுப்பு தானம் கிடைக்க மேலும் தாமதமான நிலையில், வித்யாசாகர் இன்று உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். வித்யாசாகருக்கு புறாக்களின் எச்சங்களினால் ஏற்பட்ட அலர்ஜி காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவர்களின் அறிக்கை முழுமையாக வெளியாவில்லை.

இந்நிலையில் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துத் தெரிவித்து வந்த நிலையில், நடிகை மீனாவின் கணவர் கொரோனா தொற்று பாதித்து உயிரிழக்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “நடிகை மீனா கணவர் கடந்த டிசம்பர் மாதம் நுரையீரல் பாதித்து, கடந்த 6 மாதங்களாக சிகிச்சைகள் பெற்றுவந்ததுள்ளார்.

இந்நிலையில் அவரின் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ள அவருக்கு பொருந்தும் உறுப்புகள் பெற அரசு சார்பில் பல முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால்ம் அவருக்கு பொருந்த கூடிய உறுப்புக் கிடைக்கவில்லை. அவருக்கு கொரோனா பாதித்தது பிப்ரவரி மாதம். ஆனால், அவர் நேற்று இறந்தது கொரோனா தொற்று காரணமாக இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: நடிகை மீனாவின் கணவர் திடீர் மரணம் : நுரையீரல் பாதிப்பு.. புறாக்களின் எச்சம் காரணமாக அலர்ஜி ?