Tamilnadu
“இரண்டே இரண்டு நல்லவர்கள் சேர்ந்தால்.. அறிவொளி கொடுக்கும் ஜமால் முகமது கல்லூரி” : முதலமைச்சர் புகழாரம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு, Global Jamalians Block கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் கல்லூரி முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது முதலமைச்சர் ஆற்றிய உரை பின்வருமாறு :- “திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முப்பெரும் விழாவில் காணொளி காட்சியின் மூலமாகப் பங்கெடுத்து உங்கள் முன்னால் உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நேரில் வந்து சந்திக்கவேண்டும், இந்த விழாவில் உங்களோடு நேரடியாகப் பங்கெடுக்க வேண்டும் என்று நான் விரும்பினாலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி சில நாட்களாக நான் காய்ச்சலில் அவதிப்பட்டக் காரணத்தினால், சற்று வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டியதாக ஒரு சூழ்நிலை அமைந்திருக்கிறது.
சிறிது காய்ச்சல் இருந்ததாலும், ஓய்வெடுத்து காய்ச்சல் குறைந்ததும் வெளியூர் பயணங்களை ஒரு வார காலத்திற்காவது தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை சொன்னார்கள். என்ன தான் நான் மாநிலத்தினுடைய முதலமைச்சராக இருந்தாலும், மருத்துவர்கள் வார்த்தைக்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும், அந்த வகையில், திருச்சிக்கு நேரடியாக வர இயலவில்லை என்பதை மிகுந்த வருத்தத்தோடு உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த விழாவில் என்னை பங்கெடுக்க வைக்க வேண்டுமென்று நம்முடைய அருமைச் சகோதரர் அமைச்சர் நேரு அவர்களும், நம்முடைய பேராசிரியர் அய்யா காதர் மொய்தீன் அவர்களும் மிகவும் அக்கறையாக இருந்தார்கள். அதற்காக தேதியும் பெற்றார்கள். திருச்சி என்பதற்காக மட்டும் அவர்கள் ஆர்வத்தைக் காட்டவில்லை. அதையும் தாண்டிய ஒரு பாசம் அவர்களுக்கு இருந்திருக்கிறது என்பதை பின்னர் தான் நான் தெரிந்து கொண்டேன். அது என்னவென்றால், அவர் படித்த கல்லூரி இந்த ஜமால் முகமது கல்லூரி. இந்தக் கல்லூரியின் பழைய மாணவர்கள் என்ற அடிப்படையிலும் இந்த விழாவில் நான் பங்கெடுக்க ஆர்வம் காட்டினார் நேரு அவர்கள்.
அவர் மட்டுமல்ல, நம்முடைய வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சராக இருக்கும் அருமைச் சகோதரர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களும், உங்கள் கல்லூரியில் படித்தவர் தான். அந்த வகையில், இரண்டு அமைச்சர்களை தமிழ் நாட்டுக்குக் கொடுத்த கல்லூரி இந்த ஜமால் முகமது கல்லூரி. அதேபோல, மேடையில் அமர்ந்திருக்கக்கூடிய நம்முடைய மரியாதைக்குரிய பேராசிரியர் அய்யா காதர் மொய்தீன் அவர்களும், இந்தக் கல்லூரியில் படித்தவர் தான். தமிழக அரசியல் பண்பாட்டுக்கு இலக்கணமாக அரசியல் தலைவர்களில் ஒருவர் நம்முடைய காதர் மொய்தீன் அவர்கள்.
இதே போல் இக்கல்லூரியில் படித்தவர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக, ஐ.பி.எஸ் அதிகாரிகளாக, கல்வியாளர்களாக, பேராசிரியர்களாக, தொழிலதிபர்களாக விளங்கி வருகிறார்கள்.
திருச்சியின் அடையாளங்களில் ஒன்று ஜமால் முகமது கல்லூரி. கல்லூரியினுடைய நிறுவனர் நாள் விழா, கல்லூரி வரலாற்றைத் தொகுக்கும் பெருந்திட்டத் தொடக்க விழா, குளோபல் ஜமாலியன் பிளாக் கட்டட அடிக்கல் நாட்டு விழா ஆகிய இந்த மூன்று விழாக்களை இணைத்து முப்பெரும் விழாவாக ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்.
தீரர்களின் கோட்டம் என்று அழைக்கப்படுவது இந்த திருச்சி மாநகரம். அங்கே பல்வேறு கல்விக் கோட்டங்களும் இருக்கின்றன. அதில் தலைசிறந்த கல்விக் கோட்டம் தான் இந்த ஜமால் முகமது கல்லூரி.
நாட்டுப் பற்றுமிக்க தலைசிறந்த தமிழர்கள் இருவரால் உருவாக்கப்பட்ட கல்லூரி தான் இந்த ஜமால் முகமது கல்லூரி. அந்த தலைசிறந்த இரண்டு தமிழர்களில் ஒருவர் எம்.ஜமால் முகமது அவர்கள். மற்றொருவர் என்.எம். காஜாமியான் இராவுத்தர் அவர்கள்.
1931 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்கள் இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்றபோது, அவருடன் சென்றவர் தான் ஜமால் முகமது அவர்கள். இந்தியாவின் விடுதலைப் போராட்ட நிதிக்காக அண்ணல் காந்தி அடிகளிடம் தொகை நிரப்பப்படாத காசோலையை வழங்கிய தேசியவாதிதான் ஜமால் முகமது அவர்கள்.
அதேபோல் காஜாமியான் இராவுத்தர் அவர்களும் விடுதலைப் போராட்ட வீரர் தான். தேசியத்தின் அடையாளமாக அப்போது இருந்த கதர் துணிகளைத் தயாரிக்க திருச்சியில் கதர் ஆலையை நிறுவியவர் ராவுத்தர் அவர்கள். தான் தயாரித்த கதர் துணியை ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கினார். தேசிய இயக்கத்தில் மட்டுமல்ல, சுயமரியாதை இயக்கத்துடனும் தொடர்பு கொண்டவர் தான் இவர். தந்தை பெரியார் அவர்களுடன் நெருக்கமான நண்பராக இருந்தவர் ராவுத்தர் அவர்கள். 1938-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது தனது மனைவியுடன் சேர்ந்து பங்கெடுத்தவர் ராவுத்தர் அவர்கள்.
இத்தகைய காஜாமியான் ராவுத்தர் அவர்கள் 90 ஏக்கர் நிலத்தைத் தந்திருக்கிறார். அதில் ஜமால் முகமது கட்டடம் கட்டித் தருகிறார். அதுதான் இன்று நாம் பார்க்கக்கூடிய ஜமால் முகமது கல்லூரி ஆகும். எழுபது ஆண்டுகளைக் கடந்து அறிவியக்கமாகச் இந்தக் கல்லூரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இரண்டே இரண்டு நல்லவர்கள் சேர்ந்தால், எத்தனை பேருக்கு அறிவொளி கொடுக்க முடியும் என்பதன் அடையாளமாக இந்த ஜமால் முகமது கல்லூரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஜமால் முகமது அவர்களாக இருந்தாலும், காஜாமியான் ராவுத்தராக இருந்தாலும் இருவரும் பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள். பல்வேறு நிறுவனங்களை நடத்தக்கூடிய திறம் படைத்தவர்கள். ஆனால் அவர்கள் இந்த நாட்டு மக்களுக்குக் கல்வியைக் கொடுக்க நினைத்தார்கள். ஏழை, எளிய பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு உயர் கல்வியைக் கொடுக்க நினைத்தார்கள். அதற்காக அவர்கள் இரண்டு பேரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அதை விட முக்கியம் என்னவென்று கேட்டால், ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது எளிது. அதைத் தொடர்ச்சியாக நடத்துவதும் நோக்கம் சிதையாமல் நடத்துவதும், அப்படி நடத்தி வளர்ப்பதும் சாதாரணமான காரியம் அல்ல.
ஜமால் முகமது காஜாமியான் ராவுத்தர் ஆகிய இருவரது வழித்தோன்றல்களும் தங்களது முன்னோர்களது நோக்கம் கொஞ்சம் கூட சிதையாமல், இந்தக் கல்வி நிறுவனத்தை நடத்தி வருவதை அறிந்து நான் உள்ளபடியே பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன், அதற்காக அவர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் முன்னோர்களுக்கு நீங்கள் செய்யும் உண்மையான அஞ்சலி என்பது இதுதான்.
நாமும் ஒரு கல்வி நிறுவனத்தை நடத்துகிறோம் என்று இல்லாமல் அதனை தரமானதாக நடத்துவதில் இந்த நிறுவனம் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது. அதனால் தான் கல்வி குறித்த தேசிய தரமதிப்பீட்டில் “ஏ” தரத் தகுதியைப் பெற்றிருக்கிறது.
இந்திய அளவில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 100 கல்லூரிகளில் 65 ஆவது இடத்தில் ஜமால் முகமது கல்லூரி இருப்பதை அறிந்து நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். இது இன்னும் முன்னோக்கி வர வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துகளை நான் சொல்ல விரும்புறேன்.
சிறுபான்மையினர் கல்வி நிறுவனமாக இருந்தாலும், அனைவரும் பயிலும் நிறுவனமாக இது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல், ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இணைந்து பயிலக்கூடிய கல்லூரியாகவும் இருக்கிறது.
அந்த வகையில் சமத்துவக் கல்லூரியாகவும், இந்த ஜமால் முகமது கல்லூரி செயல்பட்டு வருவதை அறிந்து நான் பாராட்டுகிறேன். தனித்திறமைக்கு முக்கியத்துவம் தரும் கல்லூரியாகவும் இது அமைந்திருக்கிறது.
இந்திய அரசு சார்ந்த நிறுவனங்களின் நிதி உதவியை பெற்று ஆராய்ச்சிகள் செய்து வரும் நிறுவனமாகவும் இது இருக்கிறது.
இந்தக் கல்லூரி மாணவி ரேஷ்மி பரத நாட்டியக் கலையில் உலக சாதனை புரிந்துள்ளார்.
பல்கலைக் கழக மானியக் குழு ஆற்றல் வளத் தனித்தகுதி பெற்ற கல்லூரி எனப் பாராட்டி இருக்கிறது.
இசை நாடகக் கலை மன்றம், தேசிய மாணவர் படை, தேசிய நாட்டு நலப்பணி.
இளையோர் ரெட் கிராஸ் போன்ற அமைப்புகளும் இங்கு மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
டெல்லியில் நடைபெறக்கூடிய குடியரசு தின அணிவகுப்பில் கடந்த 16 ஆண்டுகளாக இந்தக் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் அணிவகுத்து வருகிறார்கள்.
அனைத்து விளையாட்டுப் போட்டிகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.
இத்தகைய தனித்திறமைகளை வளர்ப்பதில் அனைத்துக் கல்லூரிகளும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கல்வி, படிப்பு, பட்டம் ஆகியவற்றைத் தாண்டிய தனித்திறமைகளும், பல்துறை அறிவாற்றலும் இருக்கக்கூடிய இளைஞர்களால் தான் எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்பட முடியும், அதிக வளர்ச்சியை அடைய முடியும். அந்த நோக்கத்துக்காகத் தான் 'நான் முதல்வன்' என்ற திட்டத்தை நம்முடைய தமிழக அரசு தொடங்கி இருக்கிறது. இது என்னுடைய கனவுத் திட்டம். அதனால் தான் என்னுடைய பிறந்த நாளான மார்ச் 1 அன்று அந்தத் திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன்.
தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்கள் கல்வியில், அறிவாற்றலில், பன்முகத் திறமையில் முதல்வனாகத் திகழ வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டத் திட்டம் தான் “நான் முதல்வன்” என்கிற அந்தத் திட்டம். நேற்றைக்குக்கூட இந்தத் திட்டத்தினுடைய ஒரு பகுதியாக “கல்லூரிக் கனவு” என்கிற உயர் கல்வி வாய்ப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை சென்னையில் நான் தொடங்கி வைத்தேன். தொடர்ந்து மாநிலம் முழுவதும் அடுத்த சில நாட்களில் இந்த நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.
பள்ளிக் கல்வியில் பெருந்தலைவர் காமராசர் காலமும், கல்லூரிக் கல்வியில் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் காலமும், சிறப்பாக விளங்கியதைப் போல, இந்த ஆட்சிக் காலம் உயர்கல்வியின் ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாகத் திகழ வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த இலக்கு நோக்கிய பயணத்தில் ஜமால் முகமது போன்ற தனியார் கல்வி நிறுவனங்களும் துணை நிற்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
கல்லூரிக் கல்வியைத் தேடி வரும் இளைஞர்களை, பட்டதாரிகளாக மட்டுமல்ல, அறிவாளிகளாக, அறிவுக்கூர்மை கொண்டவர்களாக, பன்முகத் திறமை கொண்டவர்களாக, வளர்த்தெடுக்க நீங்கள் திட்டமிட வேண்டும். ஜமால் முகமது கல்லூரியில் படித்த மாணவர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.
இக்கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கமானது உலகின் 19 நாடுகளில் இயங்கி வருவதைப் பார்க்கும் போது, எத்தகைய திறமைசாலிகளை உருவாக்கி இருக்கிறீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. இப்படி படித்த மாணவர்கள் தங்கள் கல்லூரியையும் மறந்துவிடாமல், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களது கல்விக்கு உதவி செய்து வருவதை அறியும் போது, கல்வியுடன் சிறந்த மனிதாபிமானத்தையும் ஊட்டும் நிறுவனமாக நீங்கள் செயல்பட்டு வருவதை உணர முடிகிறது.
இத்தகைய சிறப்புமிகு கல்லூரியின் முப்பெரும் விழாவில் காணொளி மூலமாகக் கலந்து கொண்டு என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவிக்க விரும்புகிறேன். பின்பு ஒரு முறை இங்கே வரவேற்புரை ஆற்றுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னதுபோல, நிச்சயம் வாய்ப்புக் கிடைக்கும் போது நான் உங்களுடைய கல்லூரிக்கு வருவேன் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து, விடைபெறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?