Tamilnadu

3 குழந்தைகளுக்கு தாயான மாற்றுத்திறனாளி பெண் : அடையாளம் தெரியாத நபர்களால் நடந்த கொடூரம் - விசாரணை தீவிரம்!

கோவை மாவட்டம், பேரூர் அருகேயுள்ள பச்சாபாளையம் அடுத்து ரங்காநகர் என்ற பகுதியில், ஒரு சிறிய பாழடைந்த கட்டடத்தில், மாற்றுத்திறனாளியான இளம்பெண்ணும் (29), அவரது தந்தையும் (54) வசித்து வருகின்றனர். இந்த பெண்ணுக்கு திருமணம் ஆகாத நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஊர் மக்கள், அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக புகாரளித்துள்ளனர்.

இதனையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரில், மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடைபெற்ற விசாரணையில், தான் தனது தந்தையுடன் தனியே வசித்து வருவதாக தெரிவித்தார்,

அதோடு, குழந்தை குறித்த கேள்விக்கு, தனக்கு மார்ச் மாதம் ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை தற்போது விடுதியில் உள்ளதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இந்த குழந்தை பிறப்பிற்கு யார் காரணம் என்று கேட்டபோது, 'தெரியவில்லை' என்று, அந்த பெண் கூறினார்.

இதைத்தொடர்ந்து தந்தையிடம் நடைபெற்ற விசாரணையில், தானும் தனது மகளும் கடந்த 2020ம் ஆண்டு தொண்டாமுத்தூரில் வசித்து வந்ததாகவும், அப்போது தனது மகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததாகவும், ஆனால் அதற்கு யார் காரணம் என்பது தெரியாது என்றும் கூறினார்.

மேலும் அந்த குழந்தையை 'தொட்டில் குழந்தை' திட்டத்துக்கு கொடுத்து விட்டதாகவும், அதன்பின், கடந்த ஓராண்டாக இந்த கட்டடத்தில் தாங்கள் வசித்து வருவதாகவும் தெரிவித்தார். அது மட்டுமின்றி தற்போது பிறந்த பெண் குழந்தைக்கும் யார் காரணம் என்று தெரியவில்லை என்பதால், அதையும் 'தொட்டில் குழந்தை' திட்டத்திற்கு கொடுத்துவிட்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து திருமணம் ஆகாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் ரதியாக துண்புறுத்தியது யார்? அவருடன் வசித்து வந்தவர் அவரது தந்தையா? என்பது குறித்து காவல்துறைக்கு சந்தேகம் வலுத்த நிலையில், அந்த பெண்ணை பதுவம்பள்ளி மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகத்தில் சேர்த்தனர்.

பின்னர் மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி கொடுத்த புகாரின் அடிப்படையில், பேரூர் காவல்துறையினர் இந்திய தண்டனை சட்டம் 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு சட்டம் 2016 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: ஒரு முடிவும் இல்லை..10 நிமிடத்தில் 100 ட்விஸ்ட்.. இதுக்குதான் 10 நாளா அக்கப்போரா?