Tamilnadu

என்னது அவர் பெயர் எடுபிடி தவந்தசாமியா? : காட்டுத்தீயாய் பரவும் OPS ஆதரவாளர்கள் அடித்த போஸ்டர்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை பதவி உருவாக்கப்பட்டது.‌ தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைப்பாளராக, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீரீசெல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் பதவி வகித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமையின் கீழ் அ.தி.மு.க செயல்பட வேண்டும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அ.தி.மு.க-வில் ஒன்றைதலைமை என்ற முழக்கம் எழுந்துள்ளது. இதனால் இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த 8 நாட்களாக அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் மூத்த கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஆனால், ஒன்றை தலைமையில் இதுவரை ஒரு முடிவு எடுக்கப்படவில்லை. மேலும் ஜூன் 23ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுக் கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

EPS & OPS

இதையடுத்து திட்டமிட்டபடி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கூட்டத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என ஆவடி காவல் ஆணையருக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார். மேலும் அ.தி.மு.க கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்யத் தடை விதிக்க கோரி தாக்கல் செய்த கூடுதல் மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில், பெயர் தவந்தசாமி, மக்கள் அழைப்பது எடுபிடி, தொண்டர்கள் அழைப்பது துரோகி, காத்திருப்பது புழல் சிறைக்கு என கடுமையான சொற்களைக் கொண்டு விமர்சிக்கப்பட்டுள்ளது.

Also Read: “நான் ரெடி.. அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய தயாரா?” : சவால் விடுத்த அமைச்சர் மூர்த்தி !