Tamilnadu
‘அக்னிபாத்’ விவகாரம் : இராணுவத்தை காவியமாக்க மறைமுகத் திட்டம்.. : ஒன்றிய பா.ஜ.க அரசை கடுமையாக சாடிய வைகோ!
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் இராணுவ பணிகளை ஒப்பந்த முறைப்படி கையாண்டு வருகின்றன. அதன்படி இராணுவ வீரர்கள் குறுகிய காலத்திற்கு ஒப்பந்தம் செய்து பணியில் சேர வேண்டும். இதனால், அவர்கள் குறைந்த ஊதியத்துடன் தங்கள் இளமை காலத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்க முடியும்.
இது போன்ற ஒரு திட்டம் தான் தற்போது ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 'அக்னி பாத்' என்ற திட்டம். இந்த திட்டத்தின்படி ஒப்பந்தத்தின் மூலம் ஒரு இராணுவ வீரர் வெறும் 4 வருடங்கள் மட்டுமே இந்திய இராணுவ பணியில் இருக்க முடியும். மேலும் அவர்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின், இராணுவத்தில் வழங்கப்படும் எந்த ஒரு சலுகையும் அவர்களுக்கு வழங்கப்படாது.
ஒன்றிய அரசின் இந்த பாழாய்ப்போன திட்டத்தினால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இந்த திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ தனது கண்டனத்தை அறிக்கை மூலமாக வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "இந்திய இராணுவத்தின் தரைப் படை, கடற்படை, வான் படைக்கு வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்திற்கு, ஒன்றிய பா.ஜ.க. அரசின் அமைச்சரவை, ஜூன் 14 ஆம் தேதி ஒப்புதல் அளித்து உள்ளது.
இதன்படி, 17.5 வயது முதல் 21 வயது உடைய இருபாலரும் முப்படைகளில் சேரலாம்; தற்போதைய கல்வித் தகுதி, உடற்தகுதி நடைமுறைகள் அப்படியே பின்பற்றப்படும்; புதிய திட்டத்தில் பணியில் சேருவோர் ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுவர்.
இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் இராணுவத்தில் சேவையாற்ற வேண்டும்; அதன்பிறகு, ரூ.11 இலட்சம் முதல் 12 இலட்சம் வரை நிதி உதவியுடன் வெளியேற்றப்படுவார்கள். 25 விழுக்காட்டினர் மட்டுமே, இந்தியப் படையில் நிரந்தரப் பணி வாய்ப்பு பெறுவார்கள்; 75 விழுக்காட்டினர் வெளியேற்றப்பட்டு விடுவார்கள். இதுதான், அக்னி பாதைத் திட்டம்.
இந்தப் புதிய ஆள்சேர்ப்புக் கொள்கையின் முதன்மை நோக்கமே, இந்தியப் படையில் பெருகி வருகின்ற ஓய்வு ஊதியச் செலவுகளைத் தடுப்பதுதான் என்று, இராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது, நியாயம் அற்ற தேர்வு முறை; இந்தியப் படையில் ஒதுக்கீடு பெற்று இருக்கின்ற பல்வேறு பிரிவினரைக் கடுமையாகப் பாதிக்கும் என முன்னாள் இராணுவத்தினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
எனவே இந்தத் திட்டத்திற்கு எதிராக, பீகார், அரியானா, ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இளைஞர்கள் கொதித்து எழுந்து போராட்டத்தில் இறங்கி உள்ளனர். பீகாரில் இரயிலுக்குத் தீ வைத்துள்ளனர். நாட்டில், வேலையின்மை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இலட்சக்கணக்கான இளைஞர்கள் இந்தியப் படையில் சேர்ந்து பணியாற்ற விரும்புகின்றனர்.
இந்த நிலையில், தொழில் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை அமர்த்தி, பிறகு தூக்கி எறியும் நடைமுறை போன்று, ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை இந்தியப் படையில் சேர்த்துவிட்டு, தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு அளிக்காமல், 4 ஆண்டுகளில் தூக்கி வீசுகின்ற நடைமுறை, இராணுவத்தின் மதிப்பையும், மரியாதையையும் குறைத்து விடும்.
அதுமட்டும் அல்ல, ஒன்றிய பா.ஜ.க. அரசின் இன்னொரு உள்நோக்கம் இதில் ஒளிந்து இருக்கின்றது. “இந்திய இராணுவத்தைக் காவி மயம் ஆக்க வேண்டும் என்கின்ற, ஆர்.எஸ்.எஸ். கொள்கையைச் செயல்படுத்துவதற்கான மறைமுகத் திட்டமே ‘அக்னி பாதை’ என்ற ஐயம் ஏற்பட்டு இருக்கின்றது.
அதாவது, 21 வயதில் வெளியேற்றப்படுகின்ற அந்த இளைஞர்களுக்கு, 12 ஆம் வகுப்பு தேர்வுச் சான்று இதழ் தரப்படும் என்கிறார்கள். ஆனால், அதே காலகட்டத்தில், கல்லூரிகளில் பயில்கின்ற இளைஞர்கள், 20 வயதில் பட்டப் படிப்பை முடித்து, 21 வயதில் ஓராண்டு உயர்கல்வியும் முடித்து இருப்பார்கள். 4 ஆண்டுகள் படைப்பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கு, அதன்பிறகு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாக ஆகி விடும். இதுதான் உள்நோக்கம்.
இந்தத் திட்டத்தால், இந்திய இளைஞர்களின் ஒட்டுமொத்தமான எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும் என்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். ‘அக்னி பாதை’ திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்." இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!