Tamilnadu

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு.. சிவன் கோயிலுக்கு சீர் கொடுத்த இஸ்லாமியர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்!

புதுக்கோட்டை தஞ்சை மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நெடுவாசல் கிராமம். இந்த கிராமம் வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமமாக கருதப்படுகிறது.

இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ மங்கள நாயகி மற்றும் ஸ்ரீ பாலாண்ட ஈஸ்வரர் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் பரிவார மூர்த்திகளின் ஆலயங்களுக்கு கும்பாபிஷேக விழா நடத்த அக்கிராம மக்கள் திட்டமிட்டு திருப்பணி குழு அமைத்து, ஸ்ரீபாலாண்ட ஈஸ்வரருக்கு புதிய ராஜகோபுரம் மற்றும் கோயில் கட்டும் பணியும் மற்ற கோவில்களை புதுப்பிக்கும் பணிகளையும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அக்கிராம மக்கள் செய்து வந்தனர்.

திருப்பணி வேலைகள் முடிவடைந்து இன்று அக்கோவில்களில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.முன்னதாக கடந்த 13ஆம் தேதி முதல் பூஜை தொடங்கி அதன் பின்பு கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் வாஸ்து சாந்தி இரண்டாம் கால யாகபூஜை மூன்றாம் கால யாக பூஜை நான்காம் கால யாக பூஜை ஆகிய பூஜைகள் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையிலான வேத வித்வான்கள் செய்து வந்தனர்.

இதன் பின்பு இன்று காலை 11 மணிக்கு கோயில்களின் ராஜகோபுரம் பரிவார தெய்வங்களின் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. இந்த விழாவில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்த தோடு சாமி தரிசனமும் செய்தனர்.

மேலும் இந்த விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் விதமாக அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் பூ, பழம், இனிப்புகளுடம் சீர் வரிசைப் பொருட்களைக் எடுத்துக் கொண்டு, ஊர்வலமாக கோயிலுக்குக் சென்றனர்.

அப்போது சீர்கொண்டுவரும் இஸ்லாமியர்களை நெடுவாசல் மக்கள் மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பு அளித்தனர். பின்னர் இஸ்லாமியர்கள் கொண்டுவந்த சீர்வரிசைப் பொருட்களை கோயில் நிர்வாகத்தினர் பெற்றுக்கொண்டர், மேலும் இந்த சம்பவம் காண்போரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நாடு முழுவதும் வெடித்த இஸ்லாமியர்கள் போராட்டம்.. நுபுர் சர்மா-வுக்கு எதிராக வலுக்கும் குரல்!

இந்த விழாவில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சீவ வீ. மெய்யநாதன் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும் கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகளும் ஒரு மக்கள் ஒன்றிணைந்து நடத்தப்பட்டது. மேலும்யானை குதிரைகளின் ஆட்டமும் செண்டை மேளங்கள் முழங்கியதும் காண்போரை கவர்ந்தது.

Also Read: “விளையாட வயது ஒரு தடையில்லை..” : 64 வயதில் அசத்தும் லாரி டிரைவர் - இணையத்தை கவர்ந்த வைரல் வீடியோ!