Tamilnadu

"ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்".. அண்ணாமலைக்கு மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு,மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாகச் சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உள்ளிட்டோர் குருதி தானம் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், " கொரோனாவுக்கு முன்பு தமிழ்நாடு தான் குருதி கொடையாளர்கள் அதிகமாகக் கொண்ட மாநிலமாக இருந்தது. ஆண்கள் ஒரு ஆண்டுக்கு நான்கு முறையும் பெண்கள் ஒரு ஆண்டுக்கு மூன்று முறையும் தானம் அளிக்கலாம்.

கர்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் டெண்டர் திறக்கப்பட்டுள்ளது என்றும் இந்த நிதியாண்டிற்கான டென்டர் திறக்கப்பட்டு, பாலாஜி சர்ஜிகல் என்ற நிறுவனம் L-1 ஆக வந்துள்ளது. ஆனால், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறிய அனிதா டெக்ஸ் கோட் என்ற நிறுவனம் L-2 வாகவே வந்துள்ளது.

அண்ணாமலை குறிப்பிட்ட நிறுவனத்துக்கோ நபருக்கோ டெண்டர் வழங்கப்படவில்லை. விதிகளுக்கு உட்பட்டே ஒரு நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு கூறியதற்கு அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “கலைஞருக்கு சிலை வைப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி..” : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!