Tamilnadu

சிறிய KTM பைக்.. மகனின் ஆசையை நிறைவேற்றிய தந்தை: வழக்குப் பதிவு செய்த போலிஸ்!

சேலம் மாவட்டம், உம்பிளிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் கடந்த 20 வருடங்களாக மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவருக்கு செல்லபிரியா என்ற மனைவியும், கிருத்திகா, ஜோசிகா என இரண்டு மகள்களும்,மோகித் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் இவரது மகன் மோகித் தந்தையின் மெக்கானிக் கடைக்குச் செல்லும்போது எல்லாம் தனக்கு ஒரு சிறிய கே.டி.எம் பைக்கை தயாரித்துக் கொடுக்கும்படி கூறிவந்துள்ளார். இதனால் மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காகக் கடந்த ஒரு வருடமாக சிறிய கே.டி.எம் பைக்கை தயாரித்து வந்துள்ளார்.

பிறகு குடியரசு தினத்தன்று தயாரித்த கே.டி.எம் பைக்கை மகனுக்கு பரிசாகக் கொடுத்துள்ளார். பின்னர் மகன் பைக்கை ஓட்ட, தந்தை பின்னார் அமர்ந்து ஒரு ரவுண்டு வந்துள்ளனர். இவர்கள் செல்லும் வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமை இல்லாதபோது, சிறுவன் வாகனத்தை ஓட்டிச் சென்றால் சாலையில் செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படும் என புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து சட்டவிரோதமாக வாகனத்தைத் தயாரித்தாக தங்கராஜ் மீது தீவட்டிப்பட்டி போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Also Read: Layer Shot விளம்பரத்தை ஒளிபரப்ப தடை செய்த ஒன்றிய அரசு.. காரணம் என்ன?