Tamilnadu

பிரபல பிரியாணி கடையில் 50 கிலோ கெட்டுப்போன இறைச்சி.. சமையல் கூடத்திற்கு 'சீல்' வைத்த அதிகாரிகள்!

சென்னை வடபழனியில் உள்ள பிரபல அசைவ ணவகத்தில் கெட்டுப்போன இறைச்சிகளை பயன்படுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. இந்த தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை சென்னை நியமன அலுவலர் மருத்துவர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் அக்ககடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட 50 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கெட்டுப் போன இறைச்சிகளை சமையலுக்குப் பயன்படுத்தியதால் அக்கடைக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துடன், இரண்டாவது முறையாக கெட்டுப்போன இறைச்சியை சமையலுக்கு பயன்படுத்தினால் கடை நிரந்தரமாக மூடப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதிஷ்குமார், "கடையில் ஆய்வு செய்து காலாவதியான கோழிக்கறி, மீன், இறால், பிரியாணி கைப்பற்றப்பட்டது , 50 கிலோ வரை இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை ஆய்வகத்திற்கு அனுப்புவோம். ஆய்வு முடிவின்படி கடை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்று விற்பனையான உணவிற்கான பில்களை எங்களுக்கு இவர்கள் இன்னும் தரவில்லை. அதை கேட்டுள்ளோம். தற்காலிகமாக இந்த கடையின் சமையல் கூடம் மூடப்படுகிறது. 15 நாளுக்குள் கடையின் குளிர்சாதனம் உள்ளிட்ட உபகரணங்களை சரி செய்து, முறையான இறைச்சிகளை சமையலுக்கு பயன்படுத்துகிறோம் என நிறுவனம் சார்பில் எழுத்துபூர்வ உறுதிமொழியை எங்களுக்கு இவர்கள் தர வேண்டும். அதை ஏற்று ஆய்வு நடத்தி கடை தொடர்ந்து இயங்க அனுமதி தருவோம். தற்போது 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

Also Read: 12ம் வகுப்பு மாணவனை காவு வாங்கிய தந்தூரி சிக்கன்.. அசைவ உணவு பிரியர்கள் அதிர்ச்சி : தொடரும் மரணங்கள்!