Tamilnadu

சாலை விபத்து - ஆம்புலன்ஸ் டிரைவர், கைக்குழந்தை உட்பட 5 பேரின் உயிரை துரிதமாக காப்பாற்றிய ஊர்மக்கள்!

திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து சிகிச்சைக்காக பெண் அவரது கைக்குழந்தை மற்றும் உறவினர்களை அழைத்து கொண்டு திருச்சி அரசு மருத்துவமனை நோக்கி வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே அகிலாண்டபுரம் பகுதியில் வந்துகொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்த லாரியும் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில், 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் முகப்பு பகுதி அப்பளம் போல் நொருங்கியது. இந்த கோர விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் பழனிவேல் (35) மற்றும் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் செந்தில் குமார் (30), கவிதா ஆகியோர் படுகாயம் அடைந்து, ஈடுபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினர். மேலும், ஆம்புலன்ஸ் வாகனத்தின் உள்ளே இருந்த,17 நாள் கை குழந்தை மற்றும் உறவினர்கள் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை காப்பாற்றுவதற்காக, விபத்துக்குள்ளான வாகனங்களின் மீது கயிற்றை கட்டி லாரியையும் ஆம்புலன்ஸ் வாகனங்களை தனித் தனியாக பிரித்து ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர் மற்றும் பெண் உள்ளிட்ட 5-பேரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊர்மக்களின் துரித நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: எச்சரிக்கையை மீறி ஓடும் ரயிலில் ஏறி சாகசம் செய்த கல்லூரி மாணவர்கள்.. 19 வயது வாலிபர் தவறி விழுந்து பலி!