Tamilnadu
“கலைஞர் சிலையைத் திறக்க வெங்கையா நாயுடுவை அழைத்தது ஏன்?” : விழா மேடையில் முதலமைச்சர் நெகிழ்ச்சி உரை!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை சிறப்பித்துப் போற்றிடும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் இன்று (28.5.2022 சனிக்கிழமை) மாலை 5.30 மணியளவில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு அவர்கள் திறந்து வைத்தார்.
இன்று (28.5.2022) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு விழாவையொட்டி கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ "வாழ்விலோர் பொன்னாள்" என்று எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. தமிழ்நாட்டை - இந்தத் தமிழினத்தை - இந்தத் தமிழ்நிலத்தை வானுயரத்துக்கு உயர்த்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நம்முடைய நன்றியின் அடையாளமாக ‘தமிழினத் தலைவரின்’ இந்த மாபெரும் சிலை எழுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நிலையை உயர்த்தப் பாடுபட்டவர் என்பதால்தான், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் சிலை எழுப்பப்பட்டு வருகிறது. இன்று எழுப்பப்பட்டு இருக்கக்கூடிய சிலைக்கு இருக்கக்கூடிய சிறப்பு என்னவென்று கேட்டால், தந்தை பெரியாருக்கும், பேரறிஞர் அண்ணாவுக்கும் இடையில் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலை அமைந்திருக்கிறது. இது மிகமிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது!
தந்தை பெரியாரின் ஈரோட்டுப் பள்ளியிலே படித்தவன், பேரறிஞரின் காஞ்சிக் கல்லூரியிலே பயின்றவன் என்று தன்னைப் பற்றிக் கலைஞர் அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அதற்கு ஏற்பவே பெரியாருக்கும், அண்ணாவுக்கும் இடையில் தலைவர் கலைஞருடைய சிலை அமைந்திருக்கிறது.
இன்னொரு சிறப்பு என்னவென்று கேட்டால், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால், இந்த ஓமந்தூரார் தோட்டத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த மாபெரும் கட்டடம். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்காக கட்டப்பட்ட கட்டடம் இது. தற்போது மருத்துவமனையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், அது கம்பீரமாகக் கலைஞர் அவர்களின் கனவுக் கோட்டையாகவே எழுந்து நிற்கிறது. அங்குதான் அவரது சிலை எழுப்பப்பட்டிருக்கிறது. சிலையைத் திறந்து வைத்திருக்கக்கூடிய இந்த நிகழ்ச்சி, இந்த விழா நடக்கக்கூடிய இடம் கலைவாணர் அரங்கமானது, ஒருகாலத்தில் ‘பாலர் அரங்கம்’ என்று இருந்தது. அதனை மிகப்பிரமாண்டமாக கட்டி எழுப்பிக் கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்டியவரும் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்தான்.
இத்தகைய சிறப்புகள் கொண்ட விழாவுக்கு மகுடம் வைப்பதைப்போல, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் வருகை தந்து, தலைவர் கலைஞர் அவர்களின் சிலையைத் திறந்து வைத்திருக்கிறார்கள். நம்முடைய நட்புக்குரிய இனிய நண்பராகத்தான் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் எப்போதும் இருந்து வருகிறார். துரைமுருகன் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியதைப் போல, 2001-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் மிகக் கொடூரமான முறையில், அன்றைய ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்ட போது, அன்றைக்கு குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன் அவர்களும், பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்களும் துடிதுடித்துப் போனார்கள். அப்போது, அன்றைய ஆட்சியாளர்களைக் கடுமையாகக் கண்டித்து, கடுமையாக விமர்சித்தவர்தான் இங்கே வந்திருக்கக்கூடிய நம்முடைய வெங்கையா நாயுடு அவர்கள். அதே நட்பை இன்று வரையில் பேணிவரக் கூடியவராக தொடர்ந்து இருக்கிறார்.
தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலையைத் திறந்து வைக்க யாரை அழைக்கலாம் என்று நாங்கள் சிந்தித்த நேரத்தில், குடியரசுத் துணைத்தலைவர் அவர்களது முகம்தான் எங்களுடைய நெஞ்சில் தோன்றியது. அவரை நேரில் சந்தித்துக் கேட்ட நேரத்தில், மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டார். குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், மிகச்சிறந்த ‘நாடாளுமன்ற ஜனநாயகவாதி’ என்று பெயர் எடுத்தவர். மாநிலங்களவையை கொந்தளிப்பான சூழலிலும் திறம்படக் கையாண்டவர்.
எனவே தான், கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில், அறுபது ஆண்டுகள் பணியாற்றியதற்கு எத்தகைய திறமை வேண்டும் என்பது குடியரசுத் துணைத் தலைவர் அவர்களுக்குத் தெரியும். இன்று தலைவர் கலைஞரின் சிலையை அவர் திறப்பது மிக, மிக சாலப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. இந்திய நாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் என்ற மிக உயர்ந்த பதவியில் இருக்கும்போது, நம்முடைய தமிழினத் தலைவரின் சிலையை திறந்து வைத்திருப்பது இன்னும் பெருமைக்குரிய நிகழ்வாக இது நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் திறந்து வைத்தார்கள். தலைவர் கலைஞரின் சிலையை குடியரசுத் துணைத் தலைவராகிய நீங்கள் இங்கே வந்து திறந்து வைத்திருக்கிறீர்கள்.
இந்திய நாட்டின் பிரதமர்களை உருவாக்கியவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர்கள் பலரை உருவாக்கியவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். இந்திய அளவில் நிலையான ஆட்சியை உருவாக்குவதற்கும் துணை நின்றவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். தமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்து இந்த நவீன தமிழகத்தை உருவாக்கியவரும் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அத்தகைய மாமனிதருக்குத்தான் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக 1967-ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த நேரத்தில் கலைஞர் சொன்னார், "ஏழைக்குலத்தில் உதித்த ஒரு தமிழன் ஏறுகிறான் அரசு கட்டிலில்! இனி ஏழைக்கு வாழ்வு வந்தது" - என்று தலைப்புச் செய்தியாக ‘முரசொலியில்’ தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள், இரண்டு ஆண்டுகள்தான் ஆட்சியில் இருக்க இயற்கை அனுமதித்தது. அதன் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்று, இந்த இயக்கத்தை தனது இறுதி மூச்சுவரை காப்பாற்றியவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.
நம் தலைவர் கலைஞர் அவர்கள் பன்முகத் திறமைக் கொண்டவர்! எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், அந்தத் துறையில் கோலோச்சியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். இலக்கியமா? எத்தனை! எத்தனை! குறளோவியமும், தொல்காப்பியப் பூங்காவும், பொன்னர் சங்கரும் காலத்தால் அழிக்க முடியாத காப்பியங்கள்!
திரையுலகமா? இன்றும் பராசக்தி, மனோகரா, பூம்புகார் வசனங்கள் நாட்டிலே ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. என்னுடைய பாசமிகு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வருகை தந்திருக்கிறார்கள். அவருக்கு நன்கு தெரியும், நன்கு அறிவார். திரையுலகத்துக்குள் வருபவர்கள் கலைஞரின் வசனத்தைப் பேசி அதில் தங்களது திறமையை நிரூபித்து, உள்ளே நுழைந்தவர்கள் என்பது தான் வரலாறு. அரசியலா? ஒரு மாபெரும் அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று ஏறக்குறைய 50 ஆண்டுகள் அதை வழி நடத்திய ஒரே தலைவர்.
ஆட்சியா? இன்றைக்கு நாம் காணக்கூடிய நவீனத் தமிழ்நாடு என்பது தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்கான தொலைநோக்குப் பார்வை அவருக்கு இருந்தது. அதற்கான உள்ளார்ந்த அக்கறை அவருக்கு இருந்தது. ஏனென்றால், தமிழ்நாட்டில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலாக அவர் விளங்கினார். அத்தகைய மக்களின் உயர்வுக்காக எழுதினார். அவர்களுக்காகப் பேசினார். அவர்களுக்காகப் போராட்டம் நடத்தினார். அவர்களுக்காகச் சிறையில் இருந்தார். ஆட்சி – அதிகாரம் கிடைத்ததும், அவர்களுக்காகத் திட்டங்களைத் தீட்டினார். அந்தத் திட்டங்களால் உருவானதுதான் இந்தத் தமிழ்நாடு.
அதனால்தான் அவரை "Father of Modern Tamil Nadu" - ‘’நவீனத் தமிழ்நாட்டின் தந்தை" என்று இன்றைக்கும் புகழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர் உருவாக்கிய கல்லூரிகளில் படித்தவர்கள், அவரால் வேலைவாய்ப்பு பெற்றவர்கள், அவர் காப்பாற்றிக் கொடுத்த சமூகநீதியால் உயர்வு பெற்றவர்கள், இலவச மின்சாரத் திட்டத்தால் மண்ணைச் செழிக்க வைத்திருக்கக்கூடிய உழவர் பெருமக்கள், சிப்காட், சிட்கோ தொழில் வளாகங்களால் வேலைவாய்ப்பைப் பெற்றவர்கள், குடிசைமாற்று வாரியத்தால் வீடுகளைப் பெற்றவர்கள், நிலங்களைப் பெற்ற ஏழை எளியவர்கள், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் நல்வாழ்வு பெற்றவர்கள், மகளிருக்குச் சொத்துரிமை தரப்பட்டதால் சொத்துகள் பெற்ற மகளிர்கள், சுய உதவிக் குழுக்களால் வாழ்க்கைத் தரம் உயர்ந்த மகளிர்கள், பல்லாயிரக்கணக்கான நெசவாளர்கள், இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் எனத் தாய்த்திருநாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் நலத்திட்டங்கள் மூலமாக கோடிக்கணக்கானவர்களுக்குப் பயனளித்த வான்போற்றும் வள்ளல்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.
தமிழ்நாட்டின் ஒவ்வொருவரும் அவரால் பயன்பெற்றவராக, அவர் தீட்டிய திட்டங்களால் பயன்பெற்றவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த வகையில், அனைத்து மக்களின் தலைவராக இருந்தவருக்குத்தான் இன்றைய நாள் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்ச் சமுதாயத்திற்காக உழைத்த எத்தனையோ பெருமக்களுக்கு சிலைகள், நினைவகங்கள், மணிமண்டபங்கள் அமைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். அவருக்கு எத்தனை சிலை அமைத்தாலும் ஈடாகாது. அண்ணா சாலையில், பெரியாருக்கும் அண்ணாவுக்கும் மத்தியில் அமைந்திருக்கும் இந்தச் சிலை ஈடு இணையில்லாதது.
இதே அண்ணா சாலையில் தந்தை பெரியாரின் விருப்பப்படி, திராவிடர் கழகத்தால் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. ஆனால், அது சிலரால் கடப்பாரையைக் கொண்டு இடிக்கப்பட்டது. அப்போதும் கலைஞர் அவர்களுக்கு கோபம் வரவில்லை, கவிதைதான் வந்தது. என்ன கவிதை எழுதினார் என்று கேட்டீர்களானால்,
"உடன்பிறப்பே!
செயல்பட விட்டோர்
சிரித்து மகிழ்ந்து நின்றாலும்
அந்தச் சின்னத்தம்பி
என் முதுகிலே குத்தவில்லை –
நெஞ்சிலேதான் குத்துகிறான்,
அதனால் நிம்மதி எனக்கு!
வாழ்க வாழ்க!"
- என்று எழுதிக் காட்டியிருக்கிறார்.
அதே தலைவர் கலைஞர், கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சங்களில் என்றைக்கும் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்! அப்படி வாழப்போகக்கூடிய தலைவரின் தலைமைத் தொண்டன் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ சொல்லக்கூடிய முழக்கம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், வாழ்க! வாழ்க! வாழ்கவே! தலைவர் கலைஞர் புகழ் வாழ்கவே! நன்றி கூறி விடைபெறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!