Tamilnadu

விவாகரத்து ஆன பெண்களே உஷார்.. மேட்ரிமோனி மூலம் பழகி பணம், நகைகளை சுருட்டிய மோசடி மன்னன் சிக்கியது எப்படி?

சென்னையை அடுத்த ஆவடியைச் சேர்ந்தவர் காளியம்மாள் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து அவர்களை பெரிய நிறுவனங்களுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். காளியம்மாளுக்கு கடந்த ஆறு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று தனிமையில் வசித்து வருகின்றார். கடந்த 2020 ஆம் ஆண்டு காளியம்மாளுக்கு அவரது உறவினர்கள் மேட்ரிமோனி மூலம் வரன் பார்த்து வந்துள்ளனர்.

அப்போது மேட்ரிமோனி மூலம் சென்னை ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த அரவிந்த் என்பவரது அறிமுகம் கிடைத்தது. அப்போது காளியம்மாளிடம் தான் துபாயில் பணிபுரிந்து வருவதாகவும், தனக்கும் விவாகரத்து ஆனதாகவும் நல்ல வரனை பார்த்து வருவதாகவும், அரவிந்த் கூறியுள்ளார். இதனை நம்பிய காளியம்மாள் திருமணம் தொடர்பாக அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

அரவிந்த் அன்பாக நடந்து கொண்டதால் காளியம்மாள் அவரை திருமணம் செய்து ஒப்பு கொண்டார். இருவரும் அவ்வப்போது நேரில் சந்தித்து பேசி வந்த நிலையில் இருவரும் நெருங்கியும் பழகியிருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காளியம்மாளை செல்போனில் தொடர்பு கொண்ட அரவிந்த் பெற்றோர் இல்லாமல் தனிமையில் இருக்கும் நீ நகைகள், பணத்தை வைத்திருப்பது பாதுகாப்பாக இருக்காது, எனவே அதனை தன்னிடம் தந்துவிடுமாறு கூரியுள்ளார். அதனை நம்பி அப்பெண்ணும் தன்னிடம் இருந்த 50 சவரன் நகைகள் மற்றும் பணத்தை தி.நகரில் தங்கியிருந்த அரவிந்தனிடம் கொடுத்துள்ளார்.

நகைகள், பணத்தை பெற்றுக் கொண்ட பின் அரவிந்தனை தொடர்பு கொள்ள முடிவில்லை. அதன் பின்னர் அரவிந்தன் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது அரவிந்த ஏற்கனவே திருமணம் ஆகி இங்கு குடும்பத்துடன் வசித்து வருவது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காளியம்மாள் இது குறித்து சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலிஸார் அரவிந்தனை பிடித்து விசாரணை செய்த போது மேட்ரிமோனியில் கணவர் இல்லாமல் இருக்கும் பெண்கள், விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து திருமணம் செய்வதாக கூறி பணம் மற்றும் நகைகளை பெற்றுக் கொண்டு அதன் பின் தலைமறைவாகிவிடுவது தெரியவந்தது.

மேலும் அரவிந்த் மீது தேனாம்பேட்டையில் பல பெண்கள் புகார் அளித்திருப்பதும் , தியாகராய நகரில் குடும்பம் நடத்தி வரும் பெண் கூட இது போன்று ஏமாற்றி திருமணம் செய்த பெண் என்பதும் போலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த பெண்ணும் அரவிந்த மோசடி பேர்வழி என்று தெரிந்தபின் அவர் மீது புகார் அளித்துள்ளார். இது போன்று சென்னையில் விவகாரத்து ஆன மற்றும் தனிமையில் இருக்கும் பல பெண்களை அரவிந்த் ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அரவிந்தை கைது செய்த போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: ஆன்லைனில் ரம்பம் ஆர்டர் செய்து குடும்பத்தையே கொன்ற கணவன்: முதற்கட்ட விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்!