Tamilnadu

தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி சட்டம்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் - பள்ளிக்கல்வித்துறை முக்கிய தகவல்!

இலவசக் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடங்களில் இலவசமாக ஏழை, எளிய குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள்.

இந்த திட்டத்தில் LKG அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. அதன்படி மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1.1 லட்ச இடங்கள் வரை உள்ளன.

இந்நிலையில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தொடங்கியது. இதுவரை 1.34 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்றுடன் விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைய உள்ளது.

இதனையடுத்து விருப்பமுள்ள பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஒரு பெற்றோர் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் மே 30-ம் தேதி வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கைக்கு ஏற்கனவே ஒருமுறை விண்ணப்பப் பதிவுக்கு காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: தமிழக இளைஞர்களுக்கு நற்செய்தி: அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்த ஓர் வாய்ப்பு; விண்ணப்பிப்பது எப்படி?