Tamilnadu
பேரறிவாளன் வழக்கும்.. மாநில உரிமைகளும்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு கொண்டாடப்படுவதன் காரணம் என்ன?
பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை முன்வைத்து சில திசை திருப்பல்கள் நடக்கின்றன!
அவரை நிரபராதி என்று நீதிமன்றம் சொல்லவில்லை என்கிறார்கள். உண்மைதான். நீதிமன்றம் அப்படிச் சொல்லவில்லை. ஏனென்றால், அவர் நிரபராதியா, இல்லையா என்பதல்ல வழக்கு. பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் தாமதித்தது ஏன் என்பதுதான் உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்ததே தவிர, அவர் நிரபராதியா இல்லையா என்பதைப் பரிசீலனை செய்யவில்லை.
‘பேரறிவாளன் விடுதலையில் தமிழ்நாடு அரசின் சாதனை எதுவுமில்லை, உச்ச நீதிமன்றம் தானாக - தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்து விட்டது, இவர்கள் அர்த்தம் இல்லாமல் சொந்தம் கொண்டாடுகிறார்கள்' என்று சொல்கிறது இன்னொரு கூட்டம். ‘இந்தத் தீர்ப்பை எதற்காக தமிழ்நாடு அரசு கொண்டாட வேண்டும்?' என்று இன்னொரு கூட்டம் கேட்டுக் கொண்டு இருக்கிறது.
ஆமாம்! இந்தத் தீர்ப்பை பேரறிவாளனைவிட, தமிழ்நாடு அரசு தான் அதிகமாகக் கொண்டாட வேண்டும். ஏனென்றால், இந்த வழக்கின் விசாரணை என்பதே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? நியமிக்கப்படும் ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா? என்று தான் நடந்தது. பேரறிவாளனைப் பற்றி நடக்கவில்லை. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பாக 2018ம் ஆண்டு தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றுகிறது. அதற்கு ஒப்புதல் தராமல் வைக்கிறார் தமிழ்நாடு ஆளுநர். இறுதியாக, ‘இதில் முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறேன்' என்கிறார். குடியரசுத் தலைவர் இதில் முடிவெடுக்கவில்லை. நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டது. ‘நீங்கள் முடிவெடுக்காமல் இருப்பீர்கள் என்றால், நீங்கள் முடிவெடுக்கும் காலம் வரை பேரறிவாளன் சிறையில் இருக்க வேண்டுமா?' என்பதுதான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்ட கேள்வியாகும்.
இந்திய நிர்வாக அமைப்பின் மீது எழுப்பப்பட்ட கேள்வி ஆகும். இது இந்த வழக்குக்கு மட்டுமல்ல, அனைத்து வழக்குகளுக்கும் பொருந்தும் கேள்வி ஆகும். இன்னும் சொன்னால், ‘நீட்' மசோதாவுக்கே பொருந்தும் கேள்வியாகும். ‘முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு' என்று தமிழ்நாடு அரசு வாதிட்டது. ‘ஒன்றிய அரசுக்கு, குடியரசுத் தலைவருக்கே உண்டு' என்று ஒன்றிய அரசு வாதிட்டது. ஆளுநருக்காகவும் ஒன்றிய அரசே வாதிட்டது. ‘ஆளுநருக்காக நீங்கள் எப்படி வாதிடலாம்?' என்று நீதிபதிகள் கேட்ட கேள்விக்கும் பதில் அளிக்க அவர்களால் முடியவில்லை. இறுதியாக மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு - என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொன்னார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு - ஒரே தீர்ப்பை வழங்கியது. மாறுபடவில்லை. மொத்தமே 27 பக்கம் கொண்ட தீர்ப்பில் -25 ஆவது பக்கத்தில் அவர்கள் வழங்கிய இறுதித் தீர்ப்பின் வரிகளில் பேரறிவாளன் பெயரே இல்லை, மாநில அரசின் உரிமைகள்தான் பேசப்படுகிறது.
இறுதித் தீர்ப்பின் வரிகள் .
“... In conclusion, we have summarised our findings below:
(a) The law laid down by a catena of judgments of this Court is well-settled that the advice of the State Cabinet is binding on the Governor in the exercise of his powers under Article 161 of the Constitution.
(b) Non-exercise of the power under Article 161 or inexplicable delay in exercise of such power not attributable to the prisoner is subject to judicial review by this Court, especially when the State Cabinethas taken a decision to release the prisoner and made recommendations to the Governor to this effect.
(c) The reference of the recommendation of the Tamil Nadu Cabinet by the Governor to the President of India two and a half years after such recommendation had been made is without any constitutional backing and isinimical to the scheme of our Constitution, whereby ” the Governor is but a short hand expression for the State Government' as observed by this Court'.
- ஏன் இந்தத் தீர்ப்பை அனைவரும் கொண்டாடுகிறார்கள் என்றால் இதனால் தான்.
“the Governor is but a short hand expression for the State Government' as observed by this Court'- என்று முன்பு சொல்லப்பட்ட ஒரு தீர்ப்பின் வரிகளை நீதிபதிகள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். "கவர்னர் என்பது மாநில அரசின் சுருக்கெழுத்து மட்டுமே'' என்று நீதிபதிகள் கூறி இருக்கிறார்கள். ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர் மட்டும்தான். இதில் முடிவெடுக்காமல் தாமதித்தால் அதில் நீதித்துறை தலையிடும். அத்தகைய பரிந்துரை வழங்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியக் குடியரசுத் தலைவருக்கு தமிழக அமைச்சரவையின் பரிந்துரையைப் பற்றி ஆளுநர் குறிப்பிடுவது எந்த விதமான அரசியலமைப்பு ஆதரவும் இல்லாதது மற்றும் நமது அரசியலமைப்பின் திட்டத்திற்கு விரோதமானது- என்று நீதிபதிகள் கூறியிருப்பது, மாநிலத்தின் உரிமையையும், ஆளுநர்களின் அதிகாரமின்மையையும் வெளிப்படுத்தும் ஆதாரங்கள் ஆகும்.
142ம் விதிப்படி தனது அதிகபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கி இருக்கிறது -என்று சொல்பவர்களும் இத்தீர்ப்பை முழுமையாக வாசிக்கவில்லை என்றே பொருள். மாநில அமைச்சரவை இத்தகைய பரிந்துரையைச் செய்த பிறகும் - இரண்டரை ஆண்டுகள் காலதாமதம் செய்தவர் ஆளுநர் என்பதால் அவரிடமே முடிவெடுக்கச் சொல்லி இந்த மனுவை அனுப்பி வைப்பது சரியானதாக இருக்காது என்பதால், நாங்கள் எங்கள் உரிமையைப் பயன்படுத்துகிறோம் -என்றுதான் நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள். மாநில அமைச்சரவை பேச்சை ஆளுநர் கேட்பது போலத் தெரியவில்லை -எனவே மாநில அரசின் 161 ஆவது பிரிவின் உரிமையைக் காக்க - நாங்கள் 142 ஆவது பிரிவைப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் நீதிபதிகளின் இறுதி முடிவு ஆகும்.
“.... the pendency of his petition under Article 161 for two and a half years after the recommendation of the State Cabinet, we do not consider it fit to remand them atter for the Governor's consideration. In exercise of our power under Article 142 of the Constitution, we direct that the Appellant is deemed to have served the sentence in connection with Crime No. 329 of 1991. The Appellant, who is already on bail, is set at liberty forth with. His bail bondsare cancelled” - என்பதே இறுதி வரிகள்.
மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தைத் தொடர விரும்பவில்லை நீதிமன்றம். மாநிலத்தின் உரிமையை - உச்ச நீதிமன்றமே நிலைநாட்டுகிறது. அதனால்தான் இந்தத் தீர்ப்பு கொண்டாடப்படுகிறது. "இதன் மூலமாக மாநில அரசின் அரசியல், கொள்கை முடிவுகளில் தனது அதிகார எல்லைகளைத் தாண்டி ஆளுநர்கள் தலையிட அதிகாரம் இல்லை என்பது மேலும் மேலும் உறுதி ஆகி இருக்கிறது. இது இந்தியா முழுமைக்குமான மாநில சுயாட்சி - கூட்டாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லி இருப்பதுதான் இந்தத் தீர்ப்பின் மூலமாகக் கிடைத்த மிகப்பெரிய பயனாகும்.
தமிழக அரசின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதியின் வாதங்கள் அனைத்தையும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இந்த வழக்கில் பேரறிவாளன் குறித்து சொல்லப்படுபவை பதினைந்து வரிகள்தான். மற்றபடி பதினைந்து பக்கங்களும் மாநில அரசின் உரிமைகளைப் பற்றியே பேசுகின்றன. அதனால்தான் இந்தத் தீர்ப்பு மாநில சுயாட்சி - கூட்டாட்சித் தத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்களால் கொண்டாடப்பட வேண்டிய தீர்ப்பாக உள்ளது. இதற்கு பேரறிவாளன் ஒரு காரணமாக அமைந்திருக்கிறார் அவ்வளவே!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!