Tamilnadu
“ஆசிய பசிபிக் மண்டலத்தில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி.. தரவு மையங்களில் முதலிடம்” : ஆங்கில ஏடு பாராட்டு!
மிகுந்த உறுதியோடும் குறிப்பிடத்தக்க திறனோடும் அனைத்து முன்னணித் துறைகளையும் கையாண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முழு வேகத்தில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் என்று ஆங்கில நாளேடு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நாளேட்டில் கூறியிருப்பதாவது:-
பதவியில் இருக்கும் எந்தவொரு மாநிலத் தலைவரும், அவரது ஓராண்டு செயல்பாடுகளால் அவரது ஒட்டு மொத்தத்திறனையும் எடைபோட்டு விட முடியாது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த ஓராண்டில் ஒட்டு மொத்த நிர்வாகத் திறனையும், எதிர்கொண்ட சவால்களைத் துரிதமாக கையாண்ட விதத்தையும், பல்வேறு துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி விரைந்து செயல்படுத்தியதையும் பார்க்கும்போது கிடைத்த தகவல் என்பது அனைவருக்கும் மிகத்தெளிவாகவே உள்ளது.
தமிழக அரசின் குறிக்கோள் என்பது தமிழகத்தின் பொருளாதாரம் 2030 ஆம் ஆண்டில் ஒரு டிரில்லியன் டாலர் என இருக்க வேண்டும் என்பதே. ஒட்டு மொத்த வளர்ச்சியை நோக்கிச் செல்லவேண்டும் என்பதற்காக தொழில்துறையில் பல்வேறு விதிமுறைகளை எளிதாக்கியுள்ளனர்.
அதாவது ஒற்றைச் சாளரமுறை அறிமுகப் படுத்தியது, திட்ட ஒப்புதல்களை டிஜிட்டல் மயமாக்கியது, சாலை விரிவாக்கத்திற்கு போதிய நிதி ஒதுக்கியது, உள்கட்டமைப்பு வளர்ச்சி உள்ளிட்ட சில முக்கிய முடிவுகள் சீரான வளர்ச்சியை உறுதி செய்யும்படி உள்ளன. தொழில் முதலீடுகளைப் பொறுத்தவரையில் இதுவரை 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அதன்மூலம் ரூபாய் 69 ஆயிரத்து 375 கோடி பெறப்பட்டு, 2 லட்சத்து 25 ஆயிரத்து 802 பேருக்கு வேலை வாய்ப்புக்கு வழி வகுத்துள்ளது.
ஆசிய பசிபிக் மண்டலத்தில் சென்னை மிகுந்த வளர்ச்சி!
அண்மையில் 10க்கும் மேற்பட்ட உலகளாவிய தொழில் நிறுவனங்கள் தங்களது புதிய தொழில்நுட்ப மையங்களை சென்னையில் அமைத்துள்ளன. அல்லது அதன் நிறுவனங்களின் புதிய விரிவாக்கங்களை நிறுவியுள்ளன. ஆசிய பசிபிக் மண்டலத்தில் சென்னைதான் மிகவும் வேகமாக பரிணமிக்கும் தரவு மையமாக (DATA CENTRE) விளங்கி வருகிறது.
தரவு மையங்களில் தமிழகம் முதலிடம்!
2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் தரவு மைய தொழிற்சாலைகளின் திறன் 1.3 GW என்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஒட்டு மொத்த திறனில் மும்பையும், சென்னையும் 68 சதவிகிதம் பங்கு வகிக்கின்றன. அதிலும் சென்னை முன்னணியில் உள்ளது.
இந்தியாவில் ஒட்டு மொத்த மின்னணு வாகனத்திற்கான முதலீடு என்பது 12.6 பில்லியன் அமெரிக்க டாலராகும். அதிலும் 34 சதவிகிதம் தமிழகத்தின் பங்காக இருக்கிறது.
2021-22 ஆம் நிதி ஆண்டில் வணிக வரித்துறை ரூபாய் 1 லட்சத்து 4 ஆயிரத்து 970 கோடி வசூலை செய்து பெரும் சாதனை படைத்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் என்பது, 13.82 சதவிகிதமாகும். இதுவரை இல்லாத அளவிற்கு பத்திரப் பதிவுத்துறைக்கு 2021-22 ஆம் நிதி ஆண்டில் ரூபாய் 13 ஆயிரத்து 913 கோடியே 65 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
குறிக்கோள்களை அடைய துணிவான முயற்சிகள்!
அரசியல் கட்டாயங்கள் காரணமாக வருவாய் ஆதாரங்களில் பின்னடைவு ஏற்பட்டாலும் அவைகளையெல்லாம் சரிபடுத்திட, உகந்த மாற்று ஏற்பாடுகளை கையாண்டு, அனைத்துத் துறைகளிலும் எதிர்பார்த்த குறிக்கோள்களை அடைய, ஒருங்கிணைந்த துணிவான முயற்சிகளை மேற்கொள்கிறார் முதல்வர். அவரது நடவடிக்கைகள், அவரின் தலைமைக்கான தகுதியையும், திறன் வாய்ந்த நிர்வாகத் திறனையும் பரிட்சிப்பதாக இருக்கும்.
தற்போதைய நிலையில் இருக்கும் மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, 2030 ஆம் ஆண்டில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்டவேண்டும் எனில், தமிழக வளர்ச்சி 16.1 சதவிகிதமாக இருக்க வேண்டும்.
தமிழக வளர்ச்சியையும், கொள்கைகளையும் மற்றவர்கள் கூர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. பல்வேறு தவிர்க்க முடியாத தடைகள் ஏற்பட்ட போதிலும், பொருளாதார ஆலோசனைக் குழுவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அயரா முயற்சிகளும் மற்றும் மாநிலம் முழுவதும் அனைத்துத் தரப்பிலும் வளர்ச்சி கொண்டு வரப்பட வேண்டும் என்ற உறுதிமிக்க எண்ணமும் நிச்சயம் எதிர்பார்த்த தாக்கத்தை தமிழக வளர்ச்சியில் உருவாக்கும் என்பது திண்ணம்” இவ்வாறு அந்த ஆங்கில நாளேட்டில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?