Tamilnadu

லக்கேஜ்ஜில் வைத்து அரிய வகை விலங்குகள் கடத்தல்: பரபரப்பை கிளப்பிய சென்னை பயணி;ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?

தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வந்த அரியவகை வெள்ளை முள்ளம் பன்றி மற்றும் டாமரின் குரங்கை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்கள் உடமைகளையும் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது சென்னையை சேர்ந்த ஒரு ஆண் பயணியின் உடமைகளை சுங்க அதிகாரிகள் பரிசோதித்தபோது, அவர் அட்டைப்பெட்டி மற்றும் துணியால் செய்யப்பட்ட கூடைக்குள் வெள்ளை நிற முள்ளம்பன்றி, மற்றும் டாமரின் மங்கி எனப்படும் வெளிநாட்டு குரங்கு குட்டியையும் வைத்திருந்தார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த சுங்க அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், வெளிநாட்டில் இருந்து இதை தான் வளர்ப்பதற்காக வாங்கி வருவதாகவும் கூறினார். ஆனால் அவரிடம் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லை. மேலும் இதே போன்று வெளிநாட்டிலிருந்து வனவிலங்கு போன்ற உயிரினங்களை வாங்கி வரும்போது, அவர்கள் முறையாக சர்வதேச வன விலங்கு பாதுகாப்பு துறையிடம் தெரிவித்து, இந்திய வனவிலங்குப் பாதுகாப்பு துறைக்கும் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். அந்த உயிரினங்களில் நோய்க்கிருமிகள் எதுவும் இல்லை என்ற மருத்துவ பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். ஆனால் அவரிடம் அவைகள் எதுவும் இல்லை.

இதையடுத்து சுங்க அதிகாரிகள் உயிரினங்களான வெள்ளை முள்ளம் பன்றியையும், குரங்கு குட்டியையும் பறிமுதல் செய்தனர். அதோடு சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவுக்கும் தகவல் கொடுத்தனர். அவர்களும் வந்து விலங்குகளை ஆய்வு செய்கின்றனர். முறையான மருத்துவ பரிசோதனை இல்லாமல் வந்துள்ளதால் இந்த விலங்குகள் மூலம் வெளிநாட்டு நோய்க் கிருமிகள் நம் நாட்டு விலங்குகளுக்கு பரவும் ஆபத்து இருப்பதால், இதை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்புவது சரியாக இருக்கும் என்று கூறினா். எனவே திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த வன விலங்குகளை கடத்தி வந்தவரை சுங்க அதிகாரிகளும், மத்திய வனஉயிரின பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: நைஜீரியாவில் இருந்து லண்டன் திரும்பியவருக்கு குரங்கு அம்மை நோய்.. உலக நாடுகள் பீதி #5IN1_WORLD