Tamilnadu

“இனி நீ சுதந்திரமாக இருக்கலாம்”.. மனைவிக்கு அனுப்பி உருக்கமான வீடியோ : Mr.தமிழ்நாடு எடுத்த விபரீத முடிவு!

சென்னை ராயபுரம் எம்.எஸ்.கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதன். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் கலந்துக் கொண்டு 2ஆம் இடத்தைப் பெற்றவர்.

இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக சென்னை தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படைக் காவலராக பணியாற்றி வந்துள்ளார். மதன், ஹேமலதா என்ற பெண்ணை 5 வருடமாகக் காதலித்து வந்துள்ளார். மேலும் கடந்த டிசம்பர் மாதம் மதனும், ஹேமலதாவும் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். பின்பு அதேபகுதியில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தியும் வந்துள்ளனர்.

இந்தநிலையில் ஹேமலதாவின் உயர்படிப்பு தொடர்பாக தொடர்ந்து இருவருக்கும் இடையே பிரச்சனைகள் நடந்துவந்துள்ளது. இந்த பிரச்சனை முற்றவே ஹேமலதா விவாகரத்து தரும்படி மதனிடம் கேட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரிக்க மதன் தான் கட்டிய தாலி இன்னும் உன் கழுத்தில் தான் இருக்கிறது என்றும் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், வீடியோ ஒன்றை ஹேமலதாவிற்கு அனுப்பி வைத்துள்ளார் மதன். அந்த வீடியோவில், “தான் உயிரோடு இருக்கும் வரை விவாகரத்துக் கொடுக்க மாட்டேன். நான் இருப்பதால் தான் உன் படிப்பிற்கு பிரச்சனை, இனி என்னால் உன் படிப்பிற்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. உன் அம்மா வீட்டில் நீ எப்படி சந்தோஷமாக இருந்தியோ அப்படியே நீ நிம்மதியாக இருக்கலாம். நான் கேட்ட தாலியை இன்னும் 12 மணி நேரத்தில் நீயே கழட்டி கொடுத்துவிடு, ஏனென்றால் அந்த தாலியைக் கழட்டும் போது நான் இருக்க மாட்டேன்” என்று உருக்கத்துடன் பேசியுள்ளார். அந்த வீடியோவை தன் மனைவிக்கு அனுப்பிய பிறகு மதன் விபரீத முடிவை எடுத்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் மதன் அறையைவிட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த ஹேமலதாவின் உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது, , மதன் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். பின்பு அவரை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தநிலையில், உடற்கூராய்வு முடிந்த பிறகு உடலை மனைவியிடம் கொடுக்கக் கூடாது என மதனின் பெற்றோரும், மதன் பெற்றோரிடம் கொடுக்க கூடாது என ஹேமலதா உறவினர்கள் கூற இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலிஸார் பேச்சுவார்த்தை நடத்தி மதனின் சடலத்தை அரைமணி நேரம் ஹேமலதா வீட்டிலும், பின்பு மதன் பெற்றோர் வீட்டிலும் வைத்துவிட்டு அடக்கம் செய்யுமாறு அறிவுறுத்தியதன் பின்பு அங்கிருந்து கலைந்து சென்றனர். கணவன் மனைவியிடையே நடந்த தகராறில் கணவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “2 மாதத்திற்கு முன்பே சதி திட்டம்.. பண்ணை வீட்டு கதவில் மின்சாரம்”: மயிலாப்பூர் தம்பதி கொலையில் ‘பகீர்’ !