Tamilnadu
அ.தி.மு.க இரட்டையர்கள் எங்கே போனார்கள்? - நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் புள்ளிகளை அடுக்கிய அமைச்சர் !
"எத்தனை பொய்யுரைகளை நிகழ்த்தினாலும் இனி இருக்கப் போவதும், தொடரப்போவதும் தி.மு.க ஆட்சிதான் என்பதை பழனிசாமி அவர்களுக்கும் - ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" என தொழிற்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தொழிற்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “மக்களுக்குப் பயனுள்ள அரசை - மக்களுக்காக நடைபெறும் இந்த மக்களரசின் நலத்திட்டங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாத அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அவர்களும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அவர்களும் - எங்கள் முதலமைச்சர் தலைமையிலான நல்லாட்சியைக் குறை கூறியிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஓராண்டில் - இந்தத் திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் பெற்ற பயன்களை - எங்கள் முதலமைச்சர் சட்டமன்றத்தில் நின்று இன்று பட்டியலிட்டது போல் ஓ.பி.எஸ் முதலமைச்சராக இருந்தபோதோ – அல்லது பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதோ பட்டியலிடும் திராணி தெம்பு இருந்ததா? அறவே இல்லை!
இன்றைக்கு முதலமைச்சர் அவர்கள் - எத்தனைக் கோடிப் பேர் பயன்பெற்றார்கள் என்று சட்டமன்றத்தில் வாசித்த சாதனைப்பட்டியல் அ.தி.மு.க.வை வழிநடத்தும் இரட்டைத் தலைமைக்கு எரிச்சலைத் தருகிறது. அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால் “உழவர்கள் எலிக்கறி சாப்பிடும் கொடுமை” “அரை நிர்வாணமாகப் போராடியது” “அவர்களுக்குரிய கடன் தள்ளுபடியை நிறுத்தி வைத்தது” “கொடுமையான சட்டங்களின்கீழ் உழவர்களைக் கைது செய்து சிறையில் தள்ளியது”- ஆகியவற்றுக்கும் மேலாக உழவர்கள் தற்கொலை தொடர்கதையாக இருந்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான்!
சாத்தான்குளம் காவல்நிலைய மரணம் முதல் - பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வரை அரங்கேறியது மட்டுமின்றி - அமைதி காத்துக் குற்றவாளிகளை முடிந்தவரை காப்பாற்ற முயன்றதும் இந்த இரட்டைத் தலைமைதான்!
பெண் எஸ்.பி.க்கே பாலியல் தொந்தரவு நடக்கும் விதமாக டி.ஜி.பி. அலுவலகத்தில் “இரட்டைத் தலைமை” நியமித்து - தமிழ்நாடு முழுவதும் பாலியல் குற்றம் புரிந்தோரை காப்பாற்றியதும், குட்கா, கஞ்சா ஆகியவற்றைத் தாராளமாகப் பள்ளி, கல்லூரி வளாகங்களில் விற்க விட்டு – ஒரு அபாயகரமான ஆட்சியை நடத்தியது இந்த இரட்டைத் தலைமைதான்!
நீட் தேர்வை அனுமதித்து - அதற்கு விதிவிலக்கு கோரும் மசோதாவை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியதையே மறைத்ததும் இந்த “இரட்டையர்கள்"தான். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றி - அதை ஆளுநர் திருப்பி அனுப்பியபோது - உடனடியாக மீண்டும் சட்டமன்றத்தைக் கூட்டி நிறைவேற்றி - இன்றைக்கு அதைக் குடியரசுத் தலைவருக்கே ஆளுநர் அனுப்பி வைத்துவிட்ட பிறகு - நீட் தேர்வு பற்றிய வாக்குறுதி பற்றி இந்த ஆட்சியைப் பார்த்துக் கேள்வி எழுப்ப இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பது புரியவில்லை!
திராவிட மாடல் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனைகளைச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் இருவரின் முகத்திற்கு முன்னால் வைத்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேருக்கு நேர் விளக்கியுள்ளார். அப்படி திரு. பழனிசாமி அவர்கள் ஆட்சியில் இருந்த நான்கு ஆண்டுகளில் விளக்க முடிந்ததா? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.
தமிழ்நாட்டை ஒருபுறம் கடனிலும், இன்னொரு புறம் மோசமான நிர்வாகச் சீரழிவிலும் விட்டுச்சென்ற முன்னாள் முதலமைச்சர், இந்த ஆட்சியின் சாதனைகளை மறுக்க முடியாமல் - வெறுப்பைக் கக்குகிறார். தென் மாவட்டங்களில் 100 படுகொலைகளுக்கு மேல் நடைபெற்றபோது - இதே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் எங்கே போனார்? ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி காக்கை குருவிகள் போல் அப்பாவி மக்களைச் சுட்டு வீழ்த்தியபோது எங்கே ஒளிந்து கொண்டிருந்தார்?
ஏன், பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் தொல்லை தாங்காமல் கதறி அழுது கை கூப்பி உதவி கோரியபோது எங்கே இருந்தார் திரு. ஓ.பி.எஸ். அவர்கள்?
நாலாபுறத்திலும் சட்டம் ஒழுங்கை நாசம் பண்ணி விட்டு - பத்தாண்டு காவல்துறையை அடியோடு சீரழித்து - தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் போன இந்த இரட்டைத் தலைமை இப்போது அனைத்து வகையிலும் பாதுகாப்பான – சமூக நல்லிணக்கத்திற்கு ஏற்ற - அமைதியான தமிழ்நாட்டைப் பார்த்து பா.ஜ.க.வின் ஊதுகுழலாக மாறி - சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை என்றே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
புத்தம் புதிய திட்டங்கள் - கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் உடனுக்குடன் நிறைவேற்றம் எனப் பல்வேறு சாதனைகளை ஓராண்டில் செய்திருப்பதுதான் எங்கள் தளபதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு. ஓராண்டில் வந்துள்ள தொழில் முதலீடுகளை - நான்கு ஆண்டுகள் ஆட்சியிலிருந்த திரு. பழனிசாமி ஈர்க்கவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பெயரளவுக்குப் போட்டு விட்டு - உலகச் சுற்றுலா நடத்தி - உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்று தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிய திரு பழனிசாமி அவர்கள் எங்கே? தினமும் முதலீடு - தினமும் வேலைவாய்ப்பு எனத் தொழிற்சாலைகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் வர வேண்டும் என்று பாடுபடும் எங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்கே?
நாடும் ஏடும் போற்றும் நல்லாட்சி! திறமையான நிர்வாகத்தை அளிக்கும் முதலமைச்சர்! ஒளிவு மறைவு மிகுந்த 10 ஆண்டு இருண்ட ஆட்சியை அகற்றி விட்டு ஓராண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு நடைபெறும் ஒரு வெளிப்படையான ஆட்சி! - இதுதான் எங்கள் தளபதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அளித்து வரும் திராவிட மாடல் ஆட்சி. இதைக் குடியரசு துணைத் தலைவரே பாராட்டியிருக்கிறார். இந்தியாவின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பாராட்டியிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு - மோசமான, ஊழல் மிகுந்த, சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த ஆட்சியை வழங்கி - தமிழ்நாட்டையும் - அதன் வளர்ச்சியையும் பின்னுக்குத் தள்ளிய திரு. பழனிசாமி அவர்களும், திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்களும் - கொடநாடு வழக்கின் “க்ளைமாக்ஸ்” காட்சி நெருங்குவது பற்றிய பயத்திலோ என்னவோ – தி.மு.க. மீதும் - நல்லாட்சி மீதும் - எங்கள் மாண்புமிகு முதலமைச்சர் மீதும் ஆதாரமற்ற - அபாண்டமான - வெத்து வேட்டு பேட்டி - அறிக்கைகளை விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எங்கள் ஆட்சி துவங்கி ஓராண்டுதான் நிறைவு பெற்றிருக்கிறது. ஆனால் பத்தாண்டு ஆட்சியில் அளித்த வாக்குறுதிகளைக காற்றில் பறக்க விட்டுப் போன “இரட்டைத் தலைமைக்கு” எங்கள் ஆட்சி ஓராண்டிலே நிறைவேற்றி விட்ட வாக்குறுதிகளைப் பொறுத்துக் கொள்ளாமல் இப்படி பொய் புளுகு அறிக்கைகளை வெளியிடுவது - தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் துரோகம் என்பதைப் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எத்தனைப் பொய்யுரைகளை இந்த இரட்டையர்கள் நிகழ்த்தினாலும் - இனி இருக்கப் போவதும் - தொடரப்போவதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான். நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்கள் போல் - அடுத்தடுத்த தேர்தல்களிலும் வெற்றிபெறப் போவது தி.மு.க.தான் என்பதை திரு. பழனிசாமி அவர்களுக்கும் - திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
Also Read
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!