Tamilnadu

“மாற்றுக்கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் தி.மு.க.வில் இணையும் விழா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை !

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. கழக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி ஏற்பாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாம் தமிழர் கட்சியினர் தி.மு.க-வில் இணைந்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள், 3,000 இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் விழா கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கழக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுசெயலாளர் ஆ.ராசா, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், தர்மபுரி எம்.பி.செந்தில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மாற்றுக்கட்சியில் இருந்தவர்கள் அக்கட்சியில் பொறுப்பில் இருந்து விலகி, தாய் கழகமாம் தி.மு.கழகத்தில் இணைய வந்துள்ளனர்.

கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி விவாதம் தொலைக்காட்சியில் வந்தால் கொள்கையில் இருந்து விலகாமல் ஆற்றும் பணி, நான் உட்பட பார்க்கிற ஒட்டுமொத்த மக்களும் பாராட்டாமல் இருந்ததில்லை. இன்றைய இளைஞர்கள் அதே போல் பணியாற்றி மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்ற வேண்டுகோளை இந்நிகழ்ச்சியின் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

தி.மு.க.வின் வரலாறு என்பது 73 ஆண்டு கால வரலாறு. இன்னும் இரண்டு ஆண்டில் 75வது ஆண்டு விழாவை கொண்டாட உள்ளோம். 1949ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்டது தி.மு.க.

ஆட்சி என்பது சொகுசாக வாழ கிடைத்துள்ள பதவி என நினைக்காமல், ஆட்சி இருந்தால் கிடைக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும். திமுக வை பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களுக்காக தொண்டாற்றும் என்பது மறுக்க முடியாது.

தமிழ்நாட்டிற்கு "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டிய கழகம் திமுக. அண்ணா முதல்வராக இருந்த போது பெயர் சூட்டப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இன்று வாய்ப்பு கிடைத்துள்ளதென்றால் இட ஒதுக்கீடு பெறச்செய்தது திமுக.

இன்று கழக ஆட்சி அண்ணா, கலைஞர் வழியில் வீறுநடை போடுகிறது. அரசு பணியிடங்களில் தமிழர்களுக்கு தான் வேலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆலயங்களில் அன்னைத்தமிழ் ஒலிக்க தொடங்கியுள்ளது. செம்மொழி சிறப்புகளை உலகெங்கும் சேர்க்கும் வகையில் தெற்காசியாவில் உள்ள 5பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே 2ஆம் தேதி வாக்கு எண்ணும் பணி நடந்தது. வரும் 7ஆம் தேதி ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையவுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்று 10 ஆண்டில் என்ன என்ன செய்திருப்போமோ, அதனை இந்த ஓராண்டில் சேர்த்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். என்றார்.

தொடர்ந்து, மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்த படிவத்தை கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி, கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் பொது செயலாளர் துரைமுருகனிடம் வழங்கினார்.