Tamilnadu

திருவிழாவில் இன்னொரு சோகம்.. முட்டுக்கட்டை போடும்போது சப்பரத்தில் சிக்கி இளைஞர் பலி- நாகை அருகே விபரீதம்!

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெருவடைத்தான் சப்பரம் நள்ளிரவு நடைபெற்றது. சப்பரமானது தெற்கு வீதி என்னும் இடத்தில் திரும்பும்பொழுது 10 அடி தூரத்தில் சக்கரத்தில் சிக்கி முட்டுக்கட்டைபோடும் தொழிலாளி அதே பகுதியைச் சேர்ந்த தீபராஜன் விபத்துக்குள்ளானார்.

படுகாயமடைந்த அவரை மீட்டு உறவினர்கள் திருமருகலில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர். ஆனால், சப்பரத்தின் ராட்சத சக்கரமானாது தீபன்ராஜ் வயிற்றில் ஏறி இறங்கியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நாகை மாவட்டத்தில் வழிபாட்டு தளங்களில் தேர், சப்பரங்கள் இழுக்க முறையான அனுமதி பெற வேண்டும் என எஸ்.பி ஜவஹர் உத்தரவிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து உத்திராபதிஸ்வரர் ஆலய நிர்வாகிகள் திருமருகல் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் திருக்கண்ணபுரம் காவல் நிலையத்தில் முறையான அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இரவு 11.50 மணிக்கு புறப்பட்ட உத்திராபதிஸ்வரர் சுவாமி சப்பரம் தெற்கு வீதி திரும்பும் பொழுது 10 அடி தூரத்தில் இரவு 12.35 மணிக்கு விபத்துக்குள்ளாகி உள்ளது. தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக தீபன்ராஜின் சடலம் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கோவில் நிர்வாகத்தினர், உறவினர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் திருக்கண்ணபுரம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகை அருகே கோவில் திருவிழா சப்பரத்தில் சிக்கி முட்டுக்கட்டை போடும் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த தீபன்ராஜ் குடும்பத்தினர் காலங்காலமாக முட்டுக்கட்டை போடும் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தீபன்ராஜ் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாகப்பட்டினம் மாவட்டம், திருச்செங்காட்டாங்குடியில் இன்று (30.4.2022) அதிகாலை நடைபெற்ற சப்பரத் திருவிழாவில், சப்பரத்திற்கு முட்டுக்கட்டை போடும்போது அதிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் தீபன்ராஜ் மீது சப்பரம் ஏறியதால் பலத்த காயமடைந்துள்ளார். அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூபாய் ஐந்து லட்சம் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஒரு எஸ்.எம்.எஸ்.. OTP சொல்லுங்கோ” : கிரெடிட் கார்டு விவரங்களை பெற்று ₹1.30 லட்சம் மோசடி - பின்னணி என்ன?