Tamilnadu
“பாஜகவின் சூழ்ச்சிகள் இங்கு பலிக்காது.. இஸ்லாமியர்களை பாதுகாக்க திமுக இருக்கும்”: உதயநிதி ஸ்டாலின் உறுதி!
“இஸ்லாமிய சமூகத்திற்கு தி.மு.கழகம் என்றைக்கும் பாதுகாப்பாக இருக்கும். தமிழ்நாட்டில் மதச்சார்பின்மை, மதஒற்றுமையை தொடர்ந்து காப்பாற்றுவோம்” என்று கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அவர்கள் சேப்பாக்கத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும் போது உறுதிபடக்கூறினார்
அவர் பேசியது வருமாறு :-
இந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இஸ்லாமியசகோதரர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான உறவு கழகம் தோன்றிய காலம் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பது.
கழகத்தின் நிறுவனர் பேரறிஞர் அண்ணாவுக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மதிப்பிற்குரிய தலைவர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்கும் இடையே அமைந்த கொள்கை உறவு. 1967-ஆம் ஆண்டு கழகம் முதன்முதலாக ஆட்சி அமைப்பதற்குக் காரணமாகவும் இந்த உறவு இருந்தது.
பின்னர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் காலத்தில் கழகத்துக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்பெற்றது. இன்று முதல்வர் தலைவர் அவர்களின் காலத்திலும் அந்த உறவு மேலும் மேலும் வலுவடைந்து வருகிறது. இது அரசியலைத்தாண்டிய கொள்கை உறவு. இப்படி, இந்த இயக்கத்துக்கும் முஸ்லீம் சமூகத்துக்குமான உறவுக்கு பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
கலைஞர் ஆட்சியில் இஸ்லாமியர்க்கு சாதனைகள்!
இஸ்லாமிய மக்களின் உரிமை களைப் பாதுகாப்பதிலும், கல்வி வேலை வாய்ப்பு பொருளாதார நலன்களில் எப்போதும் அக்கறை உள்ள இயக்கம் திமுக. 1989-ஆம் ஆண்டு கலைஞர் தலைமையிலான ஆட்சிதான் சிறுபான்மையினர் ஆணையம் அமைத்தது.
மீண்டும் 1999-ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில்தான் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் உருவாக்கப்பட்டது. மீண்டும் 2007-ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் ஆட்சியில் இஸ்லாமியர் நலனுக்காக நீதியரசர் ராஜேந்திர சச்சார் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த சிறுபான்மையினர் நல இயக்ககம் உருவாக்கப்பட்டது.
2007-ஆம் ஆண்டு கலைஞர் தலைமையிலான அரசுதான் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றியது. இஸ்லாம் சமூகத்தினர் உள்ளிட்ட சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு 2007 முதல் கல்வி உதவித்தொகை வழங்கவும் கழக அரசுதான் உத்தரவிட்டது.
பள்ளிக்கல்வி முதல் கல்லூரி கல்வி வரை வழங்கப்படும் இந்த உதவித்தொகை ஐஐடி, என்.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மை சமூகத்தினருக்கும் வழங்கப்படுகிறது.
2007-ஆம் ஆண்டு கழக ஆட்சியில்தான் முஸ்லிம் மகளிர் உதவும்சங்கங்கள் அமைக்கப்பட்டு ஆதரவற்ற வயதான முஸ்லிம் விதவைகள், ஏழ்மை நிலையில் வாழும் முஸ்லிம் பெண்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. தலைவர் முதல்வரானதில் இருந்து இதுவரை இந்த ஓராண்டு மட்டும் இந்த சங்கங்களுக்கு 4.3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களில் பள்ளிவாசல் கள், மதராசாக்கள், தர்காக்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் நலனுக்காக 2009-ஆம்ஆண்டு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தை முத்தமிழறிஞர் கலைஞர் அமைத்தார்.
நம் முதல்வர் ஆட்சியின் சாதனைகள்!
நம் முதல்வர் அவர்கள் ஆட்சிக்கு வந்த இந்த ஒரே ஆண்டில் 627 பயனாளிகளுக்கு 39 லட்ச ரூபாய் செலவில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. தலைவர் ஆட்சிக்கு வந்தபின் இந்த வாரிய உறுப்பினர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு 4.7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் வக்ஃப் வாரியத்தில் பணி புரியும் உலமாக்களுக்கு இரு சக்கரவாகனம் வழங்கவும் முதல்வர் முடிவு செய்து 70 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார். தலைவர் ஆட்சிக்கு வந்தபின்சிறுபான்மை யினருக்கு மின்மோட்டாருடன் ஆயிரம் தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிறுபான்மையினர் அதிகம் வாழும் சென்னை, வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, கோவை ஆகிய 5 மாவட்டங்களில் சிறுபான்மையினர் நல அலுவல கங்கள் தொடங்க, நம் முதல்வர் அவர்கள் முடிவு செய்து 1.7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மசூதிகள், தர்காக்கள் ஆகியவற்றைப் புணரமைப்பதற்காக முதல்வரின் அரசு 6 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
முதல்வரின் அரசு கிராமப்புறங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவியர் இடைநிற்றல் இல்லாமல் கல்விகற்க ஊக்கத்தொகையாக 2.75 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்தியாவில் மதச் சார்பின்மைக்காகவும் சமூக நல்லிணக்கத்துக்காகவும் போராடும் இயக்கம் திமுக.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்தபோது அதை உறுதியாக நின்று எதிர்த்த இயக்கம்தான் திமுக. நம் தலைவர் அவர்கள் தன்னுடைய எதிர்ப்பிலிருந்து கடைசிவரை பின் வாங்கவில்லை. பிரமாண்ட பேரணியை சென்னையில் நடத்தி இந்தியாவையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தார்.
முஸ்லீம்களை பழிவாங்கும் பா.ஜ.க.!
ஆனால் பாஜக அரசு அதோடு நிற்கவில்லை. அவர்களின் ஆட்சியால் நாட்டில் மதச்சார்பின்மை பெரும் சோதனையில் இருக்கிறது. இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வெறுப்பை ஒன்றிய அரசிலும் பல மாநிலங்களிலும் தூண்டி வருகிறது. மதக்கல வரங்களையும் மோதல்களையும் ஏற்படுத்தி பிரிவினை அரசியல் செய்துவருகிறது.
டெல்லியில் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அசைவம் சாப்பிட்ட காரணத்துகாக மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மாட்டு இறைச்சி வைத்திருப்பதாகக் கூறி இஸ்லாமியர் மீது கொலைவெறித் தாக்குதல் நடக்கிறது. இஸ்லாமியர்கள் எதை சாப்பிட வேண்டும் என்பதைக் கூட பாஜகவின் ஆதரவு அமைப்புகள் முடிவு செய்கின்றன.
சமீபத்தில் டெல்லியில் பாஜகஆதரவு அமைப்புகள் மத ஊர்வலம் நடத்தியதில் கலவரங்கள் வெடித்தன. முஸ்லிம் மக்களைப் பழிவாங்கும் வகை யில் அவர்களில் வீடுகள், கடைகள் இடிக்கப் பட்டன. உச்ச நீதிமன்றம் தடை விதித்தபின்னும் பல மணிநேரம் புல்டோசர்கள் கொண்டு ஏழை முஸ்லிம் மக்களின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டன.
இஸ்லாமிய சகோதரர்களுக்கு அனைத்து உரிமைகளையும் உறுதி செய்வதற்காக கழகம் களத்தில் போராடி வருகிறது. தமிழ்நாட்டில் எல்லா தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞரின் வழிவந்த ஆட்சியை முதல்வர் வழங்கிவருகிறார். மத நல்லிணக்கத்தைக் காப்பாற்றும் ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறது. மதச்சார்பின்மைக்கு எடுத்துக் காட்டான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.
இங்கும் மத மோதல்களைத் தூண்டிவிட நடத்தப்படும் முயற்சிகள் இங்குபலிக்காது. இது பெரியார் பூமியாக அண்ணாவின் பூமியாக முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மண்ணாக இருப்பதால் இங்கு பாஜகவின் சூழ்ச்சிகள் தொடக்கத்திலேயே கிள்ளி எறியப்படுகின்றன. தமிழ்நாட்டில் மதச்சார்பின்மை, மத ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை தொடர்ந்து காப்பாற்றுவோம். இஸ்லாமிய சமூகத்துக்கு பாதுகாப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!