Tamilnadu

“சுண்ணாம்பு அடிச்சது மட்டும்தான் நீங்க..” : எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!

"ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் புதிய கட்டடங்களை கட்டியது கலைஞர். சுண்ணாம்பு அடித்து திறந்து வைத்த நீங்கள் அந்த கட்டடத்தையே கட்டியதாக கூறுவது அபத்தம்." என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டிப் பேசினார்.

அதன் பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துப் பேசுகையில், “சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 105 வருட பழமையான கட்டடத்தில் நரம்பியல் துறை இயங்கி வருகிறது. தரைத்தளத்தில் சர்ஜிக்கல், முதல் தளம் நரம்பியல் சம்பந்தப்பட்டவை. இரண்டாம் தளத்தில் மற்ற நோயாளிகள் உள்ளனர்.

இதன் பக்கத்து கட்டிடத்தில் 128 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று காலை 10.21 மணிக்கு தீப்பிடித்த தகவல் அறிந்ததும் தஞ்சைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக எங்களுக்கு தகவல் சொல்லி மீட்பு பணிகளை வேகப்படுத்துமாறு கூறினார்.

உடனே நாங்களும் விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினோம். தீப்பிடித்த 10 நிமிடங்களுக்குள் 4 தீயணைப்பு வண்டிகள் வந்து பணியை தொடங்கிவிட்டனர். அங்கிருந்த நோயாளிகளை துரிதமாக மீட்டோம்.

செய்தி சேகரிக்க வந்த ஊடகத்துறையினரும் மீட்பு பணியில் இறங்கினார்கள். ஆனால் தீயெல்லாம் அணைந்து 3 மணி நேரம் கழித்து அ.தி.மு.கவினர் சாப்பாடு வழங்கி உள்ளனர். இதை இங்கு எதிர்க்கட்சி தலைவர் எடுத்துச் சொல்கிறார்.

இந்த விஷயத்தில் அரசு மிக தீவிரமாக செயல்பட்டது. வேறு முதலமைச்சரின் ஆட்சியாக இருந்திருந்தால் 128 நோயாளிகளும் பலியாகி இருப்பார்கள். இவர்கள் அனைவரும் முதலமைச்சரின் முயற்சியால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் புதிய கட்டடங்களை கட்டியது கலைஞர். சுண்ணாம்பு அடித்து திறந்து வைத்த நீங்கள் அந்த கட்டடத்தையே கட்டியதாக கூறுவது அபத்தம். அந்த மருத்துவமனைக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனை என்று பெயர் சூட்டியதும் கலைஞர்தான்.

தீப்பிடித்து சேதம் அடைந்த நரம்பியல் துறை கட்டிடம் 105 வருட பழைய கட்டிடமாகும். 10 வருடமாக ஆட்சியில் இருந்த நீங்கள் சரிவர பராமரிக்காததே இந்த தீ விபத்துக்கு காரணமாகும். இப்போது அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு திட்டமதிப்பீடு தயார் செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. எனவே தீப்பிடித்த கட்டிடத்தை இடித்துவிட்டு ரூ. 65 கோடியில் புதிய கட்டிடம் கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் பிரதமர் மோடி” : பேரவையில் புட்டுப்புட்டு வைத்த முதலமைச்சர்!