Tamilnadu

தீவிரமடையும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான சொத்துகுவிப்பு வழக்கு.. சாட்சிகளிடம் விசாரணை!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் 2016 - 21 காலகட்டத்தில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சராக இருந்த அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி அவரது வீடு உட்பட திருப்பத்தூர் ஓசூர் திருவண்ணாமலை ஏலகிரி மலை உள்ளிட்ட 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அச்சமயத்தில் அவரது இல்லத்தில் இருந்து ரூ. 34 லட்சம் ரொக்கப் பணம், ஒரு லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான அன்னியச் செலாவணி, ஒரு ரோல்ஸ் ராய் கார் உட்பட 9 சொகுசு கார்கள், 5 கம்ப்யூட்டர் ஹாட்டிஸ்க்குகள், சொத்து சம்பந்தமான ஆவணங்கள், 5கிலோ தங்க நகைகள் மற்றும் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வங்கிக் கணக்கு தொடர்பான புத்தகங்கள் உள்ளிட்டவற்றை விஜிலன்ஸ் கைப்பற்றி வழக்கு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இன்று வாணியம்பாடி பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் சேலம் கோட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கிருஷ்ண ராஜன் தலைமையிலான காவல்துறையினர் இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: “சாவடிங்கடா என்றார்” : அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி!