Tamilnadu

நடுவானில் புகைப்பிடித்து பயணி ரகளை.. விமானத்தில் ஏறி மடக்கி பிடித்த அதிகாரிகள்: ஏர்ப்போர்ட்டில் பரபரப்பு!

குவைத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, தஞ்சாவூரைச் சேர்ந்த சேவியர் (54) என்ற பயணி திடீரென தனது பாக்கேட்டில் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை எடுத்து புகைப்பிடிக்கத் தொடங்கினார்.

இதையடுத்து விமானத்திலிருந்த சக பயணிகள், பயணி சேவியா் புகைப்பிடிப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து புகைப்பிடித்துக் கொண்டிருந்தாா்.

உடனடியாக விமான பணிப்பெண்கள் வந்து அவரை கண்டித்தனர். ஆனாலும் அவர் புகைப்பிடிப்பதை நிறுத்தவில்லை. என்னுடைய விருப்பம் நான் புகை பிடிப்பேன்.என்னால் புகைப்பிடிக்காமல் இருக்க முடியாது என்று கூறினாா். விமான பாதுகப்பு சட்டப்படி, விமானத்திற்குள் புகைப்பிடிக்கக் கூடாது என்ற விதி உள்ளதை எடுத்து கூறினா். ஆனாலும் அவர் கேட்கவில்லை.

இதையடுத்து பணிப்பெண்கள் விமான கேப்டனிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக கேப்டன், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு பயணி ஒருவர் விமானத்திற்குள் புகைப்பிடித்து ரகளை செய்கிறார் என்று தகவல் கொடுத்தார்.

இதையடுத்து சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இண்டிகோ ஏர்லின்ஸ் பாதுகாப்பு அதிகாரிகளும் தயார் நிலையில் ஓடுபாதை பகுதியில் காத்திருந்தனா்.

விமானம் தரை இறங்கியதும், பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திற்குள் ஏறி, புகைப்பிடித்து ரகளை செய்த தஞ்சாவூர் பயணி சேவியரை அவரது உடமைகளுடன் விமானத்திலிருந்து கீழே இறக்கினா்.

அவரை பாதுகாப்புடன் குடியுரிமை சோதனை, சுங்கச் சோதனை நடத்த செய்தனர். அதன் பின்பு அவரை இண்டிகோ அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினா்.

இதையடுத்து அவரை சென்னை விமான நிலைய போலிஸில் இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலிஸார் அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

Also Read: நடுரோட்டில் மக்கள் கண்முன்னே இளைஞர் குத்தி கொலை.. பாஜக ஆளும் உ.பி-யில் கொடூரம்: பதற வைக்கும் CCTV காட்சி!