Tamilnadu
“எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரிடம் போலிஸ் விசாரணை” : அடுத்த கட்டத்துக்கு நகரும் கொடநாடு வழக்கு !
கொடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் இந்த எஸ்டேட்டிற்குள் நுழைந்தது. உள்ளே சென்ற அந்த கும்பல் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது.
பின்னர், பங்களாவிற்குள் சென்று ஜெயலலிதா மற்றும் சசிகலா தங்கும் அறைகளில் இருந்து பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக சோலூர் மட்டம் ேபாலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், கொள்ளை கும்பலுக்கு தலைமை வகித்த சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். மேலும், இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
மூன்று ஆண்டுகளாக இவ்வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் முதலில் இருந்து துவங்கி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் சயான், ஜம்சீர் அலி, ஜித்தின் ஜாய், தீபு உட்பட 8 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கனராஜின் மனைவி, மைத்துனர், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் உட்பட இதுவரை 220 க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் தனிப்படை போலிஸார் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அ.தி.மு.கவின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும் கூட்டுறவு சங்க தலைவருமான இளங்கோவனிடம் சேலத்தில் இன்று தனிப்படை போலிஸார் விசாரணை நடத்த உள்ளனர்.
இவ்வழக்கில் இதுவரை 220 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இளங்கோவனிடம் விசாரணை நடைபெறுகிறது. சசிகலாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இப்போதைய அ.தி.மு.க அமைச்சர்கள் தொடர்புடைய ஆவணங்கள், அ.தி.மு.க கட்சி குறித்த ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சசிகலா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி நெருங்கிய நண்பரும் மாநில கூட்டுறவு சங்க தலைவருமான இளங்கோவனிடம் தனிப்படை போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!