Tamilnadu

"நேரம், காலம் பார்க்காமல், உணவை, ஓய்வை, தூக்கத்தை மறந்து உழைக்கிறோம்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை கொளத்தூரில் உள்ள எவர்வின் மேல்நிலைப்பள்ளியில் 30ஆம் ஆண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் படிப்பு மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

"எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என்ன ஆச்சரியம் என்றால், இங்கே குழுமியிருக்கக்கூடிய மாணவச் செல்வங்கள் இவ்வளவு அமைதியாக, இவ்வளவு கட்டுப்பாடாக இருக்கக்கூடிய காட்சியைப் பார்க்கும்போது இந்தப் பள்ளியினுடைய நிர்வாகம் எந்த அளவிற்கு கட்டுப்பாட்டோடு இருக்கிறது, கண்ணியத்தை கடைப்பிடிக்கிறது என்பதை எண்ணிப் நான் வியந்து நிற்கிறேன்.

நானும் பள்ளிக்கூடத்தில் படித்தவன் தான். உங்களைப்போல நானும் மாணவனாக இருந்தவன் தான். இப்போது பார்த்தால் கூட வயது தான் அதிகமாக இருக்குமே தவிர உருவத்தைப் பார்த்தால் நானும் ஒரு மாணவனாகத்தான் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறேன். உங்களையெல்லாம் பார்க்கிறபோது, இன்னும் ஒரு 10 வயது எனக்கு குறைந்த மாதிரி நான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, இது போன்ற நிகழ்ச்சிகளெல்லாம் நான் படித்த பள்ளிக் கூடத்தில், கல்லூரியில் நடைபெற்றதுண்டு. அப்படி நடைபெறும்போது இவ்வளவு கூட்டம் எல்லாம் இருக்காது. ஒரு 200 பேர், 300 பேர், 500 பேர் அதற்குள் தான் இருக்கும். சிறப்பு விருந்தினர்களை அழைத்து வந்து உட்கார வைத்து அவர்களை பேசவிடாமல் பாதியிலே நாங்கள் திருப்பி அனுப்பிவைத்த அந்த நிகழ்ச்சிகளெல்லாம் எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது. அதுமாதிரி இப்போது எனக்கு நிச்சயமாக நடக்காது. அது நன்றாக எனக்குத் தெரியும். எதற்கு சொல்கிறேன் என்றால், அது அந்தக் காலம். இப்பொழுது நிலைமை மாறி மாணவ, மாணவிகளிடத்திலே எந்த அளவுக்கு கட்டுப்பாடு வந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கிறபோது இது தான் எனக்கு பெருமை தரக்கூடிய நிகழ்ச்சியாக அமைந்திருக்கிறது என்பதை நான் பெருமையோடு தெரிவிக்க விரும்புகிறேன்.

புருஷோத்தமன் அவர்கள் என்னை மேடைக்கு அழைத்து வரும்போது சொன்னார், உங்களை நிறைய நேரம் காக்க வைக்க மாட்டோம், உடனே அனுப்பி வைத்துவிடுவோம் என்று சொன்னார். இல்லை, இல்லை ரொம்ப நேரம் நான் இருக்க வேண்டும் என்ற ஆசையோடு தான் வந்திருக்கிறேன். ஏனென்றால், இப்போது தான் எனக்கு Relax ஆக இருக்கிறது. முதலமைச்சராக பதவி ஏற்று ஒரு வருஷம் ஆகப்போகிறது. அடுத்த மாதம் 7ஆம் தேதி வந்தால் ஒரு வருடம்.

இந்த ஒரு வருடம் எப்படி போனது என்றே தெரியவில்லை. ஏனென்றால் நேரம், காலம் பார்க்காமல், தூக்கத்தை, உணவை, ஓய்வை அத்தனையும் மறந்து நான் மட்டும் அல்ல, என்னைச் சார்ந்திருக்கக்கூடிய அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் எல்லோருமே இப்படி பணியாற்றிக் கொண்டிருக்கின்ற காரணத்தால் தான், இன்றைக்கு தமிழ்நாடு எல்லா மாநிலத்திலும் பேசக்கூடிய அளவுக்கு வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. முதல்வருக்கெல்லாம் முதல்வர் என்று சொன்னீர்கள். இதை எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பல பத்திரிகைகள் கருத்துக் கணிப்புகளை எடுத்து, அந்தக் கருத்துக் கணிப்புகள் மூலமாக வெளிப்படுத்தக்கூடிய செய்திகள் என்னவென்றால், இன்றைக்கு முதலமைச்சரில், முதல் முதலமைச்சராக, முதலிடத்தைப் பெறக்கூடிய முதலமைச்சராக இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்கிக் கொண்டிருக்கிறார் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது எனக்கு பெருமைதான், மகிழ்ச்சிதான். எனக்கு மட்டுமல்ல, என்னைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடிய இந்தப் பொறுப்பை என்னை நம்பி ஒப்படைத்திருக்கக் கூடிய உங்களுக்கெல்லாம் பெருமைதான்.

நான் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்ட நேரத்தில், இந்தக் கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக நான் வெற்றி பெற்று அதற்குரிய சான்றிதழைப் பெற்று அந்தச் சான்றிதழை நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த நினைவிடத்திற்குச் சென்று அங்கே வைத்து நான் வாழ்த்துகளைப் பெற்று அதற்குப் பிறகு பத்திரிகையாளர்களிடத்தில் பேசுகிறபோது சொன்னேன், என்ன உங்கள் திட்டம் என்று கேட்டார்கள். நான் எதையும் பெரியதாக சொல்ல விரும்பவில்லை, ஒரே வரியில் சொல்கிறேன். என்னை தேர்ந்தெடுத்திருக்கக்கூடிய மக்களுக்கு மட்டுமல்ல, எனக்கு வாக்களித்த ஓட்டுப் போட்டிருக்கக்கூடிய மக்களுக்கு மட்டுமல்ல, ஓட்டுப்போடாத மக்களுக்கும் சேர்த்து நான் பணியாற்றப் போகிறேன். ஓட்டுப் போட்டவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். ஓட்டுப் போடாதாவர்கள் இப்படிப்பட்டவருக்கு நாம் ஓட்டுப் போடாமல் விட்டு விட்டோமே என்று வருத்தப்பட வேண்டும். அந்த நிலையை நான் நிச்சயமாக நிறைவேற்றிக் காட்டுவேன் என்று, அன்றைக்கே நான் உறுதி எடுத்துக் கொண்டேன்.

அதைத் தான் இப்போது நான் தொடர்ந்து நிறைவேற்றுகின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். ஆகவே, முதல் இடம் என்று எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த பெருமையாக நான் கருதவில்லை என்றாலும், இந்தியாவிலேயே நம்முடைய மாநிலம் தமிழ்நாடு தான் முதலிடம் என்று சொல்லக்கூடிய நிலை வரவேண்டும். அதற்காகத் தான் நம்முடைய கடமையை நாம் ஆற்றிக் கொண்டிருக்கிறோம்.

எவர்வின் என்றால் அது எப்போதும் வெற்றி என்று பொருள். நான் வந்தவுடன் மேடையில் ஒரு கலை நிகழ்ச்சி, அதைத் தொடர்ந்து ஒரு காணொலியும் பார்த்தேன். அந்த காணொலியைப் பார்த்த நேரத்தில் இந்த எவர்வின் பள்ளிக்கு 50 முறைக்கு மேல் வந்திருப்பேன் என்று சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை அது குறைவு தான். இன்னும் அதிகமாக வருவேன், வர வேண்டும் என்று விரும்பிக் கொண்டிருக்கிறேன்.

கொளத்தூரின் மண்ணின் மைந்தன் என உங்கள் முதல்வர் சொன்னார், உங்கள் முதல்வர் இந்த முதல்வரைப் பார்த்துச் சொன்னார். நான் முதல்வராக இருந்தாலும், சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், எந்தப் பொறுப்பில் இருந்தாலும் என்றைக்கும் உங்களுடைய அன்பை பெற்ற உங்களில் ஒருவனாக நான் இருக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால், நான் எப்போதுமே தமிழகம் முழுவதும் அடிக்கடி கட்சிப் பொறுப்பில் இருந்தபோது, முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறபோது, பல நிகழ்ச்சிகளுக்காக பல மாவட்டங்களுக்கு, பல மாநிலங்களுக்கு, ஏன், பல நாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்பைப் பெறுகிற அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிலே எந்த அளவுக்கு சிறப்பு பெறுகிறேனோ, அப்போதெல்லாம் பெறக்கூடிய அந்த மகிழ்ச்சியை விட, அதில் இருக்கக்கூடிய சந்தோஷத்தை விட இந்த கொளத்தூர் தொகுதி என்று நினைத்து அந்த நிகழ்ச்சிக்கு வந்துவிட்டால் அதில் அதிகமான அளவுக்கு நான் பெருமைப்படுவேன் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். அதுவும், மாணவச் செல்வங்களாக இருக்கக்கூடிய உங்களையெல்லாம் இப்படி ஒரு நிகழ்ச்சியின் மூலமாக சந்திப்பதில் நான் அளவுகடந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

எவர்வின் பள்ளியின் முப்பதாவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கெடுப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் என்னுடைய என்று சொல்லக்கூடாது, நம்முடைய கொளத்தூர் தொகுதியில் இப்படி ஒரு பள்ளி 30 வருடங்களாகச் சிறப்பு பெற்றிருக்கிறது. அந்தப் பெருமையை பெற்றிருப்பது என்பது உள்ளபடியே பாராட்டுக்குரிய ஒன்று.

30 ஆண்டுகள் ஒரு பள்ளி கடந்திருக்கிறது என்று சொன்னால், இதில் படித்த மாணவ, மாணவியருடைய அந்தப் பிள்ளைகள், அந்த மாணவச் செல்வங்கள் இன்றைக்கு உலகின் பல்வேறு இடங்களில் எத்தகைய, எந்தவிதமான பொறுப்புகளில் இருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால் பூரிப்பாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியரின் உயர்வுக்கு வழிகாட்டிய ஒரு கலங்கரை விளக்கமாக விளங்கிக் கொண்டிருக்கின்ற இந்தப் பள்ளி விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.

எனது தொகுதியில் நடக்கும் விழா என்பதால் மட்டுமல்ல, பொதுவாகவே, மாணவச் செல்வங்களைச் சந்திப்பது என்பது எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தை தரக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது. நானே மாணவச் செல்வங்களை அடிக்கடி தேடிச் சென்று சந்திக்கக்கூடிய வழக்கத்தை, பழக்கத்தை பெற்றிருக்கக்கூடியவன். எங்கேயாவது நிகழ்ச்சிக்கு போய்க் கொண்டிருக்கும்போது, சாலை வழியாக காரில் சென்று கொண்டிருக்கும்போது, அந்த வழியில் அமைந்திருக்கக்கூடிய பள்ளிக் கூடங்களின் நிர்வாகிகள், பள்ளிக்கூடத்தில் படிக்கக்கூடிய மாணவச் செல்வங்கள் எல்லாம் அங்கே வாசலில் வந்து நின்று என்னை வரவேற்க, என்னைப் பார்க்க காத்திருப்பார்கள். நான் உடனே என்னுடைய காரை நிறுத்தச் சொல்லி இறங்கி அங்கு நின்று கொண்டிருக்கும் மாணவச் செல்வங்களிடத்தில் சென்று பேசிவிட்டு, உங்களுக்கு என்ன பிரச்சனை, தேவை ஏதாவது உண்டா என்று கேட்டுவிட்டுத் தான் நான் செல்லக்கூடிய வழக்கத்தை, பழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன்.

'வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம், அதில் அனைவரும் மாணவர்கள் தான், அனைவருமே கற்றுக் கொண்டு தான் இருக்கிறோம்' என்று ஒரு அறிஞர் சொன்னார்.

அந்த வகையில், நானும் ஒரு மாணவன் தான் உங்களைப் போல. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது திராவிடப் பாசறையில் பயின்றிருக்கக்கூடிய மாணவன் நான்! பயிலக்கூடிய மாணவன் நான்.

பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடித்துவிட்டாலும், நாள்தோறும் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்ளக்கூடிய முறையில் நான் மாணவனாக இருக்கிறேன். இந்த உணர்வுடன் இன்று உங்களிடையே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுவதில் உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

1992-ஆம் ஆண்டு 78 மாணவர்களுடன், நம்முடைய அன்பிற்கினிய திரு.புருஷோத்தமன் அவர்கள் இந்தப் பள்ளியைத் தொடங்கினார். இது இன்று ஒரு ஆலமரமாக பரந்து விரிந்துள்ளது. 5 பள்ளிகள், 20 ஆயிரம் மாணவர்கள்,
1000 ஆசிரியர்கள் என ஒரு மிகப்பெரும் கல்வி நிறுவனமாக விரிவடைந்திருக்கிறது. இது திரு.புருஷோத்தமன் அவருடைய உழைப்பால் மட்டுமே நிகழவில்லை. அவருடைய உழைப்பையும் தாண்டி, கல்வியை வெறும் வியாபாரமாகப் பார்க்காமல், ஏழை, எளிய பெற்றோர்கள் மீதான அக்கறையோடு அவர் செயல்பட்ட காரணத்தால் தான் இந்த வளர்ச்சியை எவர்வின் பள்ளிக் குழுமம் பெற்றிருக்கிறது.

இதில் ஒரு முக்கியம் என்னவென்று பார்த்தீர்கள் என்றால், 30 ஆண்டுகளாக பெண் ஆசிரியர்களைக் கொண்டு மட்டுமே இந்த எவர்வின் பள்ளி இயங்கி வருகிறது. ஆரம்பப் பள்ளியில், பெண் ஆசிரியைகளை மட்டும் நியமிக்க வேண்டும் என்று குரல் கொடுத்த இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். அதை நிறைவேற்றி கொண்டிருப்பது தான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம். ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அதை செயல்படுத்திக் காட்டினார். இப்போது ஒரு தனியார் பள்ளியில் முழுக்க முழுக்க பெண் ஆசிரியைகள் மட்டுமே கல்வியை கற்றுத் தருகிறார்கள் என்பதைப் பார்க்கிறபோது உள்ளபடியே பாராட்டுக்குரியது.

பெண் ஆசிரியர்களை மட்டும் வைத்துப் பள்ளி நடத்துவது என்பது மட்டுமல்ல, எவர்வின் குழுமப்பள்ளிகள் அனைத்துமே ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ளது என்பதும் பாராட்டுக்குரிய ஒன்று.

கழக ஆட்சியும் அதுபோலத்தான், தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களும் கல்வியில் முன்னேற வேண்டும். கல்வி கற்கும் வசதிகள் பரவலாக, சமமாக இருக்க வேண்டும் என்று கருதி, தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது சமச்சீர் கல்வி, ஏழை, பணக்காரன் என்று பார்க்காமல், அனைவருக்கும் ஒரே கல்வி, சமமான கல்வியை வழங்கிட வேண்டும் என்பதற்காகத்தான் சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து அன்றைக்கு நிறைவேற்றினார். அத்தகைய சீரான வளர்ச்சியை அனைத்துத் துறைகளிலும் கொடுப்பதுதான் நான் இப்போது தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கக்கூடிய திராவிட மாடல். அத்தகைய மாடலைத் தான் நம்முடைய புருஷோத்தமன் அவர்களுடைய தலைமையில் எவர்வின் பள்ளியும் பின்பற்றி வருகிறது என்பதை எண்ணிப் பார்க்கிறபோது நான் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வியிலே பின்தங்கிய மாணவர்களுக்கும் சிறப்பு பயிற்சிகளைக் கொடுத்து நூறு விழுக்காடு தேர்ச்சியை பெற்று வருகிறது.

மாணவர்களாகிய நீங்கள் சமூகத்தில் உள்ள பல நிலைகளில் பல பொறுப்புகளை எதிர்காலத்தில் ஏற்க இருக்கிறீர்கள். சமூகத்தின் அனைத்துப் பின்னணியில் இருந்தும் வருபவர்களையும் ஒரேபோல, சமமாக, உங்களில் ஒருவராகக் பார்க்கும் பழக்கத்தை, உயர்ந்த பண்பை நீங்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். ஏற்றத் தாழ்வுகள், வேற்றுமைகளைக் கடந்து இங்கே நீங்கள் நண்பர்களாக இருக்கிறீர்கள். இந்த நட்புணர்வு பள்ளிக் காலத்தோடு நின்று விடக்கூடாது, என்றென்றும் இந்த நட்புணர்வு தொடர வேண்டும். இந்த ஒற்றுமை உணர்வு இருந்தால் தான் நம் மாநிலம் ஆனாலும், நாடானாலும் வளர்ச்சியை பெற முடியும். வெறுப்புணர்வால், பகைமையுணர்வால் சாதிக்கப் போவது எதுவுமே கிடையாது. அத்தகைய உணர்வுகளுக்கு நீங்கள் என்றுமே இடம் தந்து விடக்கூடாது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக அதைத்தான் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழர், இந்தியர் என்று நாம் சொல்கின்ற அடையாளங்கள் கூட நம் அனைவரையும் இணைக்கின்ற அடையாளங்களாகத் தான் இருக்க வேண்டுமே தவிர, யாரையும் வெறுப்பதற்கான கருவிகளாக அவை அமைந்துவிடக் கூடாது.

இந்தப் பண்பை, பள்ளி பருவத்திலேயே நீங்கள் பெற்றிருக்க வேண்டும். தந்தை பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாள் என்றும், சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாள் என்றும், கொண்டாடி, அந்த நாளில் உறுதிமொழிகள் எடுக்கவேண்டும் என்று அரசாணைகளை நாம் வெளியிட்டிருக்கிறோம்.

ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களால் அந்த மக்களுக்கு திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருந்த கல்விக் கதவுகளை பல நூறு ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகுதான் நாம் திறந்திருக்கிறோம். நம்மை பள்ளிகளை நோக்கி அழைத்து வருவதற்கான திட்டங்களை நீதிக்கட்சி செயல்படுத்தியது. அதனை மேலும் செம்மைப்படுத்தியவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள். அதனை மாணவர்களாகிய நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், அந்தப் பெருந்தலைவரின் பிறந்தநாளை ‘கல்வி வளர்ச்சி நாளாக’ கொண்டாட வேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அறிவித்தார்கள்.

இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, மீண்டும் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை இன்றைக்கு நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இன்னொன்றையும் நான் சொல்ல வேண்டும். அண்மையில் நிதிநிலை அறிக்கையில் தாக்கல் செய்தோம். எல்லா துறைகளுக்கும் நிதிகளை ஒதுக்கியிருக்கிறோம். இந்த நிதி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும்
36 ஆயிரத்து 895 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறோம். கொரோனா கால பொது முடக்கம், கட்டுப்பாடு இவையெல்லாம் ஏற்பட்டது. அதனால், கற்றல், இழப்பு ஏற்பட்டது. அதை சரிசெய்ய, ‘இல்லம் தேடிக் கல்வி’என்ற திட்டத்தை அறிவித்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதை செயல்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஈடுபட்டு அதில் வெற்றி கண்டிருக்கக்கூடிய இந்தத் துறையினுடைய அமைச்சராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய திரு.அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்களை நான் உங்கள் அனைவரின் சார்பில் வாழ்த்த, பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதேபோல், அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்கிறோம். இப்படி தொடர்ந்து புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். உங்கள் வளர்ச்சிக்கும், எதிர்காலத்திற்கும் அடித்தளம் அமைக்கப்போவது இந்தப் பள்ளிப் பருவம் தான். நீங்கள் என்னவாக ஆகப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதும் இந்தப் பள்ளிப் பருவம் தான். அதனால் தான், இதில் நான் மிக மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறேன். போட்டி மிகுந்த இந்த உலகத்தில் நீங்கள் அதற்கேற்ப உங்களைத் தகுதிக்குரியவர்களாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

'நான் முதல்வன்' என்ற புதுமையான வழிகாட்டித் திட்டத்தையும் நான் தொடங்கி வைத்திருக்கிறேன். பள்ளிப் பருவம் என்பது புத்தகங்களோடு அடங்கிவிடாமல் எல்லா திசைகளிலும் இருக்கக்கூடிய கற்கக்கூடிய பருவமாக அமைய வேண்டும். எந்த வித அழுத்தங்களும் இல்லாமல் மகிழ்ச்சிக்குரிய காலகட்டமாக அமையட்டும். கற்றல் என்பதே மகிழ்ச்சியோடு ஈடுபடக்கூடிய ஒரு செயல்பாடாக மாறட்டும். அதற்கு நம்முடைய ஆசிரியப் பெருமக்கள் உதவி செய்யவேண்டும். பள்ளிகள் என்பது, திறந்த மனதுடன் வரும் குழந்தைகளுக்கு, அறிவை ஊட்டி, அறிவியல் பூர்வமான சிந்தனைத் திறனை வளர்த்து, இந்தச் சமூகத்தின் பொறுப்புமிக்க மனிதர்களாக உருவாக்கக்கூடிய இல்லங்கள் தான் இந்தப் பள்ளிகள். இந்த இல்லங்களில் இருக்கக்கூடிய ஆசிரியர்கள், இன்னொரு பெற்றோராக மாணவர்களை அரவணைத்து வழிநடத்த வேண்டும்!

நல்லிணக்கமிக்க பூந்தோட்டமாக உங்கள் ஊரும் – இந்த மாநிலமும் - நமது நாடும் திகழ, பெற்றோர்கள் – ஆசிரியர்கள் – மாணவர்கள் ஆகியோர் இணைந்து சமத்துவ சிந்தனையை வளர்க்கும் தூதுவர்களாக மாறிட வேண்டும். உங்கள் ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்ள விரும்புவது இதைத்தான் என்பதை அழுத்தத்திருத்தமாக எடுத்துச் சொல்லி, இத்தகைய, நிறைவான, மகிழ்வான நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்காக மீண்டும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய கொளத்தூர் தொகுதிக்கு நான் வருகிறபோதெல்லாம் இந்தப் பள்ளியினுடைய பொறுப்பாளராக இருக்கக்கூடிய ஏறக்குறைய 30 ஆண்டுகாலம் இதைக் கட்டிக்காத்து தொடர்ந்து வெற்றி நடை போட்டிருக்கக்கூடிய திரு.புருஷோத்தமன் அவர்களை அடிக்கடி சந்திக்கக்கூடிய வாய்ப்பைப் பெறக்கூடியவன். எனவே, அவருடைய பணி தொடர வேண்டும், அவருடைய குடும்பத்தைச் சார்ந்திருக்கக்கூடியவர்கள் அவருக்கு துணையாக இருந்து பணியாற்றக்கூடிய அந்தச் செய்தியை நான் அவ்வப்போது அறிந்து கொள்வது உண்டு. அமைச்சர் திரு.சேகர்பாபு அவர்கள் அடிக்கடி என்னிடத்தில் இந்தப் பள்ளியைப் பற்றி, இந்தப் பள்ளியினுடைய சிறப்பைப் பற்றி, இந்தப் பள்ளியை நடத்தக்கூடிய புருஷோத்தமன் அவர்களைப் பற்றி, அவர்கள் குடும்பத்தைப் பற்றி எடுத்துச் சொல்வது உண்டு. ஆகவே, அவரது பணி தொடர வேண்டும். அதன் மூலமாக நீங்கள் வெற்றி பெற வேண்டும், நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்று அன்போடு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து, 30ஆம் ஆண்டு விழாவை காணக்கூடிய இந்தப் பள்ளி இன்னும் பல ஆண்டுகாலம், நூறாண்டு காலம், அதையும் தாண்டி சிறப்பு பெற வேண்டும் என்று கூறி, இந்த நல்ல வாய்ப்பிற்கு மீண்டும் ஒரு முறை என்னுடைய நன்றியைத் தெரிவித்து விடை பெறுகிறேன்." இவ்வாறு உரையாற்றினார்.

Also Read: சிக்கும் அதிமுக மா.செ.. அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி.. தம்பியே புகார் கொடுத்ததால் பரபரப்பு!