Tamilnadu
சிக்கும் அதிமுக மா.செ.. அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி.. தம்பியே புகார் கொடுத்ததால் பரபரப்பு!
விருதுநகர் அ.தி.மு.க கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி செய்ததாக அவரது தம்பி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்து மற்றும் விருதுநகர் அ.தி.மு.க கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அவர்களின் இளைய சகோதரரான நல்லதம்பி என்பவர் வழக்கறிஞராகவும் அ.தி.மு.கவில் மாநில மாவட்ட அளவிலான பல்வேறு பொறுப்புகளையும் வகித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்ததாக புகார் அளித்திருந்தார். இதனடிப்படையில் அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இவர் நீக்கப்பட்டார்.
இந்நிலையில் நல்லதம்பி தனது சகோதரரான விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வள்ளி (கொடைக்கானல் மதர் தெரசா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்) ஆகிய இருவரும் சேர்ந்து பத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் பல்கலைக்கழகத்திலும் மற்றும் அரசு வேலை வாங்கித் தருவதாக சுமார் 40 லட்சம் வரை பணம் பெற்றுள்ளதாகவும் ஆனால் எந்தவித பணியும் யாருக்கும் வாங்கித் தர படவில்லை எனவே பணத்தை திருப்பித் தரும்படி கேட்ட பொழுது காத்திருக்கச் சொல்லி பல ஆண்டுகளாக இழுத்தடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடியில் ஈடுபட்டு வரும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
புகார் மனு மீது விசாரணை நடத்துமாறு சாத்தூர் துணை காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர்கள் இடையே கருத்து மோதல்கள் இருந்து வரும் நிலையில் ரவிச்சந்திரன் மீது அவரது சகோதரர் பண மோசடி புகார் கொடுத்துள்ளது அ.தி.மு.க வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!