Tamilnadu

பெண்கள் விடுதியில் மாணவிகளின் உடைகளை திருடி அணிந்து உலா வந்த இளைஞர் கைது!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். மாணவர்கள், மாணவியருக்கு, தனித்தனி விடுதிகள் உள்ளன. 500க்கும் மேற்பட்ட மாணவியர் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக மாணவியர் விடுதிக்குள் மர்ம நபர்கள், ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக மாணவியர் விடுதி வார்டனிடம் புகார் அளித்தனர்.

கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அதிகாலை பெண்கள் விடுதி பகுதியில் சந்தேக நபரின் நடமாட்டம் இருந்ததாகவும், மாணவிகள் தங்கியிருக்கும் ஒரு அறையின் ஜன்னல் வழியாக லேப்டாப் எடுக்க முயற்சித்ததாகவும், பல்கலைக்கழக பதிவாளர் போலிஸில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக வடவள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து சந்தேக நபர் பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை கல்வீராம்பாளையம் டான்சா நகர் பகுதிகளில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த கல்வீராம்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேந்தர் (19) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அந்த இளைஞர் பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் இரவு நேரங்களில் உலா வந்த நபர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் பாரதியார் பல்கலைக்கழக விடுதி பகுதியில் சுவர் ஏறி குதித்து சென்றதாகவும், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுவர் ஏறி குதித்து சென்று லேப்டாப் திருட முயன்றதாகவும் ஒப்புக்கொண்டார்.

மேலும் அவர் அடையாளம் தெரியாமல் இருக்க பல்கலைக்கழக விடுதியில் உள்ள மாணவிகளின் உடைகளை தன் உடை மீது அணிந்துகொண்டு உலா வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சுரேந்தர் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலிஸார் கைது செய்தனர்.

Also Read: “காரை எடுத்துக்கோங்க.. ஆனா கமலாலயம் போயிடாதீங்க..!” : எடப்பாடி பழனிசாமியை கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்!