Tamilnadu

காவல்துறை பற்றி சகட்டுமேனிக்கு கருத்துகளை தெரிவிப்பதா? -தனி நீதிபதியின் கருத்த நீக்கிய ஐகோர்ட் நீதிபதிகள்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர், நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதனை விசாரித்த போலீசார், தவறான புகார் என புகாரை முடித்து, நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்து முடித்தவைத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் தற்போது காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளதாகவும் 10% அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். ஊழல்வாதி உள்ள அதிகாரிகளை களைந்து, திறமையற்றவர்களுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டிய நேரம் இது என தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

தனி நீதிபதியின் இந்த கருத்துக்களை நீக்கக்கோரி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பிஎன் பிரகாஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது டிஜிபி சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து பின்பு ,வழக்கின் எல்லைக்கு அப்பாற்பட்டு, இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்து இருப்பது சட்டத்தின்படி ஏற்கத்தக்கதல்ல என்று வாதிட்டார். இதுபோல கருத்துக்கள் உயிரை பணையம் வைத்து பணியாற்றக்கூடிய காவல் துறையினர் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பிரதிவாதிகளாக இல்லாதவர்கள் பற்றிய கருத்துகளை தெரிவிக்க கூடாது என்றும் குறிப்பிட்டார்.. மேலும் உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றங்களுக்கு வழங்கியுள்ள ஆலோசனையில் வழக்கிற்கு அப்பாற்பட்டு , சகட்டுமேனிக்கு கருத்துகளை தெரிவிக்க கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தனி நீதிபதியின் கருத்துக்களை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Also Read: ’எத்தனை கோடி கொடுத்தாலும் ரசிகர்களை கெடுக்கும் இதில் நடிக்க முடியாது’ : கதவை மூடிய அல்லு அர்ஜூன்..!