Tamilnadu

"ஆளுநர் கார் மீது கற்கள், கறுப்புக் கொடிகள் வீசப்படவில்லை.. நடந்தது என்ன?”: தமிழ்நாடு காவல்துறை விளக்கம்!

மயிலாடுதுறையில் தமிழக ஆளுநரின் வாகனம் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள், கொடிகளை வீசியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு இன்று ஆளுநர் ரவி சென்றார். தெலங்கானாவில் நடைபெற உள்ள புஷ்கர விழாவுக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து விழா எடுக்கப்படும். இங்கிருந்து ஞானரதம் இன்று தெலுங்கானாவிற்கு செல்லும். இந்த பயணத்தை ஆளுநர் ரவி தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் தமிழக ஆளுநர் தமிழ்நாட்டின் கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறார். தமிழக அரசு கொண்டு வந்த மசோதாக்களை அவர் ஏற்கவில்லை. 420 ஆண்டுகால தமிழ்மரபு உள்ள மடமாக தருமபுரம் ஆதீனம் உள்ளது. எனவே ஆளுநரை இந்த விழாவிற்கு அழைப்பது தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை எனக் கூறி பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னம்பந்தல் பகுதியைக் கடந்து செல்லும்போது ஆளுநர் வாகனம் மீது கறுப்புக் கொடிகள் வீசப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் இதுதொடர்பாக போலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூறுகையில், ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. ஆளுநரின் கான்வாய் கடந்துசென்ற பிறகே, போராட்டக்காரர்கள் பிளாஸ்டிக் பைப்புகளில் கட்டப்பட்டிருந்த கறுப்புக் கொடிகளை வீசினர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புகள் அமைத்து கட்டுக்குள் வைத்திருந்ததாகவும், கைது செய்து வாகனத்தில் ஏற்றியதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.