Tamilnadu

“வீட்டை வாடகை எடுத்து போலி மதுபான தயாரிப்பு - 5 பேரை மடக்கி பிடித்த போலிஸ்” : துப்பு துலங்கியது எப்படி ?

திருச்சி அருகே உள்ள மணிகண்டம் செட்டி ஊரணி பட்டி பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது வீட்டை காரைக்காலை சேர்ந்த சௌந்தரராஜன் கார்த்திக் (35) என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார்.

இந்நிலையில் பாண்டிச்சேரியில் போலி மதுபானம் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருள்களை வாங்கிவந்து திருவாரூரை பாலமுருகன் (32), வெற்றிச்செல்வன் (22), விஜயகுமார் (23), சூர்யா (25) ஆகியோரை வைத்து போலி மதுபானங்களை தயாரித்து போலி லேபிள்களை பாட்டில்களில் ஒட்டி, திருச்சி சுற்றுவட்ட மாவட்டங்களுக்கு கள்ள மார்க்கெட்டில் கார்த்திக் மதுபானங்களை விற்பனை செய்து வந்துள்ளான்.

இது சம்பந்தமாக மது அமலாக்க தனிப்பிரிவு போலிஸாக்கு தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் சுஜாத்தா தலைமையிலான போலிஸார் நேற்று முன்தினம் அதிரடியாக அந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனை செய்தபோது கார்த்திக், பாலமுருகன், வெற்றி செல்வன், சூர்யா, விஜயகுமார், ஆகிய 5 பேரும் போலி மதுபானங்களை பாட்டிலில் நிரப்பி ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டிருந்தபோது பிடிபட்டனர்.

அவர்களிடம் இருந்து ஆயிரத்து 700 மதுபான பாட்டில்கள் இன்னோவா கார் இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சுஜாதா திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி முத்தரசு தலைமையில், திருவெறும்பூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மீராபாய் மற்றும் போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் சுஜாதா பிடிபட்ட 5 பேரையும் ஆயிரத்து 700 மது பாட்டில்களையும் இன்னோவா கார் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலிஸாரிடம் ஒப்படைத்தார்.

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலிஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருவதோடு தப்பி ஓடிய வீட்டின் உரிமையாளர் வெள்ளசாமியைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பள்ளி மாணவனின் முகத்தை சிதைத்த மர்ம கும்பல்.. வீட்டுக்கு வெளியே உறங்கியபோது நேர்ந்த அவலம்: நடந்தது என்ன?