Tamilnadu

NIT கல்லூரி விடுதியில் ஆந்திரா மாணவி தூக்கிட்டு தற்கொலை.. போலிஸ் விசாரணை!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே என்.ஐ.டி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாநில அளவில் மட்டுமல்லாமல் அகில இந்திய அளவிலும், சர்வதேச அளவிலுமான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் காக்கிநாடா பான்குடி பகுதியைச் சேர்ந்த அவளா சௌமியா தேவி(20) என்ற மாணவி என்.ஐ.டி கல்லூரி விடுதியில் தங்கி பிடெக் சிவில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் அவருடன் திருவாரூரைச் சேர்ந்த தீட்சனா என்ற சக மாணவி ஒருவரும் தங்கி கல்வி பயின்று வருகிறார்.

இதையடுத்து நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் தீட்சனா வெளியில் சென்றுள்ளார். இதனால் விடுதி அறையில் அவளா சௌமியா தேவி மட்டுமே இருந்துள்ளார். பிறகு வெளியே சென்றிருந்த தீட்சனா இரவு விடுதிக்கு திரும்பி வந்து அறையை திறக்கும்போது கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.

இதனால், பலமுறை கதவை தட்டியும் கதவு திறக்காததால் , பலமாக கதவை ஓங்கி உதைத்துள்ளார். அப்போது கதவு திறந்துள்ளது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அவளா செளமியா தேவி தூக்கில் தொங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து உடனடியாக அவர் விடுதி வார்டன் மற்றும் கல்லூரி நிர்வாகிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளார். பிறகு கல்லூரி விடுதிக்கு வந்த போலிஸார் அவளா செளமியா தேவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அவளா செளமியா தேவிக்கு ஐதராபாத்தில் படிக்கும் போது, ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் தொடர்பாக அவரது வீட்டில் பிரச்சனை இருந்துள்ளது.

மேலும் தற்கொலைக்கு முன்பு அவளா சௌமியா தேவிக்கு அவரது காதலன் செல்போனில் பேசியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் அவளா சௌமியா தேவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து துவாக்குடி போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Also Read: ”மாதாமாதம் இந்த தேதிக்கு 30,000 வரனும்” - ஹோட்டல் மேனேஜரை மிரட்டிய போலி SI-ஐ மடக்கி பிடித்த போலிஸ்!