Tamilnadu

“நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை” : வருமானவரி துறை தடலாடி!

திரைப்பட தயரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் எனவே எதிர் மனுதாரராக உள்ள வருமானவரி துறையை வழக்கில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மிஸ்டர் லோக்கல் படத்திற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில் சுமார் 4 கோடி ரூபாய் பாக்கியுள்ளது, அதனை வழங்க பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உத்தரவிட கோரியும் அதுவரை அவர் படங்களை வெளியிட தடை விதிக்க கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஏற்கனவே தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் பல உண்மைகளை மறைத்துள்ளதாகவும், மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நஷ்டம், மற்றும் விநியோகிஸ்தர்களுடன் சிவ கார்த்திகேயனுக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து வழக்கில் எந்த தகவலும் இல்லை எனவே அவரது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிவகார்த்திகேயன் வழக்கில் எதிர்மனுதாரரான வருமான வரித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வருமான வரிதுறை அதிகாரி தாமோதரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சிவகார்த்திகேயன் மற்றும் ஞானவேல்ராஜா இடையே உள்ள பிரச்சனைகள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அது அவர்கள் இருவருக்கும் இடையிலானது. இதற்கும் வருமான வரித்துறைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனவே சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் இருந்து வருமான வரித்துறையை நீக்க வேண்டும் என அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Also Read: ’அரபிக் குத்து’ பாடல் பற்றி விஜய் என்ன சொன்னார் தெரியுமா? மனம் திறந்த சிவகார்த்திகேயன்!