Tamilnadu
’1 லட்சம் கொடுத்தா 2.16 லட்சம் தரேன்’ : ஆசைக்காட்டி மோசம் செய்த பாஜக நிர்வாகி.. ரவுண்ட்அப் செய்த பெண்கள்!
சேலம் மாநகர், ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். பாஜக பிரமுகரான இவர் நரேந்திரமோடி விகாஷ் மிஷன் என்ற அமைப்பின் மாநிலத் தலைவராக உள்ளார்.
ஜஸ்ட் வின் ஐடி டெக்னாலஜி (Just win IT technology ) என்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனத்தை சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த 2019ம் ஆண்டு துவக்கினார். அப்போது தங்கள் நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 18 ஆயிரம் ரூபாய் வீதம் 12 மாதத்திற்கு 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாயாக திருப்பி தருவதாக கூறி கவர்ச்சிகரமான விளம்பரம் செய்ததின் பேரில், பல்லாயிரக்கணக்கானோர் இவரிடம் முதலீடு செய்தனர்.
சேலம் ,நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் முதலீடு செய்தனர். குறிப்பாக ஏராளமான பெண்கள் இதில் முதலீடு செய்துள்ளார்கள்.
இந்த நிலையில் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு கடந்த ஒரு வருட காலமாக முறையாக பணம் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், பணத்தை திருப்பிக் கேட்டு பாலசுப்பரமணியத்தை நாடிய போது, மீதி தரவேண்டிய பணத்திற்கு கடந்த மார்ச் மாத தேதியிட்டு காசோலை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து காசோலையை வங்கியில் செலுத்தியபோது பாலசுப்ரமணியம் கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் சுமார் 50 பேர் பாலசுப்ரமணியம் வீட்டை முற்றுகையிட்டதோடு, அவருடைய வீட்டிற்குள் சென்று அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணத்தை திருப்பித் தரும் வரை வீட்டை விட்டுச் செல்லமாட்டோம் எனக் கூறி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் , நாமக்கல்லை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் 2 கோடியே 16 லட்சம் ரூபாய் அளவில் மோசடி செய்ததாக கூறிய பெண்கள், முற்றுகை போராட்டம் தொடரும் என்றனர். இதேபோல் தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்த பாலசுப்பிரமணியம் மீது மோசடி வழக்கு பதிவு செய்து , காவல் துறையினர் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக, ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாஜக பிரமுகரான பாலசுப்ரமணியம் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமினில் வெளியே வந்தவுடன் மீண்டும் ஜஸ்ட் வின் என்ற புதியப் பெயரில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனத்தைத் தொடங்கி தற்போது பல கோடி ரூபாய் மக்களிடம் ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது.
பெண்களின் போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் பாஜக பிரமுகர் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!