Tamilnadu
1 மணி நேரத்தில் மதுரை to சென்னை.. பறந்து வந்த கல்லீரல்: உடனடி அறுவை சிகிச்சை- அசத்திய அரசு மருத்துவர்கள்!
மதுரையில் மூளைச்சாவு அடைந்த நபரின் கல்லீரல், விமானத்தில் சென்னை எடுத்து வரப்பட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 52 வயது நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 52 வயது நோயாளிக்கு கல்லீரல் பிரச்சனை இருந்துவந்தது. இதனால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 39 வயது நபர், கடந்த 10ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில், அவரது குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் ஸ்டான்லி மருத்துவக் குழுவுடன் இணைந்து, மதுரையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம், ஒரு மணி நேரத்தில் அவரது கல்லீரல் கொண்டுவரப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு வரப்பட்டது.
கல்லீரல் அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் ஜஸ்வந்த் தலைமையில், மயக்க மருந்து துறை பேராசிரியர் மாலா, கல்லீரல் மருத்துவ சிகிச்சைப் பிரிவு தலைவர் ரேவதி உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் 12 மணி நேரம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
இதுகுறித்து ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் பாலாஜி கூறுகையில், “கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைத் துறையில், 2009ஆம் ஆண்டு முதல் இதுவரை 81 பேருக்கு உடல் உறுப்பு தானம் பெற்று, மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த நபர், தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். இது அனைவரின் கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படாத நிலையில் தற்போது இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!