Tamilnadu

”உங்கள் பொய்களை இங்கே உருட்ட வேண்டாம்!” : பா.ஜ.க கும்பலை வெளுத்தெடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையினை விளக்கியும்-உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணிக்கு மாபெரும் வெற்றிக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தும் செங்கல்ல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் பொதுக்கூட்டங்களை மாலை நேரத்துக்குக் கல்லூரிகள் என்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் சொல்வார்கள்.

அத்தகைய பொதுக்கூட்டங்களின் மூலமாகத்தான் நம்முடைய கொள்கைகளை தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் நாம் விதைத்தோம்.

நம்முடைய சாதனைகளைச் சொல்வதற்கும் -

நம்முடைய கொள்கைகளை விளக்குவதற்கும் -

போராட்டக்களங்களை உருவாக்குவதற்கும் -

எத்தனை சோதனைகள் வந்தாலும் -

எத்தனை அவதூறுகள் நம்மீது பாய்ச்சப்பட்டாலும் -

எத்தனையோ வீண்பழிகள் சுமத்தப்பட்டாலும் -

உடனடியாக மக்கள் மன்றத்தைச் சந்தித்து விளக்கமளிக்க இத்தகைய பொதுக்கூட்டங்களைத் தான் பேரறிஞர் அண்ணா அவர்களும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் நடத்துவார்கள்.

மக்களோடு மக்களாக நம்மை இணைப்பவை என்பவை இத்தகைய பொதுக்கூட்டங்களாகத்தான் அமைந்திருக்கின்றன.

நவீன காலத்தில் எத்தனையோ தகவல் தொடர்புச் சாதனங்கள் வந்துவிட்டாலும் நேருக்கு நேராகச் சந்தித்து விளக்கமளிக்கும் போது கிடைக்கும் உணர்வு வேறு எதிலும் கிடைப்பது இல்லை.

கொரோனா என்ற பெருந்தொற்று எத்தனையோ தடைகளைகளை ஏற்படுத்தியதைப் போல - பொதுக்கூட்டங்கள் நடத்த முடியாத சூழலையும் ஏற்படுத்தியது. அத்தகைய நெருக்கடியான சூழலிலும் நாம் சாதனையைப் படைத்தோம்.அதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனை ஆகும். கூட்டம் பேசிப்பேசியே ஆட்சியைப் பிடித்தவர்கள் நாம் என்று சொல்வார்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிகளவு பொதுக்கூட்டங்கள் நடத்தாமலேயே - ஆட்சியைப் பிடித்தோம். இன்னும் நெருக்கமாக மக்களை வீதிவீதியாக - வீடுவீடாகச் சென்று நாம் சந்தித்தோம்.

நாம் என்று நான் சொல்வது லட்சக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களைத் தான் சொல்கிறேன்.

தலைவர் என்று என்னை நீங்கள் அழைக்கும் போது - அந்த சொல்லுக்குள் தொண்டர்களாகிய நீங்களும் இருக்கிறீர்கள். தொண்டர்களே என்று உங்களை நான் அழைக்கும் போது - அந்த சொல்லுக்குள் நானும் இருக்கிறேன். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். நம்முடைய இயக்கம் என்பது தலைவர் - தொண்டர் என்று இல்லாமல் அண்ணன் - தம்பி என்ற பாசப்பிணைப்புடன் உருவாக்கப்பட்ட இயக்கம் ஆகும். இந்த பாசக்கயிறு இறுக்கமாக இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது.

'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே' என்று கரகரக்கும் அந்தக் காந்தக் குரலில் அழைக்கும் போது நம் உள்ளத்தில் ஏற்படுகின்ற உணர்ச்சிக்கும், மலர்ச்சிக்கும் ஈடு இணை எதுவும் கிடையாது.

உடன்பிறப்புகளே என்ற ஒற்றைச் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்களே தவிர - நாம் வேறு எதற்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல.

அத்தகைய தலைவர் அவர்கள் மறைந்தும் - நிறைந்தும் நம்மை எல்லாம் இன்றும் இயக்கிக் கொண்டு இருக்கிறார்.

* நாடாளுமன்றத் தேர்தலா? திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு மகத்தான வெற்றி!

* ஊரக உள்ளாட்சித் தேர்தலா? திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு மகத்தான வெற்றி!

* சட்டமன்றத் தேர்தலா? கழகம் கோட்டையைக் கைப்பற்றியது!

* நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலா? கழகக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றி!

இத்தகைய வெற்றிச் செய்திகள் மட்டுமே நம்முடைய காதில் விழும் அளவுக்கு பணியாற்றிய லட்சக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் அனைவருக்கும் - என்னுடைய இதயத்தின் அடியாளத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களித்தால் அவர்கள் நன்மை செய்வார்கள், பல்வேறு திட்டங்களை உருவாக்கிக் கொடுப்பார்கள், கூப்பிட்ட குரலுக்கு செவிமடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களைத் தான் நான் உயிருக்கு உயிராக மதிக்கிறேன்.

அந்த உணர்வோடுதான் உங்கள் முன்னால் நின்று கொண்டு இருக்கிறேன்!

நேற்றும் இன்றும் தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் இத்தகைய மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கழகத்தின் முன்னணியினர்- தலைமைக் கழகத்தின் பேச்சாளர்கள் - மாநிலம் முழுவதும் சென்றிருக்கிறார்கள். நான், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு வந்திருக்கிறேன்.

தலைநகர் சென்னைக்கு தலைவாசலாக இருக்கிற ஊர் செங்கல்பட்டு. அதனால் செங்கல்பட்டுக்கு வராமல் யாரும் போகும் போடமுடியாது.

ஒரு காலத்தில் செங்கழுநீர்பட்டு என்று அழைக்கப்பட்டது தான் இன்றைய செங்கல்பட்டு.

இங்கே இருந்த நீர்நிலைகளில் செங்கழுநீர்ப் பூக்கள் அதிகம் இருந்ததால் அப்படி அழைக்கப்பட்டதாகச் சொல்வார்கள்.

பல்லவ மன்னர்களின் ஆட்சி காலத்தில் கலை - பண்பாட்டின் அடையாளமாக இருந்த பகுதிதான் இந்த செங்கல்பட்டு.

மாமல்லபுரத்தில் உருவாக்கப்பட்ட கலைக் கூடங்கள் இன்றளவும் தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கின்ற இடங்களாக அமைந்திருக்கின்றன.

செங்கல்பட்டு நகரத்தில் காணப்படும் கோட்டை என்பது விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களது போர்களுக்கான மிகமுக்கியமான பாசறையாக இருந்த இடம் இது.

செங்கல்பட்டு என்பது புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம் என்று இப்போது சொல்லப்பட்டாலும் -

1969 க்கு முன்பு வரை ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு தலைமையிடமாக விளங்கியது இந்த செங்கல்பட்டு தான். எனவே அந்தக் காலத்திலேயே மாவட்டத்தின் தலைநகரமாக இருந்த பெருமையுடைய ஊர் தான் இது.

பாலாறு ஓடும் நீர்ப் பரப்பு இது. ஏரிகள் நிரம்பிய ஏற்றமிகு மாவட்டம் இது. விவசாயப் பெருங்குடி மக்கள் அதிகம் வாழும் மாவட்டம். ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்பூங்காவான சிறுசேரி சிப்காட் தொழில் பேட்டை உள்ள மாவட்டம். தமிழகத்தின் டெட் ராய்டு என்று சொல்லத்தக்க வகையில் கார் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாவட்டம் இது.

இத்தகைய பெருமை மிகு மாவட்டத்தில் நடைபெறக்கூடிய கூட்டத்தில் கலந்து கொள்வதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

ஒரு காலத்தில் தடா முதல் மதுராந்தகம் வரையில் இருந்தது இந்த ஒன்று பட்ட செங்கை மாவட்டம்.

இங்கு கழகம் வளர்த்த தீரர்களான

* சி.வி.எம். அண்ணாமலை

* டி.ஆர்.ராஜரெத்தினம்

* மதுராந்தகம் ஆறுமுகம்

* முன்னாள் எம்.பி. நாகரத்தினம்

* முன்னாள் எம்.பி.பரசுராமன்

* எம்.வி.ராமு

* குன்றத்தூர் தா.மோகனலிங்கம்

* கண்டோன்மெண்ட் சண்முகம்

* கட்ட தாமோதரன்

* கோ.சு.மணி

* டி.கே.லட்சுமணம் - ஆகியோரது உழைப்பால் உருவான கழகம் இது.

தலைவர் கலைஞர் அவர்கள் இதனை பல்லவ நாடு என்று தான் அழைப்பார்கள்.

எனது வாழ்க்கையில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்துக்கு வித்திட்ட ஊரும் இந்த பல்லவநாடு தான்.

1976 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி கலைக்கப்பட்ட போது -

மதுராந்தகத்தில் தான் 'வெற்றி நமதே' நாடகம் அரங்கேற்றுவதற்காக வந்திருந்தேன்.

ஆட்சி கலைக்கப்பட்டது என்று தெரிந்ததும் - நாடகம் நடத்தப்படவில்லை. சென்னை திரும்பினேன். மிசா சட்டத்தின் படி கைது செய்யப்பட்டேன். சிறையில் அடைக்கப்பட்டேன்.

சிறையில் அடைக்கப்பட்டேன் என்று சொல்வதை விட மக்களின் இதய சிறையில் நான் அன்று முதல் அடைக்கப்பட்டேன்.

சிறையில் இருந்து வெளியே வந்த பிறகுதான் முழுமையான அரசியலுக்கு என்னை நான் ஒப்படைத்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றி வரத் தொடங்கினேன்.

இன்றைய தினம் தமிழ்நாட்டு மக்களால் முதலமைச்சராக அமர வைக்கப்பட்டு இருக்கிறேன் என்றால் அதற்கு அடித்தளம் அமைத்த ஊர் மதுராந்தகம். இத்தகைய தியாக வரலாற்றுக்கு நாம் சொந்தக் காரர்கள்.

அன்றைய தினம் நான் மட்டுமல்ல - திராவிட முன்னேற்றக் கழகத்தின் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சிறைவைக்கப்பட்டார்கள்.

அவர்களது தியாகத்தின் மீதுதான் இந்தக் கழகம் அமைந்துள்ளது. இந்த ஆட்சியும் அமைந்துள்ளது.

1949 ஆம் ஆண்டு கழகம் உருவானது - 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தோம்.

இடைப்பட்ட 18 ஆண்டுகளில் கழகத்தின் தலைவர்களும் தொண்டர்களும் செய்ததைப் போன்ற தியாகத்தை வேறு எந்த அரசியல் கட்சியிலும் பார்க்க முடியாது.

1967 முதல் இன்று வரையிலான இந்த 55 ஆண்டு காலத்தில் ஆறுமுறை ஆட்சியில் அமர்ந்துள்ளோம்.

பலதேர்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம்.

வெற்றி பெற்றபோது மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது மக்களுக்காக போராடி வந்துள்ளோம்.

வெற்றி நமது கண்ணை மறைத்ததும் இல்லை -

தோல்வி நம்மை சோர்வடையச் செய்ததும் இல்லை.

நாம் எப்போதும் மக்களோடு மக்களாக இருக்கிறோம்.

மக்களுக்காக இருக்கிறோம்.

அதனால் தான் மக்கள் நம்மோடு இருக்கிறார்கள்.

அதன் அடையாளம் தான் திராவிட முன்னேற்றக் கழகம் இன்று ஆளும்கட்சியாக அமர வைக்கப்பட்டு இருப்பது ஆகும்.

இந்தக் கூட்டத்தின் வாயிலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள், முன்னணியினருக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது - நீங்கள் அனைவரும் தொண்டர்களோடு தொண்டர்களாக இருங்கள் என்பதுதான்.

இந்தக் கூட்டத்தின் வாயிலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது - நீங்கள் அனைவரும் மக்களோடு மக்களாக இருங்கள் என்பதுதான்.

இந்தப் பிணைப்பு தான் கழகத்தை வாழ வைக்கும், வளர வைக்கும், தமிழ்நாட்டைச் செழிக்க வைக்கும், தமிழ்நாட்டைத் தலைநிமிர வைக்கும். தமிழ்நாட்டை தலைநிமிர வைத்துக் கொண்டு இருக்கிறோம்.

பத்தாண்டுகளாக பாதாளத்தில் கிடந்த தமிழகத்தை பத்து மாதத்தில் தலைநிமிர வைத்துள்ளோம் என்பதை இந்த மறைமலை நகரில் நின்று தலைநிமிர்ந்து நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

* நாம் ஆட்சிக்கு வரும் போது கொரோனா என்ற பெருந்தொற்றுக் காலம். அனைத்து வாழ்வாதாரமும் இழந்து மக்கள் நின்ற சூழலில் - மிகுந்த நெருக்கடி மிகுந்த நேரத்தில் நாம் ஆட்சிக்கு வந்தோம்.

இன்றைய தினம் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்கள் அனைவரும் இயல்புவாழ்க்கைக்கு திரும்பி இருக்கிறார்கள் அல்லவா? இதுதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் மகத்தான சாதனை.

*அதிலிருந்து மீண்ட நிலையில் மழை - வெள்ளம் என்ற இயற்கை பேரிடர் சூழ்ந்தது. அதற்கான நிவாரணப் பணிகளையும் மின்னல் வேகத்தில் செய்து கொடுத்தோம்.

* தடுப்பூசி செலுத்துவதை மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாற்றினோம்.

* மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி

* கொரோனா கால நிவாரணமாக 4000 ரூபாய்

* கொரோனா கால நிவாரணமாக 13 மளிகைப் பொருள்கள்

* பொங்கல் பரிசாக 22 பொருள்கள்

* ஆவின் பால்விலை லிட்டருக்கு 3 குறைப்பு

*பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு

*இலங்கைத் தமிழர்க்கு 317 கோடியிலான திட்டங்கள்

* பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாளாக கொண்டாட்டம்

* அயோத்திதாச பண்டிதருக்கு நினைவு மணி மண்டபம்.

* விழுப்புரத்தில் சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம்

* நெசவாளர் கோரிக்கையை ஏற்று பஞ்சுக்கு ஒரு விழுக்காடு வரி ரத்து

* அரசு பணியாளர்க்கு அகவிலைப்படி உயர்வு

* தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் உருவாக்கம்.

* கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக்கடன்கள் 14 லட்சம் பேருக்கு ரத்து

* மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் ரத்து

* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்கள்

* கொரோனாவால் “இடை நின்ற குழந்தைகள்” பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது.

அந்த கவலையைப் போக்க வந்ததுதான் 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டம்.

* மருத்துவ சேவையை மக்களின் இல்லத்திற்கே கொண்டு சேர்க்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்.

* சாலை விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படும் விலை மதிப்பற்ற உயிர்களை காக்க - இன்னியிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 என்ற உன்னத திட்டம்.

* காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி தொகுப்பு 61 கோடிக்கு வழங்கியதாலும்- விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தார்கள்.

* மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் விடுவித்து- கால்வாய்களை முன்கூட்டியே தூர் வாரியதால் 4.9 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்து வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.

* சட்டம் ஒழுங்கை பேணுவதிலும் - குற்றங்களைத் தடுப்பதிலும் இரும்புக் கரம் கொண்டு இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

* குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்போர் வேட்டையாடப்பட்டனர்.

* குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

* பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டு வருகின்றன.

* எந்தக் குற்றவாளியும் தப்ப முடியாத அளவுக்கு செயல்பட்டு வருகிறோம்.

* இந்த பத்து மாத காலத்தில் 64 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் 133 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன் மூலமாக 2 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலைகள் கிடைக்கும்.

* தமிழ்நாடு நிதி நுட்பக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு ஏற்றுமதி ஊக்குவிப்புக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

* மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கொரோனாவில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம், வழங்கப்பட்டுள்ளது.

* உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

* இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு- 1,628.61 கோடி ரூபாய் மதிப்புள்ள 432.82 ஏக்கர் பரப்பளவு திருக்கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

- இப்படி என்னால் இன்னும் 3 மணிநேரத்துக்கு பட்டியல் போட முடியும்.இவை அனைத்தும் பத்து மாத காலத்தில் செய்து தரப்பட்டவை ஆகும்.

இதனுடைய தொடர்ச்சியாகத்தான் வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளோம்.

அந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை மட்டும் நாம் நிறைவேற்றிக் காட்டினால்

தமிழகம் தலைநிமிரும் என்பது மட்டுமல்ல - தலைசிறந்த மாநிலமாக -இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.

''தாயின் கனிவையும், ஆசிரியரின் அக்கறையையும், ஒரு வழிகாட்டியின் கூர்மையையும், ஒரு சீர்திருத்தவாதியின் மானுடப் பற்றையும் கொண்டதாக இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கையைப் பற்றி நான் சொன்னேன்.

ஒரு தாய்க்குத்தான் தனது பிள்ளைக்கு என்னவெல்லாம் வேண்டும் என்று தெரியும்.

தன்னிடம் படிக்கும் பிள்ளைகள் அனைவரும் மிகச்சிறந்த உயர்வை அடைய வேண்டும் என்ற அக்கறை ஒரு ஆசிரியருக்குத் தான் இருக்கும்.

தன்னிடம் அறிவுரை கேட்டுவந்தவருக்கு தேவையான மிகச்சிறந்த அறிவுரையை தனது கூர்மையான அறிவுடன் அந்த வழிகாட்டி செய்து கொடுப்பார்.

ஒரு சீர்திருத்தவாதி தான் மனித சமுதாயத்துக்கு எது தேவையோ அதை யாருக்கும் பயப்படாமல் சொல்வார். இவை நான்கு தன்மைகளும் கொண்ட அறிக்கையாக கழக அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என்று நான் சொன்னேன்.

நிதிநிலை அறிக்கை என்றால் கம்யூட்டருக்கு வரியை கூட்டுவோம் -

கடுகுக்கு வரியைக் குறைப்போம் என்பதாக இல்லாமல் இந்த ஆட்சியின் இலக்கு என்ன? எத்தகைய தமிழ்நாட்டை உருவாக்க நாம் நினைக்கிறோம் என்பதைச் சொல்வதாக அதனை அமைத்துள்ளோம்.

அந்த வகையில் பார்த்தால் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியான நிதிநிலை அறிக்கை இது.

இந்திய ஒன் ஆட்சிகாலத்தில் ஒன்பது நிதிநிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்த மரியாதைக்குரிய முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களே நம்முடைய நிதிநிலை அறிக்கையை மனப்பூர்வமாகப் பாராட்டி பேசினார்.

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் நமக்கு இந்தியாவின் பன்முகத்தன்மையை, மதச்சார்பின்மையை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் இருக்கிறது.

நம்முடைய சமூகநீதியை மற்ற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கி இருக்கிறது. நம்முடைய மாநில சுயாட்சியை மற்ற மாநிலங்களும் பேசத் தொடங்கி இருக்கிறது.

நாம் இதுவரை பேசிய மொழி உரிமையை பிறமாநிலத் தலைவர்களும் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். நம்முடைய பல்வேறு திட்டங்களை, பிறமாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தத் தொடங்கி இருக்கிறது.

தமிழக மக்களுக்கு உன்னதமான நல்லாட்சியைக் கொடுத்துவரும் நாம் - நம்முடைய திராவிடவியல் தத்துவத்தை இந்தியா முழுமைக்கும் விதைக்கும் கடமையையும் நாம் செய்வோம்.

அனைவருக்கும் கல்வியைக் கொடுப்போம். பள்ளிக் கல்வி மட்டுமல்ல, கல்லூரிக் கல்வி மட்டுமல்ல, உயர்கல்வியும் கொடுப்போம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும்!

* அனைவர்க்கும் வேலை கொடுப்போம். ஏதோ ஒரு வேலை அல்ல, அவர்களது தகுதிக்கு ஏற்ற வேலையைக் கொடுப்போம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும்.

* அனைவர்க்கும் உரிய மருத்துவ வசதியை அளிப்போம். அவர்கள் அந்த மருத்துவ வசதியைத் தேடி வர வேண்டியது இல்லை. அவர்கள் இருக்கும் இடத்துக்கே வந்து கொடுப்போம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும்.

பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட - பட்டியலின - பழங்குடியின - இருளர் மற்றும் நரிக்குறவர் போன்ற விளிம்பு நிலை மக்களுக்குமான ஆட்சியை நடத்துவோம். அதுவும் சமூகநீதி ஆட்சியை நடத்துவோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும்.

* குறிப்பிட்ட துறைகள் மட்டுமல்ல, அனைத்துத் துறைகளும் சிறப்பாகச் செயல்படுவதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும்.

* நகரங்களை மட்டுமல்ல, கிராமங்களையும் முன்னேற்றுவது தான் திராவிட மாடல் ஆட்சியாகும்.

* குறிப்பிட்ட மாவட்டம் மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களும் வளர்வது தான் திராவிட மாடல் ஆட்சியாகும்.

* எல்லார்க்கும் எல்லாம் கிடைப்பது - கிடைக்க வைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும்.

வெற்றி நம் கண்ணை மறைத்ததும் இல்லை; தோல்வி நம்மை சோர்வடையச் செய்ததும் இல்லை. நாம் எப்போதும் மக்களோடு மக்களாக இருக்கிறோம். மக்களுக்காகவே இருக்கிறோம். அதனால்தான் மக்கள் நம்மோடு இருக்கிறார்கள்! எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கக்கூடாது என நினைப்பவர்கள்தான் இன்று நம்மை எதிர்க்கிறார்கள்.

ஆதிக்க வெறியில் கட்டிய பொய் மூட்டைகளை எங்களிடம் உருட்ட வேண்டாம். காலங்காலமாக உங்களின் பொய்களை உடைத்தெறிந்த இயக்கம் திராவிட இயக்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்!” என உரையாற்றினார்.

Also Read: “எல்லாத்திலும் மேல் என்ட பேரு ஸ்டாலின்” : கேரளாவில் மலையாளத்தில் பேசி அசத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!